பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/350

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
302 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


விவேக சிந்தாமணி

பொல்லார்க்குக் கல்விவரில் கர்வமுண்டாம் அதனோடு பொருளுஞ் சேர்ந்தால்
சொல்லாதுஞ் சொல்லவைக்கும் சொற்சென்றால் குடிகெடுக்கத் துணிவர் கண்டாய்
நல்லோர்க்கிம் மூன்று குண முண்டாகி லருளதிக ஞானமுண்டாய்
எல்லோர்க்கும் உபகாரராயிருந்து பரகதியை யெய்துவாரே.

- 4:24; நவம்பர் 23, 1910 -

171. கனந்தங்கிய கவர்ன்மெண்டாரது கருணை கிறிஸ்தவர்கள் மட்டிலுந்தான் உளதோ

இல்லை இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியோர் கிறீஸ்தவர்களாயினும் அவர்களது ஆளுகை தன்னவ ரன்னியரென்னும் பட்சபாதமற்றதேயாம். பிரோட்டிஸ்டாண்டு கிறிஸ்தவர்களுக்கு வேண்டிய உதவி புரிந்து வருகின்றார்களேயென்று கூறுவாறுமுண்டு. அக்கூற்று விசாரிணையற்றக் கூற்றேயாம். காரணம், பிரோட்டிஸ்டாண்டு கிறிஸ்தவர்களைப்போல் மற்றயக் கிறிஸ்தவர்களாயினும், இந்துக்களாயினுங் குடிகளுக்குக் கல்விவிருத்தி, கைத்தொழில் விருத்தி செய்து நாகரீகத்திற்கும், ஒழுக்கத்திற்குங் கொண்டுவருவது கிடையாது. புரோட்டிஸ்டான்ட் கிறீஸ்தவர்கள் ஒருவர்களே பட்டிக்காடுகளெங்கும் சுற்றிப் பணவிரயங்களைச் செய்வதுடன் தங்கள் தேகத்தையும் வருத்தி ஏழைமக்களைக் கனம்பெறச் செய்துவருகின்றார்கள். அத்தகைய சீரையுஞ் சிறப்பையுங் கண்ணாறக் காணும் கவர்ன்மெண்டார் தங்கள் ஆளுகைக்கு உட்பட்டக் குடிகளை சீர்திருத்தும் உபகாரிகளுக்குத் தாங்களும் உபகாரிகளாயிருந்து அவர்கள் விருத்தியின் செயலுக்குத்தக்க உதவிபுரிந்து வருகின்றார்கள். அத்தகைய உதவி குடிகளின் சுகத்தையும், தேச சீர்திருத்தத்தையும் நாடிச்செய்யும் உதவியேயன்றி மதத்தைச் சார்ந்தவையன்றாம்.

மதச்சார்பினை அற்றிருக்கின்றார்களென்னின் சாதிசம்மந்தமேனும் இராஜாங்கத்தோருக்கு இல்லையோ என்பாருமுண்டு. அதுவும் இல்லையென்றே துணிந்து கூறுவோம். காரணமோவென்னில் அவர்கள் பிறக்கும் போதும்சாதிவித்தியாசங் கிடையாது. இறக்கும்போதும் சாதிவித்தியாசங் கிடையாது. அத்தகைய நீதியும், நெறியும் அமைந்த ராஜாங்கத்தோருக்கு இவன் தாழ்ந்தவன், அவன் உயர்ந்தவன் என்னும் பேதமுண்டாமோ. ஒருக்காலும் ஆகாவாம். கருணைதங்கிய குயின் விக்டோரியா பெருமாட்டியார் இந்தியதேச சக்கிரவாத்தினியாராயபோது இந்துக்களது மதவிஷயத்திலும், சாதி விஷயத்திலும் நாம் பிரவேசிக்கமாட்டோமென்று கூறியுள்ள வாக்கியத்தைக் கொண்டு இராஜகாரியாதிகளை நடத்திவந்த போதினும் இந்துக்களது சாதிசம்மந்தத்திலேனும், மதசம்மந்தத்திலேனும் துன்பத்திற்கேதுவாயக் கொறூரச் செயல்கள் ஏதேனும் நிகழுமாயின் சாதி சம்மந்தத்திலும், மத சம்மந்தத்திலும் பிரவேசித்து அத்துன்பத்தை நீக்கி ரட்சிப்பது அவர்களது செயல்களேயாம்.

அவ்வகை யாதெனில், இந்துக்கள் சாதி சம்மந்தமாக புருஷன் இறந்தவுடன் பெண்சாதி உடன்கட்டை ஏறல்வேண்டுமென்னும் ஓர் கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருந்தார்கள். அச்சாதிசம்மந்தக்கட்டுப்பாடு இஸ்திரீகளை உயிருடன் துன்பப்படுத்துவதற்காய கொறூரச் செயலாய் இருந்தபடியால் உடனே அவ் உபத்திரவத்தைத் தடுக்க முயன்றுவிட்டார்கள். இந்துக்கள் மதசம்மந்தமாக செடில் குத்தி ஆடுவது வழக்கமாயிருந்தது. அத்தகைய வழக்கம் மெத்த துன்பச் செயலுக்கும், கொறூர வதைக்கும் ஆதாரமாயிருந்தது. அவற்றையும் நிறுத்திவிட்டார்கள். இவ்வகையாய சாதி சம்மந்தத்தாலேனும் மதசம்மந்தத்தாலேனும் மநுமக்களுக்குத் துன்பங்களும் விருத்தி பேதங்களும் உண்டாவதாகக் காண்பார்களாயின் தன்சாதி புறசாதியென்னும் பேதம் பாராமலும் தன்மதம் பிறர்மதமென்னும் வித்தியாசங் கொள்ளாமலும் நீதி செலுத்தி துன்பத்தினின்று விடுபடச்செய்து