பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/303

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 255
 

வீணெண்ணமும் வீண் செயலுங்கொண்டு கானகஞ்சேர்ந்து மீன், பன்றி, கோழி இறச்சிகளைப் புதுச்சட்டிகளிற் புரட்டி எதேஷ்டமாகப் புசித்து சுகித்துவருகின்றவர்கள், அதன் சுகத்தை மேலுமேலும் கருதி கானகத்தில் வந்து இன்னும் இரண்டு நாள் தங்கி புசித்து சுகிப்பதற்கு ஓர் சத்திரமுங் கட்டிக் கொள்ளுவது நலமென்றெண்ணி தாங்கள் கெட்டு சோம்பலடைந்திருப்பதுடன் ஏனையோர் பணங்களையும் செலவிடச்செய்து அவர்களையும் சோம்பேரிகளாய் அல்லலடைய விட்டுவிடுகின்றார்கள்.

“தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் விடாதென்னும்” பழமொழிக்கு இணங்க விருத்தி எண்ணங்களாம் தானியவிருத்தி, விருட்ச விருத்தி, வித்தியா விருத்தி, வியாபார விருத்திகளை மறந்து சகலரும் படிக்கவேண்டும். அந்த படிப்போ இராஜாங்க உத்தியோகப் படிப்பாய் இருத்தல் வேண்டும். அப்படிப்பில் தேர்ந்து இராஜாங்கத் தொழில் செய்ய ஆராம்பிப்போர் இராஜாங்கத்தையே பெற்றுக்கொள்ளவேண்டுமென்னும் வீணெண்ணங் கொண்டு கல்வியையும் இராஜாங்க உத்தியோகத்தையும் கட்டோடு அழிக்க வழிதேடிவிட்டார்கள்.

பூர்வ வித்தியாவிருத்திகள் அழிந்ததுமன்றி தற்காலம் கருணைதங்கிய ராஜாங்கத்தோரால் கொடுத்துவந்த கல்வியும் அழிந்து உத்தியோகங்களையும் இழந்து விடுவதாயின் தேசமும் தேசத்தோரும் யாது சிறப்பைப் பெறுவரென்பதை தேசத்தோரே நோக்க வேண்டியதேயாம்.

பூமிவிருத்திச் செய்வோர் அதன் விருத்தி சிந்தையைவிடுத்து தன் பிள்ளை பி.ஏ. செய்யவேண்டுமென்று விடுப்பதும், வியாபார விருத்தி செய்வோர் அதன் விருத்தியை மறந்து தன் பிள்ளை பி.எல். படிக்கவேண்டுமென்றும், வித்தியாவிருத்தி செய்வோர் விருத்திகளைக் கருதாது தன்பிள்ளை எம்.ஏ. செய்யவேண்டுமென்றும், நடாத்திவரும் வீணெண்ணச் செயலால் சகல விருத்திகளுங்கெட்டு சஞ்சலத்திற்குள்ளாக்கிவருகின்றது.

மதக்கடைபரப்பி சீவிப்போர் மாறுபாட்டினால் மயங்கிக் கெடுவோர் நீங்கலாக இராஜாங்கத்தையே அபகரிக்க வீணெண்ணங் கொண்டோர் செயலால் சிறுவர்கள் கல்விக்கும் கல்விகற்றோர் உத்தியோகத்திற்கும் அழிவு வந்திருக்கின்றது. இத்தியாதி அழிவுகளுக்கும் காரணம் விருத்தி எண்ணங்களற்று வீணெண்ணங்கொள்ளுவதேயாம்.

விருத்தி எண்ணங்கள் யாதெனில் பி.ஏ. செய்து பெருவுத்தியோகம் அமர்ந்து பெண்சாதிபிள்ளைகளை மட்டுங் காப்பதினும் பலரைக் காக்கும் பூமிவிருத்தியாம் அறிவைப் பரவச்செய்து தானியங்களைப் பெருகச் செய்வதேயாம்.

பி.எல். செய்து வல்லடிவழக்கிற்கு வாதிட்டு பணம் சம்பாதித்துத் தன் பெண் பிள்ளைகளை மட்டிலுங் காப்பாற்றுவதுடன் வித்தியா விருத்தியில் வாதிட்டு சூஸ்திரங்களைக் கண்டுபிடித்து கைத்தொழிற் பயிற்சியை விருத்திசெய்வரேல் சகல சூஸ்த்திரர்களும் பிழைப்பதுடன் ஏழைகளும் சுகம்பெறுவார்கள்.

எம்.ஏ வரையிலும் கஷ்டத்துடன் படித்து உபாத்தியாயர் உத்தியோகம் அமர்ந்து தன் பெண்டு பிள்ளைகளை மட்டிலும் போஷிப்பதிலும் சிறுவர்களுக்குக் கலை நூற்களைக் கொண்டு வித்தியா விருத்திகளைப் போதிப்பரேல் சிறுவர்கள் அறிவுவிருத்திப் பெற்று சுகச்சீரடைவார்கள்.

வித்துவான் வித்துவானென்று விருதா பாடற்பாடி வீணெண்ணங் கொண்டு அலைவதினும் வெற்றிலைக்கடை வைத்துப் பிழைப்பது விசேஷ பலனைத்தரும்.

ஆதலின் “தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி யென்னசெய்வான்” என்னும் பழமொழிக்கிணங்க நாம் விருத்தி எண்ணங்களை விடுத்து வீணெண்ணங்களில் அலைவது விருதாவாதலின் இனியேனும் அத்தகைய எண்ணங்களிற் பழகாது ஐரோப்பியர் எண்ணங்களுடனும், அமேரிக்க எண்ணங்களுடனும், ஐப்பானியர் எண்ணங்களுடனும் பழகுவதாயின் சகல சுகவழிகளுமுண்டாம்.

- 3:47; மே 4, 1910 -