பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/332

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
284 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

அதிகார உத்தியோகத்தையும் கொடுத்து வருவதினால் ஏழைக்குடிகளின் கேடுகளுக்கு இன்னும் என்ன உதவியாகிவிடுமென்று ஆராய்ந்துக் கருணை வைப்பார்களாயின் இத்தேசத்து பூமிகளின் விவசாயக்குறைவும் கைத்தொழில்களின் விருத்திக் குறைவும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளற விளங்கும்.

ஆதலின் பூமியின் விருத்திகளையும், கைத்தொழில் விருத்திகளையும் கோறும் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் பூர்வ ஏழைக்குடிகளின்மீது கருணை பாவித்து அதிகார உத்தியோகங்களைத் தங்களை ஒத்த ஒழுக்கமும் காருண்யமும் செயலுமுள்ளவர்களுக்கே அளித்து ஆதரிப்பார்களென எதிர்பார்க்கின்றோம்.

- 4:15; செப்டம்பர் 21, 1910 -


157. செல்ப் கவர்ன்மெண்ட் அல்லது சுயராட்சியம்

சுய ராட்சியத்திற்கு உரியவர்கள் யார். செல்ப் கவர்ன்மெண்டை நடத்தப்போகின்றவர்கள் யார். இத்தேசத்தில் நூதனமாகக் குடியேறியுள்ள ஆரியர்களா அன்றேல் இத்தேசப் பூர்வக் குடிகளாகும் திராவிடர்களா. இவ்விருவர்களுள் யார் உரியவர்கள் என்பதைக் கண்டறிந்தே பேசல் வேண்டும்.

இத்தேசத்தில் நூதனமாகக் குடியேறியுள்ள ஆரியர்களின் ஒழுக்க தன்மங்களுக்கும், பூர்வக் குடிகளாயுள்ள திராவிடர்களின் ஒழுக்க தன்மங்களுக்கும் நாளதுவரையில் மாறுபட்டிருப்பதை அநுவத்திற் கண்டறியலாம். அதாவது திராவிடர்களின் சுபாசுப காரியங்களுக்கு இத்தேச சகல பாஷைக்காரர்களும் வருவார்கள். ஆரியர்கள் மட்டிலும் வரமாட்டார்கள். சாதியாசாரத்தைப் பற்றிக்கொண்ட சில திராவிடர்களின் சுபாசுபங்களுக்கு ஒருவர் இருவர் வந்தபோதினும் அரிசியையும், துட்டையும் பெற்றுக்கொண்டு அகன்றுவிடுவார்களன்றி சுபாசுபத்திற் கலக்கவே மாட்டார்கள்.

ஆரியர்களின் சுபாசுப காரியங்களுக்கு அவர்களைச் சார்ந்த ஆரியர்களே போவார்களன்றி அவர்கள் நூதனசாதியிற் சம்மதித்த திராவிடர்களாயினும் அவர்கள் நூதன சாதியிற் சம்மதப்படா திராவிடர்களாயினும் ஒருவரும் போகவுமாட்டார்கள் அவர்களழைக்கும் வழக்கமுங் கிடையாது. திராவிடர்கள் செய்யும் தானங்களோவெனில் இத்தேசத்திலுள்ள சகல பாஷைக்காரர்களுக்கும் அளிப்பது வழக்கமாகும். ஆரியர்கள் செய்யும் தானமோ வென்னில், அவர்களைச்சேர்ந்த ஆரியர்களுக்கே செய்வார்களன்றி ஏனையோர்களைத் தங்கள் நாட்டாரென்றுக் கருதி தானஞ் செய்யவே மாட்டார்கள்.

ஏனெனில் அவர்கள் இத்தேசத்திற்கு அன்னியப்பட்டவர்கள். ஆதலின் அவர்கள் தங்கள் சுயசாதியோர் விருத்தியையும் தங்கள் விருத்தியையும் கருதுவார்களன்றி இத்தேசத்தோராம் திராவிடர்களின் விருத்தியைக் கருதுவதே கிடையாது. திராவிடர்களாம் இத்தேசப் பூர்வக் குடிகளை அன்னியதேச ஆரியர்கள் வந்து செயித்து மேற்கொண்டார்களென்று சிலக் கட்டுமொழிக் கூறுகின்றார்களாம். அத்தகையக் கூற்று அவர்களது அநுபவத்திற்கே மாறாகும். எங்ஙனமெனில், ஆரியரென்போர் இத்தேசத்துள் குடியேறும்போதே பிச்சையேற்றுண்டே குடியேறியுள்ளார்கள். அதன் அநுபவம் மாறாது நாளதுவரை இரந்துண்ணுந்தொழில் அவர்களுக்குள் மாறாமலிருக்கின்றது.

இத்தேசத்தோரால் தொழில்களுக்கென்று வகுத்திருந்தப் பெயர்களையெல்லாம் சாதிகளென்று மாற்றி கல்வியற்ற பெருங்குடிகளை வசப்படுத்திக் கொண்டு வஞ்சினத்தாலும், சூதினாலும், கபடத்தினாலும், பலவகை மாறுபாடுகளினாலும் திராவிடர்களை மேற்கொண்டார்களேயன்றி யுத்தத்தினால் மேற்கொண்டார்களென்பது கனவிலும் நினைக்கக்கூடியதன்று. ஆரியர்கள் அத்தகைய யுத்தவீரர்களாய் இருப்பார்களாயின் நாளதுவரையில் ஆரியர்களைக்கண்டு திராவிடர்கள் ஓடுகின்றார்களா, திராவிடர்களைக்கண்டு