பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/340

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
292 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


163. இந்திய அரசர்களின் சூட்சி

கருணை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ராட்சியதாரஞ் செய்துவரும் அரசர்களுக்குள் பரோடா தேசத்து அரசரவர்களே மிக்கமேலாய் சூட்சியும் நீதிநெறி அமைந்த காட்சியும் பெற்றவரென விளங்குகின்றது.

காரணமோ வென்னில், உலகமெங்கும் இராது இவ்விந்து தேசத்தில் மட்டுமுள்ள மநுக்களில் பெரியசாதி சிறியசாதியென்றும், உயர்ந்த சாதி தாழ்ந்தசாதியென்றும் வகுத்துள்ளக் கட்டுக்கதைகள் யாவும் பெரும் பொய்யென்றும் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காக ஏற்படுத்திக் கொண்ட மாறுபாடுகளென்றும் கண்டறிந்துக்கொண்டதுடன் தனது ராட்சியத்திலுள்ள சகல குடிகளும் உயர்வு தாழ்வின்றி சகல சுகமும் அநுபவிக்கும்படியான யேதுக்களைச் செய்துவிட்டார்.

இத்தகைய அநுபவத்தைக் கண்டுணர்ந்த கருணை வள்ளல் கல்கத்தா கவர்னர்ஜெனரல் மிண்டோபிரபு அவர்களும் தனது ஆட்சியின் ஆலோசனை சங்கத்தில் இத்தேசத்தோர் சாதிபேதக் கோட்பாடுகளை அகற்றியே அங்காதிபர்களை நியமித்திருக்கின்றார். அதுபோலவே தென்னிந்தியாவிலும் ஆலோசனை அங்காதிபர்களை நியமித்தேலோரென்று நம்புகிறோம்.

நமது கனந்தங்கிய பரோடா மகாராஜனவர்களின் நீதிநெறி ஒழுக்கங்களை அநுசரித்து கனந்தங்கிய மைசூர் மகாராஜனவர்களும், தங்களுடைய தேசங்களை சீர்திருத்துவார்களாயின் இவர்களைக் காணும் மற்றுமுள்ள ஜமீன்தாரர்களும் தங்கள் தங்கள் தேசங்களை சீர்திருத்தி சகல குடிகளையும் சுகம்பெறச் செய்விப்பார்கள். குடிகள் எப்போது சகல சுகமும் பெற்று ஆனந்தத்திலிருக்கின்றார்களோ அத்தேச அரசனும் அதியானந்தத்தில் இருப்பாரென்பது சான்றாம்.

- 4:20; அக்டோபர் 26, 1910 -


164. கான்பஹதூர் அஸிஸுடீன்சாயப் பகதூர்

அஸிஸுடீன் சாயப் கான் பகதூர் அவர்கள் தென் கன்னடங் கலைக்ட்டராயிருந்து தற்காலம் தென் ஆற்காட்டிற்குக் கலைக்ட்டராக மாற்றிவிட்டதாகக் கேழ்விப்படுகிறோம். இவர் தென்கன்னடங் கலைக்ட்டராயிருந்து காரியாதிகளை நீதிவழுவாமல் நடத்திவந்தவிஷயத்திற்காக குடிகளும் அவர் அவ்விடம் விட்டு நீங்குவதைக்குறித்து மிக்க ஆயாசப்படுகின்றார்களாம்.

ஈதன்றி பொறாமெமிகுத்த அன்னியதேச ஆரியர்களால் தாழ்த்தசாதியோரென்றும், பஞ்சமரென்றும் பாழ்படுத்தியுள்ள ஏழைக்குடிகளின் மீது இதக்கம்வைத்து அவர்களுக்காக வேண்டியபூமிகளைக் கொடுத்து சுகம்பெறும்படியான வழிகளையுண்டுசெய்து அவர்களுக்கு உண்டாயிருந்த இடுக்கங்களையும் அகற்றி ஆதரித்துவந்தாராம்.

ஏழைகளுக்கு நேர்ந்துள்ள இடுக்கங்களை நீக்கி ரட்சித்த கனவான் அத்தேசத்தைவிட்டு நீங்கிவிடுகின்றாரென்று கேழ்விப்பட்டவுடன் அவ்விடமுள்ள ஏழைக்குடிகள் யாவரும் கண்கலக்கமுற்றதுடன், இனி சாதிபேதம் வகுத்துள்ளக் கலைக்ட்டர் யாவரேனும் இத்தேசத்திற்கு வந்துவிடுவார்களோவென்னும் பெரும் பீதி கொண்டிருப்பதாக வதந்தி. காரணமோவென்னில், தற்காலமிருந்த கலைக்ட்டரவர்கள் தன்னைப்போல் பிறரை நேசிக்க வேண்டுமென்னும் முதுமொழியைத் தாங்கி சகலரையும் பேதமின்றிக் கார்த்து ரட்சித்தக் கருணையஞ் செயலேயாம்.

இத்தகையக் கருணை நிறைந்த மகமதியக் கலைக்கட்டரவர்கள் நீடு வாழ்க்கையும், சுக நிதியமும், குடும்ப சம்பத்தும் மென்மேலும் பெற்று, தற்காலம் தான் செல்லுமிடத்திலுமுள்ள சாதிபேதமற்ற ஏழை)க்குடிகளை ரட்சித்து ஈடேற்றுவாரெலா தம்புகிறோம்.

- 4:20; அக்டோபர் 26, 1910 -