பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
278 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

முயற்சியால் சென்றவிடமெல்லாம் சிறப்புற்று அத்தேசத்தோரையும் தேசத்தையும் சிறப்புப்பெறச் செய்துவருகின்றார்கள்.

நமது தேசத்தோர் இத்தகைய வித்தியாவிருத்திசாலைகளிலும், வித்தியாவிருத்தியிலும் தங்கள் விவேகத்தைப் பெருக்காமல் பெரியசாதி, பெரியசாதி யெனப் பொய்யைச்சொல்லிக்கொண்டு எந்த வித்தையில் பெரியசாதி, எவ்விருத்தி போதனையிற் பெரியசாதி, எத்தகைய சீர்திருத்தத்தில் பெரியசாதி, எவ்வகை அறிவு விருத்தி போதனையிற் பெரியசாதி, எவ்வகை நியாயபோதத்திற் பெரியசாதியென்னும் ஆதாரமுமற்று சிறப்புமற்று பஞ்சபாதகர்களாகும் பொய்யரெல்லாம் பெரியசாதி, குடியரெல்லாம் பெரியசாதி, கள்ளரெல்லாம் பெரியசாதி, விபச்சாரர்களெல்லாம் பெரியசாதி, கொலைஞரெல்லாம் பெரியசாதியென்னும் பட்டப்பெயர்களை வகுத்துக்கொண்டு பெரியசாதிகளென்னும் பெயரைப் பொருந்தும் பெரிய சாதனங்கள் ஏதொன்றுமின்றி வாசஞ்செய்வோர் வேஷவிருத்திசாலைகளும் அதனதன் விருத்திகேடும் யாதெனில்:-

சைவசமய திருப்பணி விருத்திசாலை, மனுஷ சகாயமற்ற வேலுமயிலுந்துணை விருத்திசாலை, பேயாழ்வார் விருத்திசாலை, பெரியாழ்வார் விருத்தி சாலை, எல்லாப் பொருட்களு மித்தையென்று கூறி அவரவர்கள் பொருட்களைப் பரிக்கும் வேதாந்த விருத்திசாலை, எல்லாம் பிரமமயமென்றுகூறி அன்னியதாரத்தைப் பெண்டாளும் அத்துவித விருத்திசாலை, மற்றுஞ் சாலைகளை வகுத்துக்கொண்டு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு கடலை சுண்டலும் காடைவிளக்குமிட்டு நித்திரையுங்கெட்டு, நாளுக்குநாள் புசிப்பும் அடையாமற் பட்டு தன்னை அடுத்தவர்களையும் நடுத்தெருவில் விட்டு நாளுக்குநாள் தங்களுக்குத் தாங்களே அழிந்துபோகும் வேஷச்சாதனைகளை விருத்திசெய்துக்கொண்டு பொய்ப் போதகங்களைப் புலன் கெடக் கூறிவருகின்றபடியால் விவேகமிகுத்தோர் வைத்தாளும் வித்தியா விருத்திசாலைகளும், வித்தியா போதகர்களுமாகிய ஆங்கிலேயர்களைப் போல் சகல வித்தியாவிருத்தியும், சகல சுகவிருத்தியும் பெறாமற் பாழடைந்து தெய்வத்தாலாகும் தெய்வத்தாலாகுமென்னுங் கடைச் சோம்பேறிகளாய் வேஷச்சாலைகளை வகுத்து ஆசைச்சாமிகளையாக்கி வீண்செலவும், வீண்கூத்து ஆடிவரும் வரையில் தேசத்தோர் சீர்பெறப்போகிறதுமில்லை, தேசம் சிறப்படைவதுமில்லை என்பது திண்ணம் திண்ணமேயாம்.

- 4:13; செப்டம்பர் 7, 1910 -


153. தாழ்ந்தவகுப்பார் தாழ்ந்த வகுப்பாரென்று மனுகுலத்தோருள் சிலரைத் தாழ்த்திவருகின்றவர்கள் யார் உயர்ந்தவகுப்பார் உயர்ந்த வகுப்பாரென்று மனுகுலத்தோருள் சிலரை உயர்த்திவருகின்றவர்கள் யார்

இத்தேசவாசிகளேயாகும். அதாவது சத்தியதன்மமாம் புத்தர் போதனைகளை மாறுபடுத்தி தங்கள் வயிறு பிழைப்பதற்கானப் பொய் மதங்களையும், பொய்ச்சாதிகளையும் ஏற்படுத்தித் தங்கள் பொய் மதங்களுக்கும், பொய்ச்சாதிகளுக்கும் எதிரிகளாகவும் பராயர்களாகவுமிருந்து இவர்களை அடித்துத் துரத்தி இவர்களது பொய்ச்சாதிகளையும், பொய்ம்மதங்களையும் ஏனையோருக்கு விளக்கி பறைந்தோர்களைப் பறையர்களென்றும், தீயர்களென்றும், சண்டாளரென்றும் தாழ்த்திப் பலவகையாலும் நசித்துப் பாழ்படுத்திவிட்டார்கள். இத்தகைய வஞ்சகச்செயலால் தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்ந்தவகுப்பாரென்றும் தங்களுக்குத் தாங்களே உயர்த்திக்கொண்டவர்கள் உயர்ந்த வகுப்பாரென்றும் வழங்கிவருகின்றார்கள்.

இவ்வகையாகத் தாழ்ந்துள்ளவர்களை தாழ்த்தியவர்களே உயர்த்தி சீர்பெறச் செய்யவேண்டுமே அன்றி இராஜாங்கத்தோர் பொருளுதவி பெற்று சீர்படுத்தவேண்டுமென்பது வீண்புரளியேயாகும். அதாவது, ஆடுகள்