பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/348

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
300 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

துரோகிகளாகின்றார்கள். பேராசையால் துரோக சிந்தை மிகுத்தக் கூட்டத்தோர்களை சேராமலும், இராஜதுரோகப் பத்திரிகைகளைக் கண்களிற்பாராமலிருப்பதே பிரிட்டிஷ் ஆட்சியின் குடிகளுக்கு அழகாகும். பகுப்பற்ற பேராசையுள்ளோர் பேச்சை நம்பி மற்றக் குடிகளும் பின்தொடருவாராயின் இரும்பை அடிக்கும்படி துரும்பையும் நசித்து விடுவதுபோல் பகுத்தறிவற்றப் பேராசையால் பத்து பேர் கூடிச்செய்யும் வீண்செயலுடன் சேர்ந்துக்கொள்ளும் பதினாயிரங் குடிகளும் பாழடையவேண்டியதேயாம்.

எவ்வகையாலென்னில், சாதி ஆசாரமென்னும் பொய்க்கதைகளை உண்டுசெய்து அதில் தங்களைப் பெரியசாதிகளென வகுத்து மற்றவர்களை அடக்கியாளுவதுபோல் பிரிட்டிஷ் ஆட்சியைப் பெற்றுக் கொண்டு மற்றக் குடிகளை இன்னும் அடக்கியாளவேண்டுமென்னும் எண்ணமுள்ள பேராசை மிகுத்தோரைப் பின்பற்றுவது உள்ளக்கூடிகள் இன்னுங் கேடடையுமென்பது திண்ணம்.

எக்காலுந் தங்கள் சுயசாதிகளின் சேர்க்கைகளையும், சுயசாதிகளின் விருத்திகளையும், சுயசாதிகளின் சுகங்களையுங் கருதியுள்ளக் கூட்டத்தோருடன் ஏனையோர் கூடி உதவிபுரியினும் தாழ்ந்த வகுப்பான் தாழ்ந்த வகுப்பானென்றே புறக்கணித்து தங்கள் சுகத்தைப் பார்த்துக்கொள்ளுவார்கள். அத்தகைய சுயப்பிரயோசனக் கூட்டத்தோர் கூட்டுரவிலும் அவர்கள் முகத்திலும் விழிக்காது சகலர் சுகத்தையுங் கருதி சகலரும் மாடமாளிகைகளில் வாழ்கவேண்டும், சகலரும் ஆடையாபரணங்கள் அணைந்திருத்தல் வேண்டும், சகலரும் வண்டி குதிரைகளில் ஏறி உலாவல்வேண்டும், சகலரும் தங்களைப்போல் ஆனந்தத்தில் இருக்கவேண்டுமென்னும் அன்பு மிகுந்த பிரிட்டிஷ் ஆட்சியே இவ்விடம் நிலைத்து அவர்களது ஆளுகைக்குள் சகலரும் வாழ்கவேண்டுமென்று எண்ணுவதே இராஜவிசுவாசிகளுக்கழகாகும். இத்தகையக் கருணைமிகுத்த ஆங்கிலேய அரசாட்சியைக் கருதாது பேராசைமிகுத்த பகுத்தறிவற்றவர் பேச்சைக் கேட்பது பத்திலும் பாழேயாம்.

- 4:24: நவம்பர் 23, 1910 -


170. நல்லோர்க்குக் கல்விவிருத்தி செய்துவைக்கில் சுகமும் பொல்லார்க்குக் கல்விவிருத்தி செய்துவைக்கில் துக்கமும் உண்டாம்

தங்களைப்போல் சகலருஞ் சுகமடையவேண்டுமென்று கருதுகிறவர்களும், தங்களுக்கு அனந்த இடுக்கம்வரினும் ஏனையோர்க்கு இடுக்கம் வராது காப்பவர்களும், தாங்கள் பசி உபத்திரவம் அடையினும் ஏனையோர் பசியுபத்திரவங்கண்டு சகியாதவர்களும், தாங்கள் பிணி உபத்திரவம் பெறினும் ஏனையோர் பிணியுபத்திரவங் கண்டு சகியாது சிகிட்சைபுரிபவர்களும், தங்களுக்கு வீடுவாசலில்லாதிருப்பினும் ஏனையோருக்குள்ள வீடுவாசலைக் கண்டு ஆனந்திப்பவர்களும், தங்களை ஏனையோர் வைது துன்பஞ் செய்யினும் ஏனையோரைத் தாங்கள் வைது துன்பஞ் செய்யாதவர்களும், தங்களது நீதியின் நிமித்தம் ஏனையோரால் அனந்தந் துன்பம் வரினும் ஏனையோருக்கு அநீதி புரியாதவர்களும், தங்களுக்கு ஏனையோர் செய்துள்ள தீங்குகளை மறந்து அவர்கள் செய்துள்ள நன்றிசை என்றும் மறவாதவர்களும் யாரோ அவர்களையே நல்லோரென்றும் மேலோரென்றும், பெரியோரென்றும் இத்தகைய நல்ல சாதிப்பினால் நல்ல சாதியோரென்றும், உயர்ந்த சாதிப்பினால் உயர்ந்த சாதியோரென்றும், மேற் சாதிப்பினால் மேலான சாதியோரென்றும் வழங்கப்படுவார்கள். இத்தகைய நற்சாதிப்பினையுடைய நல்ல சாதியோர்களுக்குக் கல்வி விருத்தி செய்துவைக்கின் மேலும் மேலும் அவர்களுக்கு நற்சாதிப்பு பெருகி நல்லசாதிகளென விவேகிகளால் அழைக்கப்பெற்று, ஞானமுண்டாகி, அன்பு பெருகி, சகலமக்களுக்கும் பேதமற்ற உபகாரிகளாக விளங்குவதுடன் மாளாப்பிறவியால் உண்டாம் பிறப்பின் துக்கத்தையும்,