பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/324

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
276 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


சாதித்தலைவர்களாயுள்ளவர்கள் நீதி வழுவாது தங்கள் உத்தியோகங்களை நடத்தி வந்த போதிலும் பழய சாதியாசார பயத்தால் ஏழைக்குடிகள் தங்கள் சுதந்திரங்களைக் கேழ்க்கவும் நியாய வந்நியாய விஷயங்களை யெடுத்துக் காட்டவுமியலாதவர்களாய் ஒடுங்கி முன்னேறும் வழியின்றி தவிக்கின்றார்கள்.

தன்சாதி புறசாதி என்னும் பேதமற்றதும் தன்னவ ரன்னியரென்னும் பட்சபாதமற்றதுமாகிய பிரிட்டிஷ் ஆட்சியில் அத்தகைய நிலைவாய்த்த உத்தியோகஸ்தர்களே போலீசிலமர்ந்து காரியாதிகளை நடத்தி வருவார்களாயின் பிரிட்டிஷ் ஆட்சியின் நீதிப்பிரகாசம் மேலுமேலும் ஒளிவுபெறும். அங்ஙனமின்றிசாதிபேதமற்ற ஆட்சியில் சாதிபேதமுள்ளவர்களைப் போலீசு காரியக்கர்த்தர்களாக நியமிப்பதினால் பொதுவாகிய சீர்திருத்தங்களுக்கு ஏதுவின்றி மாறுதலடைந்துக்கொண்டே வருகின்றது. இதுவிஷயங்களைக் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியார் கண்ணோக்கம் வைத்து சாதிபேதமுள்ளோர்கள் நாளுக்குநாள் முன்னேறும் வகைகளையும், சாதிபேதம் இல்லார்கள் நாளுக்குநாள் பின்னடையும் வகைகளையும் ஆராய்ந்து இருவர்களையும் சமமாய சுகச்சீர்பெறச்செய்வார்களென்று நம்புகிறோம்.

- 4:11; ஆகஸ்டு 24, 1910 -


151. தலையாறியும் அவன் தொழிலும்

நாடுகளென்பது நஞ்சை தானியம் புஞ்சை தானியம் இரண்டும் விளையக்கூடிய பூமியின் பெயராம். அத்தகைய பூமியின் விளைவுகளைப் பாதுகாத்தலும், ஏரி முதலிய ஜலவசதிகளைப் பார்வையிடவும், எவ்வகை தானியங்களை எந்தெந்தப் பண்டியில் சேர்க்க வேண்டியதோ அதனிற் சேர்க்கவும், மற்றும் அதைக் கார்க்கவும், ஒருவரிடமிருந்து மற்றோருக்களிக்க வேண்டிய தானியங்களைக் கொண்டுபோய்க்கொடுக்கவும், உள்ளவர்களே நாடுகளின் காவற்காரர்களாகும். அக்காவற்காரர்களுக்கு அறுக்குந் தானியங்களில் முதலறிக்கட்டாகும் தலையறிக்கட்டு தானியத்திற்கு உரியவர்கள் நாட்டுக் காவற்காரர்களே ஆதலின் அவர்களைத் தலையாறிகள் என்னும் அறுப்புக்கட்டுக் காரியப்பெயரால் அழைத்து வருகின்றார்கள்.

தற்காலத் தலையாரிகளாகவும், காவற் காரர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் சாதிபேதமற்ற திராவிடர்களேயாவர். அத்தகைய சாதிபேதமற்ற திராவிடத் தலையாறிகள் நாடுகளுக்குக் காவற்காராய் இருப்பதில் மிக்க ஜாக்கிரதையாகவும் அந்தந்த வேளாள முதலாளிகளின் தானியங்களுக்கு சேதம் வராமலும் மிக்க நாணயமாகத் தங்கட் காவலைக் கார்த்துவருவதுடன் இராஜாங்கத்தோர் ஏவற்றொழிலுக்கும் மிக்க ஜாக்கிரதையுடையவர்களாய்த் தங்கடங்கள் காவல்களை நிறைவேற்றி வருகின்றார்கள்.

இத்தகையக் காவற்காரர்களின் செயல் யாவும் அந்தந்த குடித்ததனக்காரர்களுக்கும் இராஜாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் நன்கு விளங்கியதேயாகும். இத்தலையாறிகளுக்குப் பெரும்பாலுங் கல்வியே கிடையாது. அவ்வகைக் கல்வியற்றிருந்தும் தங்கட் பாதுகாப்புத் தொழிலிலும், ஆயிரம் ஐன்னூறென்னுந் தொகைகளை பயபக்தியுடன்கார்த்து அதிகாரிகளிடம் கொண்டுபோய் செலுத்துவதிலும் மிக்க நாணயமாகவும் ஜாக்கிரதையாகவுமே செய்துவருகின்றார்கள். அதே தலையாறிகளாம் சாதிபேதமற்ற திராவிடர்கள் நகரமாகும் இராஜதானியிற் சேர்ந்து தங்கள் சம்பாத்தியத்திற்குத் தக்கக் கல்வி கற்றுள்ளவர்கள் வேண்டிய வரையிலிருக்கின்றார்கள்.

இவர்களை நகரக் காவற்காரர் என்னும் போலீசு உத்தியோகத்திற் சேர்த்து சீர்திருத்துவதாயின் இராஜாங்கத்தோர் சட்டதிட்டங்களுக்கடங்கி தங்கள் காவல் தொழிலை மிக்கக் கண்ணோக்கமுடன் நடத்துவதுடன் குடிகளையும் மிக்க அன்புடன் பாதுகாத்துவருவார்கள். கல்வியில்லாது நாடுகளைக் காப்பவர்கள் கல்விகற்று நகரத்தைக் கார்ப்பது மிக்க எளிதேயாம். வஞ்சகர்களாங் கள்ளர் கூட்டத்திற்கும், சோம்பேறிகளாம் போக்கிரிகளுக்கும் இவர்கள் அஞ்சமாட்டார்கள். மிக்கத் துணிகரமாய்ச் சென்றுப் பிடித்து