பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/276

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
228 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

சாதிபேதமுள்ளோருடன் சாதிபேதமற்றவர்களையுஞ் சேர்த்து கல்விவிருத்தி செய்து சீர்படுத்தியவர்கள் யார். ஆங்கிலதுரைமக்களேயாம்.

பலவகை இடுக்கங்களிலுங் கல்வியைக் கற்று ஓர் உத்தியோகத்தை நாடிப்போவதாயின் இவன் தாழ்ந்த சாதியான் கிட்டவரப்படாது கூட உழ்க்காரப்படாதென கெடுத்து சீரழித்தவர்கள் யார், சாதிபேதமுள்ளவர்களேயாம்.

சாதிவேற்றுமெ யுள்ளோர் பலவகையிடுக்கங்களுக்கும் அஞ்சாது இவர்கள் வாசித்துள்ள கல்விக்குத் தக்கவாறு உத்தியோகங்களளித்து சத்துருக்களின் முன்பு சீருஞ்சிறப்பும் அடையச் செய்தவர்கள் யார், ஆங்கிலேய துரைமக்களேயாம்.

நாட்டுப்புறங்களில் நல்ல தண்ணீரை மொண்டு குடிக்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலும், சுகமானயிருப்பிட கட்டிடங்களில் தங்கவிடாமலும், தங்கள் சொந்த பூமிகளை சரிவரப் பயிரிட்டு உண்ணவிடாமலும், தங்களிடந்தொழில் புரியினும் அரைவயிற்றுக் கஞ்சிக்கு மேல் அதிகங் கொடாமலும் கொல்லாமற் கொன்று வதைக்காமல் வதைத்து கோலையுங் குடுவையையுங் கொடுத்து குண்டிக்குத் துணியற்று கோமணம் கட்டவைத்து எலும்புந்தோலுமாய் ஏங்க மடியவைத்தவர்கள் யார், சாதிபேத முள்ளவர்களேயாம். கல்வியைக் கற்று கனமான உத்தியோகங்களைப் பெறவும், சுத்தசலங்களில் மூழ்கிக் குளிக்கவும், அம்பட்டர்கள் சவரஞ் செய்யவும், வண்ணார்கள் வஸ்திரமெடுக்கவும், சுத்த வாடைகளை அணைந்து நாகரீகத்தில் நிற்கவும், வீடு வாசல் பூமியென்று குடித்தனம் நிலைக்கவும், தேசம் பூரித்து சுகநிலை பெறவும், வெள்ளி பாத்திரம் செம்பு பாத்திரம் வெண்கலபாத்திர முதலியதை ஆளவும், அறுசுவை உண்டியை ஆனந்தமாக புசித்து மேடை, மாளிகைகளில் உலாவவும், ககசீரளித்து ஆதரித்தவர்களும், ஆதரித்துவருபவர்களும் யார், ஆங்கில துரைமக்களேயாம்.

பொதுவாகிய பிரிட்டிஷ் ஆட்சியில் சுகம்பெற விடாமல் தடுத்து சீர்கெடுத்துவந்த சாதிபேதமுள்ளோர் தங்களுடைய சுய ஆட்சியிலிருக்குங்கால் இன்னும் என்னென்ன சீர்கேடுசெய்து நசித்திருப்பார்களென்பதை எண்ணித்துணியுங்கள்.

சாதியிலுந் தாழ்ந்தோர், சமயத்திலுந் தாழ்ந்தோர், தொழிலிலுந் தாழ்ந்தோர், பெயரிலுந் தாழ்ந்தோர்களென வகுத்து தலையெடுக்கவிடாமல் நசித்து வந்ததுமன்றி நூதனமாக இத்தேசத்திற் குடியேறியவர்களுக்குங் கற்பித்து அவர்களையும் இழிவுகூறச் செய்துவந்த அடாத சத்துருக்களிற் சிலர் தோன்றி கூட்டங்கள் கூடி (டிப்பிரஸ்) கிளாசாம் தாழ்ந்த வகுப்போரை முன்னுக்குக் கொண்டுவருவதாக வெளிவந்திருப்பது விந்தையிலும் விந்தையே.

ஆடுகள் நனைகிறதென்று புலிகள் புரண்டழுவது போலும், கோழிக்குஞ்சுகளுக்கு இரையில்லையென்று பருந்து பரிதவிப்பது போலும், சாதிபேதம் வைத்துள்ளோர் தங்களால் தாழ்த்தி சீர்கெட்டச் செய்திருக்கும் சாதிபேதமற்றோரை சீர்பெறச் செய்யப்போகிறோமென்று வெளிதோன்றியது சுயப்பிரயோசன சுதேசிய வழிமுறைகளென்றே தெரிந்துக்கொண்டு சத்துருக்களின் மித்திரபேதங்களை நம்பாது சகலசாதியோர்களைப் போல் நீங்களும் சிறப்படைய வழிதேடுங்கள்.

தாழ்ந்த வகுப்போரை உயர்த்தப்போகிரோமென்பது நல்லெண்ணமும், யதார்த்தமுமாயிருக்குமாயின் தற்கால கவுன்சல் நியமனத்தில் (டிப்பிரஸ்) கிளாசில் ஒருவரை தெரிந்தெடுத்து இராஜாங்கத்தோருக்குத் தெரிவித்து நியமிப்பதன்றோ உயர்த்துவதற்கு அறிகுறியாகும்.

காலமெல்லாந் தாழ்த்தி கடைத்தேறவிடாமற் செய்தவர்களும், செய்துவருகிறவர்களுமானோர்களிற் சிலர்தோன்றி ஏழைகளை சுகம்பெறச் செய்யப்போகின்றோமென்பாராயின் சாதிநாற்றத்தைக் கழுவினார்களா?