பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/300

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
252 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

விட்டுவிடுவார்கள். ஆண்டவன்தான் எல்லாம் பார்த்துக்கொள்ளுவாரென்று தூரமும் போய்விடுவார்களென்று இவர்கள் சோம்பலை உணர்ந்த ஆண்டவனும் தூரவிலகிநிற்க, முயற்சியில்லாது எடுத்த வித்தைகளும் பாழாகி நாளுக்குநாள் தேசமும் சீர்கெட்டேவருகின்றது. இத்தகைய நூதன மதக்கடை வியாபாரிகளால் இந்துதேசங் கெட்டழிந்துவிடுவதன்றி நூதன சாதிபேதக் கட்டுக்களாலும் அழிந்து சீர்கெட்டு வருகின்றது.

எவ்வகையிலென்னில் பெரியசாதியென்னும் ஓர்பெயரை வைத்துக் கொண்டு அவன் பொய்யனாயிருந்தாலும் பெரியசாதி, திருடனாயிருந்தாலும் பெரியசாதி, குடியனாயிருந்தாலும் பெரியசாதி, விபச்சாரியாயிருந்தாலும் பெரியசாதி, கொலைஞனாயிருந்தாலும் பெரியசாதி, அவன் பஞ்சமாபாதகம் நிறைந்திருந்தாலும் பெரியசாதி பெரியசாதியே என்பர்.

சிறியசாதியென்னும் ஓர் பெயரை வகுத்துவிட்டு பொய்சொல்லா மெய்யனாயிருப்பினும் அவன் சிறிய சாதி, களவு செய்யா யோக்கியனாயிருப்பினும் அவன் சிறியசாதி, கொலை செய்யா சீவகாருண்ணியனாயிருப்பினும் அவன் சிறிய சாதி, கள்ளருந்தா நிதானபுருஷனாயிருப்பினும் அவன் சிறியசாதி, விபசாரமற்ற உத்தமபுருஷனாயிருப்பினும் சிறியசாதி, பஞ்சசீலம் நிறைந்த தேவநிலை வாய்த்தோனாயிருப்பினும் சிறியசாதி, வித்தியாவிருத்தி விவேகவிருத்தி பெற்றவனாயினும் சிறியசாதி, சிறியசாதியென்றே கூறி தாழ்த்தி வரும் பொறாமெய்ச்செயலினால் வித்தியாபுருஷர்களும், விவேகமிகுத்தோர்களும் பெரியசாதியென்னும் பொய்யர்களால் நசிந்து நாளுக்குநாள் சீர்குலைந்து போகின்றபடியால் இந்துதேசமும், சீர்கெட்டு நாளுக்குநாள் சிறப்பழிந்து வருகின்றது.

இதற்குப் பகரமாய் புத்தரது தன்மம் இந்துதேச முழுவதும் நிறைந்திருந்த காலத்தில் வித்தியாவிருத்தியும் கைத்தொழில் விருத்தியும் சிறப்புற்றிருந்ததுபோல் தற்காலம் மதக்கடைபரப்பி சீவிப்போர்காலத்தில் உண்டாவென்பதை உய்ந்துணர்வாராயின் ஒவ்வோர் சீர்கேடும் பரக்க விளங்கும். ஆதலின் இந்துதேச சீர்கேட்டிற்கு மதங்களும் சாதிகளுமே காரணமென்று கூறியுள்ளோம்.

- 3:46; ஏப்ரல் 27, 1910 -


131. பறைச்சேரிகளிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் வைக்கும்படி பெரியசாதி என்றழைத்துக்கொள்ளுவோருக்கு விண்ணப்பம் வந்திருக்கின்றதாமே

அந்தோ! ஆட்டுமந்தைகள் புலிகளை அடைக்கலம் புகுந்ததுபோல் 1910ளு ஏப்ரல் மீ 18உ வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகை 5-வது பக்கம் முதற்கலம் 52-ம் வரியில் “தாழ்ந்த வகுப்பாரை ஈடேற்றுஞ் சங்கம் சென்னைக்கிளை” என முகப்பிட்டு அதனுள் இச்சங்கத்தோருக்கு பள்ளிக்கூடங்கள் வைத்துக்கொடுக்கும்படி பறைச்சேரியிலுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வந்துக்கொண்டிருப்பதாக வரைந்து அவைகளுக்காய்ப் பொருளுதவி வேண்டுமென்று குறிப்பிட்டுள்ள விந்தையான சங்கதியைக் கண்டு மிக்க வியப்படைந்தோம்.

அதாவது தாய்தந்தையரினும் மிக்க அன்பு பாராட்டி ஏழைகளின் வீட்டுக்குள் நுழைந்து பாடங்கள் கற்பித்துவருவதுடன் கலாசாலைகளும் வகுத்து அன்னமும் ஊட்டி ஆதரித்துவரும் மிஷநெரி துரைமக்களுக்கும், லேடிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பி பள்ளிக்கூடம் வேண்டுமென்று கேழ்க்காதவர்கள் சுத்தசலத்தை கொண்டு குடிக்கவிடாதவர்களும், அம்மட்டர்களை சவரஞ்செய்ய விடாதவர்களும், வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாதவர்களும் நன்கு உண்டு உடுத்தி உலாவக் கண்டு பொறுக்காதவர்களுமானோர் சில கூட்டங்கள் கூடியிருப்பதும் தாழ்த்தப்பட்ட சாதியோரை ஈடேற்றுவதுமாகத் தோன்றியுள்ளார்பால் பறைச்சேரியிலுள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ளாரென்பது விந்தையிலும் விந்தையேயாம்.