பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/354

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
306 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

யதார்த்த நல்லெண்ண முடையவர்களாயின் சென்ஸஸ் கமிஷனரவர்களின் நன்னோக்கத்திற்கு பின்னம் உண்டுசெய்யாதிருத்தல் வேண்டும். அங்ஙனமவரது ஆக்கத்தை நோக்க சகியாதவர்கள் தங்கடங்கள் சாதிப் பொய்மூட்டைகளையும், சமய சாக்கடை நீர்களையும் சமுத்திரத்திற் கரைத்துவிட்டு சகல மக்களையும் சகோதிரர்களென பாவிப்பார்களாயின் சகல துக்கங்களும் வழிந்து சதானந்தம் பெறுவர், சதானந்தம் பெறுவர்.

- 4:26; டிசம்பர் 7, 1910 -


174. புங்கனூர் முநிசிபாலிட்டியும் சென்னை முநிசிபாலிட்டியும்

சென்னை முநிசிபாலிட்டியில் கமிஷனர்கள் கூடி சில சுகாதார விஷயங்களை ஆலோசிக்குங்கால் ஐரோப்பியர்கள் யாவரும் ஓர்புறமாகச் சேர்ந்துக்கொண்டு காரியாதிகளை முடிவுசெய்துவிட்டார்கள். சுதேசிகள் வாக்கு செல்லவில்லையென வீண்கூச்சலிட்டுத் திரிந்தார்கள்.

அத்தகையாக ஐரோப்பியர் ஏகவாக்காக கூடி முடிவுசெய்த சுகசெய்தி ஏழைகள் முதல் கனவான்கள் வரை சுகமடையவேண்டிய முடிவுகளை செய்தார்களன்றி சிறியசாதியோர் எச்சுகமும் அடையப்படாது பெரிய சாதியோர் சகல சுகமுமடையலாம் என்னும் பாரபட்சமும் வன்னெஞ்சமுங் கொண்ட முடிவை ஒன்றும் செய்யவில்லை. புங்கனூர் கமிஷனர்களின் முடிவை சென்னை சுதேச கமிஷனர்கள் நோக்குவார்களாயின் சென்னை ஐரோப்பியக் கமிஷனர்களின் முடிவு மிக்க மேலாயதென்றே விளங்கும்.

அதாவது புங்கனூரிலுள்ள லோக்கல் போர்ட் டிஸ்பென்சரியென்னும் வைத்தியசாலையைச் சில பாதிரிகள் கூடி தங்களிடங் கொடுத்துவிடும்படியாகவும் தாங்கள் அவற்றை சரிவர நடாத்திக்கொள்ளுவதாகவும் கேட்டார்களாம். அதற்கு அவ்வூர் முநிசிபல் கமிஷனர்கள் பாதிரிமார்களை என்ன நிபந்தனைக் கேட்டார்களாமென்னில், அந்த வைத்தியசாலையில் “பஞ்சம கிறீஸ்தவர்களை வேலைக்கு வைக்கப்படாது கிறீஸ்தவர்கள் போதனைகளை அவ்விடம் போதிக்கப்படாது, பணங்கள் ஏதேனும் வாங்கப்படாது” என்பதேயாம். இம்முடிவை சுதேசக் கமிஷனர்கள் ஏகவாக்காகக் கூறி முடிவுசெய்தார்களாம். அதனை வினவியப் பாதிரிகள் மனித குலத்தோரை மனிதர்களாக பாவிக்காத கூட்டத்தோரிடம் பேசுவதிலும் பயனில்லை, அவ்வைத்தியசாலையை ஒப்புக்கொள்ளுவதிலும் பயனில்லையென்று போய்விட்டார்களாம். இத்தகைய நீதியும் அன்புமற்ற கமிஷனர்கள் தற்காலம் அவ்வைத்தியசாலையில் பஞ்சமக் கிறீஸ்தவ வியாதியஸ்தர்க்கும் இடங் கொடுக்கமாட்டார்கள்போல் விளங்குகின்றது, அவ்வகைப் பஞ்சமரென்றழைக்கப்படும் கிறீஸ்தவ வியாதியஸ்தர்களை அவ்வூர் வைத்தியசாலையில் சேர்த்து அவர்கள் வியாதிகளைக் காருண்யமாய்ப் பார்த்து சுகப்படுத்தும் செயல்கள் சரிவர நடந்துவருமாயின் பஞ்சமக் கிறீஸ்தவ வேலைக்காரர்களை அவ்விடம் வைக்கப்படாதென்னும் நிபந்தனைக் கேழ்க்கமாட்டார்கள். பஞ்சமர்களென்போர் யாவரும் அடியோடு நாசமடைந்து போய்விட வேண்டும் தாங்கள் மட்டிலும் சுகம்பெற வேண்டுமென்னும் பொறாமெயுடையவர்களாதலின் தங்களிடமுள்ள பொறாமெயைப் பாதிரிகளிடம் பரக்க விளக்கிவிட்டார்கள்.

முநிசிபல் கமிஷனர் அதிகாரத்திலேயே பஞ்சமக் கிறீஸ்தவர்களைப் பரக்கடிக்கப் பார்க்கின்றவர்கள் சுயராட்சியங் கொடுத்துவிட்டால் பஞ்சமரென்றழைக்கப்பெற்றவர்கள் யாவரும் பாதாளஞ்சேரவேண்டியதேயாகும். இத்தகைய சட்டதிட்டங்களும் ஆட்டபாட்டங்களும் எதினால் உண்டாவதென்னில் யாரோ சிலர்கள் கூடி ஓர் பெயரைக் கொடுத்துவிடுவதும், அப்பெயரை ஓர் கூட்டத்தோர் ஏற்றுக்கொள்ளுவதுமாகியப் பேதைநிலையே மேற்கூறிய இழிந்த செயல்களுக்கும் தூற்றலுக்கும் ஆதாரமாய் இருக்கின்றது. வித்தையிலுங் கேவலம், புத்தியிலுங் கேவலம், உணவிலுங் கேவலம், உடுப்பிலுங்