பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/349

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 301
 

பிணியின் துக்கத்தையும், மூப்பின் துக்கத்தையும், மரணதுக்கத்தையுஞ் செயித்து பரிநிருவாண சுகமாம் அழியா பேரின்ப சுகத்தை அநுபவிப்பார்கள்.

தாங்கள் ஒருகுடி பிழைக்க நூறு குடிகளைக் கெடுப்பவர்களும், தாங்கள் ஒருகுடிக்குள் இடுக்கம்வரின் பத்துக்குடிகளை நாசஞ் செய்கின்றவர்களும், தங்கள் சுயசாதிகள் பிழைத்தால் போதுமென்றெண்ணி ஏனையசாதியோர்களை இழிவடையச்செய்கின்றவர்களும், தாங்களே கருணையற்று இரந்துண்ணுஞ் சீவனஞ்செய்துகொண்டு உழைப்பாளிகளை இழிந்தோராக தூற்றுகிறவர்களும், தாங்களே மிருகங்களினும் நாணமற்ற இழிந்தச் செயல்களைச் செய்து கொண்டு ஏனையோர்களை நாணமற்றோரென்று இழிவுகூறுகிறவர்களும், தங்களுக்கோர் பிணியின் உபத்திரவம் உண்டாயின் ஏனையோருக்கும் அப்பிணியின் உபத்திரவமுண்டாகவேண்டுமென்று கருதுகிறவர்களும், தாங்கள் செல்வமற்றிருப்பதுபோல் ஏனையோரும் செல்வமற்றிருக்க வேண்டுமென்றெண்ணுவோர்களும், தாங்கள் வீடுவாசலற்று திரிவதுபோல ஏனையோரும் வீடுவாசலற்றிருக்க வேண்டுமென்றெண்ணுகிறவர்களும், தங்கள் குடிகள் மட்டிலும் சுகமாக பிழைக்க வேண்டுமென்று தங்களுக்குத்தாங்களே உயர்த்திக்கொண்டு ஏனையோரைத் தாழ்த்தி இழிவடையச் செய்துவருகிறவர்களும், தாங்கள் மட்டிலுஞ் சுகமடைந்தால் போதுமென்றெண்ணியேனையோர் சுகக்கேட்டினை விரும்புகிறவர்களும், தங்களைமட்டிலும் மனுகுலத்தோராக எண்ணிக்கொண்டு ஏனைய மநுக்களை மிருகங்களிலுந் தாழ்ச்சியாக எண்ணி நசித்துவருகின்றவர்களும், தாங்கள் மட்டிலும் சுத்த நீர்களை மொண்டருந்தி சுகம்பெறவும், ஏனைய மக்கள் சேரு நீருங் கலந்தருந்தி சுகக்கேடடைய வேண்டுமென்றெண்ணுகிறவர்களும், தாங்கள் மட்டிலும் வண்ணார்களால் வெளுத்துவரும் சுத்த ஆடைக் கட்டி சுகமாக உலாவவேண்டும் ஏனையோர்கள் வஸ்திரங்களை வண்ணார்களை எடுக்கவிடாது அசுத்த ஆடையுடன் உலாவச் செய்கின்றவர்களும், தங்கள் மட்டிலும் அம்மட்டர்கள் சவரஞ் செய்துக்கொண்டு தேஜசுடன் உலாவவும், ஏனையோர் தலைமயிரும் முகமயிரும் வளர்த்துத் திரியவேண்டுமென்று எண்ணுகிறவர்களும், அறியாமல் யாரேனுந் தங்களுக்கு சொற்பத் தீங்கு செய்துவிடுவார்களாயின் அவர்களுக்குப் பெருந் தீங்கினை விளைவித்து அவர்கள் குடும்பத்தையே பாழ்படுத்தி விடுகின்றவர்களும், தங்களுக்குப் பொருளுதவியும் வேண உபகாரமும் செய்துவருகிறவரையில் உரியவனைப்போல் இதம் பேசிவந்து, அவனது பொருளுதவியும், உபகாரமும் செய்யாமல் நிறுத்திவிடுவானாயின் செய்நன்றி மறந்து அவன் குடும்பத்திற்கே தீங்கை விளைத்து குடிகெடுக்கின்றவர்களும், கொடுப்பவர்களை உயர்த்திப் பேசிக்கொண்டு கொடாதவர்களைத் தாழ்த்தி சீர்கெடுக்கின்றவர்களும், தேகத்தை உழைத்து பாடுபட்டுப் புசியாது, வஞ்சினத்தாலும், சூதினாலும், பெண்களை வருத்தியும் புசிப்பவர்கள் யாரோ அவர்களையே பொல்லாதவர்களென்றும், தீயர்களென்றும் சிறிய சாதிப்பினால் சிறியசாதியோரென்றும், இழிந்த சாதிப்பினால் இழிந்த சாதியோரென்றும் அழைக்கலானார்கள். அத்தகையப் பொல்லார்களுக்கு கல்வி விருத்தி செய்துவைப்பதினால் அவர்கள் தங்களது வித்தியா கர்வத்தைக் காட்டுவதுடன் சொற்பப் பொருளும் சேர்ந்துவிடுமாயின் மற்றவர்களைத் தூற்றிப் பேசவும் இழிவுகூறவும் அஞ்சார்கள். அதனுடன் தான் சொல்லும் வாக்கைத்தவிராது நடக்கும் ஏவல்களுங் கிடைத்துவிடுமாயின் அவர்களுக்கு விரோதியாயக் குடிகளை அன்றே நசித்துப் பாழ்படுத்த ஆரம்பித்துக்கொள்ளுவார்கள். ஆதலால் தேசத்திற் கல்வி விருத்திச் செய்யும் அரசர்கள் நல்லக் குடும்பத்திற் பிறந்துள்ள நல்லோர்கள் யாவரென்றும், பொல்லாக் குடும்பத்திற் பிறந்துள்ளப் பொல்லார்கள் யாவரென்றும் கண்டறிந்து இலவசக்கல்வியருள் செய்வரேல் சகலகுடிகளும் சுகம்பெற்று வாழ்வதுடன் அரசர்களும் ஆற்றலடைவார்கள்.