பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xxvi / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

எண்ணங்களும் முதன்மை பெறுவதால் இப்பெரியாரின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சுருக்கமாக இங்கு கூறுவது அவரை ஓரளவு அறிந்து கொள்ளப்பயனாக இருக்குமென்று நம்புகிறேன்.

ஓர் அந்தணர்

ஒருவருடைய வரலாறு பிறந்து வளர்ந்து வாழ்ந்து விடுவதோடு முடிந்து விடுவதில்லை. அவரது நேர்மையான சிந்தனையும் செயலும் சாதனையுமே அவருக்கு ஒரு வரலாற்றைப் படைப்பனவாகும். சாதனை படைத்தவரெல்லாம் சரித்திர நாயகர்களாகி விடுவதில்லை. ஒருகாலத்தில் மக்கள் மனதில் நின்றவர்கள் கூட மற்றொரு காலத்தில் நில்லாமல் போனதும் உண்டு; கால வெள்ளத்தால் மறைக்கப்பட்டு பிறகு மக்கள் நினைவுக்கு வரும் சிந்தனையாளர்களும் உண்டு - அத்தகையவர்களில் ஒருவர்தான் பண்டிதர் க. அயோத்திதாசர்.

நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, உவப்பான எழுத்து, பாராட்டத்தக்க உழைப்பு என்ற ஐந்தும் ஒரு சேரப் பெற்ற அயோத்திதாசர் மறக்கப்பட்டது வியப்புக்குரியதல்ல. நான் உயர்ந்தவன், என் சமுதாயம் உயர்ந்தது, எம்மவர் கூறுவதுதான் அறிவும் அறமுமாக ஏற்கத்தக்கது, எதிர்க்கக் கூடாதது என்று எண்ணிய கூட்டம் எடுத்துக் கொண்ட மேலாண்மையால் - சிதறடிக்கப்பட்டுவிட்ட கூட்டத்தில் பிறந்துவிட்ட, சிந்தனையாளன் மறுக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் காலத்தின் குற்றமே எனலாம். காக்கைக் கூட்டத்துள் ஒரு புறா வர நேர்ந்தால் ஒன்று கொத்தப்படும் அல்லது கொல்லப்பட்டுவிடும். அதுபோல் அறியாமையில் வாழ்வோரிடையே தோன்ற நேர்ந்த ஒரு அறிவாளியின் நிலையும் அப்படிப்பட்டதுதான். அயோத்திதாசரும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை.

இந்நிலை ஆதிதிராவிட தமிழ்ப் பழங்குடிகளின் பலவீனத்தால் வந்ததல்ல - மாறாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்கள் முடமாக்கப் பட்டதின் விளைவால் வந்த வினையாகும்.

அயோத்திதாசர் எங்கே பிறந்தார் எத்தனை பேர்களோடு பிறந்தார் என்பதிலும் - அவரது வயது, வளர்ச்சி, வாழ்வு போன்றவைகளிலும் முரண்பாடுகள் உண்டு; இதில் உண்மையை அறிந்துஏற்பது நல்லோர் கடமையாகும். பிறப்பு, சுற்றம், சூழல் அனைத்தும் வரலாற்றுக்குத் தேவைப்பட்டதுதான் என்றாலும் அதுவே வரலாறாகிவிடாது. பிறந்தார் வளர்ந்தார் இறந்தார் என்பவைகளிடையே என்ன செய்தார் என்பதுதான் முக்கியமானதாகும்.

அயோத்திதாசருடைய கொள்கை சீரியதும் சிறந்ததுமாகும். அவர் மக்கள் நல்லவர்களாக வாழ வேண்டும் என்று எண்ணினார். நாடு நலிவடையாமல் முன்னேற வேண்டும் என்றும் நினைத்தார். அதுவே அவரை மக்களைப்பற்றியும் மக்களின் சீரான வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்கத் தூண்டியது. தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு மக்களை விழிப்படையச் செய்யும் தொண்டுப் பணியில் இறங்கினார்.

அவர் பிணக்குடன் ஒரு சமுதாயத்திலிருந்து மற்றொரு சமூகத்தைத் தாக்கவில்லை அல்லது ஒரு அமைப்பிலிருந்து கொண்டு மற்றொரு இயக்கத்திற்கு மாறி தன் தொண்டைத் தொடங்கவில்லை. அல்லது ஒரு தனி மனிதர் மீதோ, அமைப்பின் மீதோ சலிப்பும் வெறுப்புமடைந்து தன்னார்வத்தை வெளியிட வந்தவருமல்லர். (அயோத்திதாசருக்கும் இரட்டை மலை சீனிவாசனாருக்கும் பகைமை இருந்ததாகக் கூறுவார்கள். குடும்பத்தில் உறவும் கொள்கையில் மாற்றமும் இருந்தது உண்மை. அது பகைமையல்ல. அன்றைய பல பேரிடத்தில் அயோத்திதாசரின் கொள்கை ஒத்துப் போகவில்லை. அவருக்கும் அருட்கவி கங்காதர நாவலருக்கும், அத்துவைதானந்த சுவாமிகள், ஒம்பிரகாச சுவாமிகள், புனிதர் ஜான் ரத்தினம், வேலாயுதம் புலவர் போன்றோர் கொள்கையால் மாறுபட்டவர்கள். எல்லோருமே பழந்தமிழர், தமிழறிந்த பன்னூல் ஆசிரியர்கள்தான் - சமயக் கொள்கையால் அவர்கள் எல்லோருமே