பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/362

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
314 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

ஏழைகள் கேட்டுள்ள பூமிகளை அவர்களுக்குக் கொடுத்து ரட்சிக்காது கலெக்ட்டரவர்களுக்கும் கவர்னரவர்களுக்கும் வீண்பிரயாசையாயைக் கொடுப்பது கருணையற்றச் செயலேயாகும்.

சென்னையிலும் மற்றுமுள்ள தேசங்களிலுமுள்ளப் பெரியோர்கள் பெருங்கூட்டங்களிட்டு (டிப்பிரஸ் கிளாசை) முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்று வேணப் பணங்களைச் சேகரிக்கவும் வேணமுயற்சிகள் எடுப்பதுவும் உலகப் பிரசித்தமாயிருக்க தாங்களும் அவ்வகைக் கருணை கொண்டு உள்ள ராஜாங்கத்தோர்க் காலி பூமிகளை ஏழைக்குடிகளுக்கு அளித்து ரட்சிப்பீர்களானால் சென்னையில் டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தி சுகம்பெற செய்விக்கப்போகின்றோம் என்னுங் கூட்டத்தோருடன் தாங்களுஞ் சேர்ந்தவர்களென்றெண்ணி சகலருங் கொண்டாடுவார்கள். அத்தகைய கருணை வையாமல் தங்கள் தங்கட் பிரியமானவர்களும் மிக்க பூமியை உடையவர்களுமானவர்க்குக் கொடுத்துவிட்டு ஆதியிலிருந்துக் கேட்டுக் கொண்டேவரும் ஏழைக் குடிகளுக்குக் கொடாமல் வெறுமனே விட்டுவிடுவீர்களாயின் ஏழைக் குடிகளை முன்னேறவிடாமலும் அவர்கள் சுகமடைய வேண்டுமென்னும் நல்லெண்ணம் இல்லாமலும் காலமெல்லாம் நசித்து அவர்களை நாசப்படுத்திவருவதுபோல் இன்னும் அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசித்துப் பாழ்படச் செய்வதற்கே ஏழைகளின் விண்ணப்பத்திற்கு இதக்கம் வையாது தடுத்துவருகின்றார்களென்னும் வதந்தியுண்டாவதுடன் டிப்பிரஸ் கிளாசை சீர்படுத்தப் போகின்றோமென்பவர்களின் செயலிலும் சந்தேகிப்பதற்கு ஏதுண்டாகிப்போம். காரணமோவென்னில், பண்ணைத்தொழில் புரியும் ஏழைக் குடிகளுக்கு காலிபூமிகளிருக்கின் கட்டாயங் கொடுக்கவேண்டுமென்று கருணைதங்கிய இராஜாங்கத்தோர் சட்டமிருந்தும் ஏழைக்குடிகள் அவற்றைக் கேட்டிருந்தும் அவர்கள் மீது கருணைவையாது விட்டுவிடுவதாயின் டிப்பிரஸ்கிளாசை சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவரப்போகின்றோமென்பவர்கள் தங்கள் பணங்களை செலவிட்டு தாங்களே முயன்று சீர்திருத்துவார்களென்பதை நம்பப்போமோ. அத்தகைய நம்பிக்கைக் ஆதாரமற்றுப்போவதுடன் காலமெல்லாம் பெருங் கஷ்டத்தை அநுபவித்துவரும் ஏழைக்குடிகளை இந்துக்களினின்று அப்புறப்படுத்தி வேறுவகை சீர்திருத்தஞ் செய்யுங்காலம் வரினும்வரும். ஆதலின் திண்டிவனம் தாலுக்காவைச் சார்ந்த மேல்பாக்கம், பாஞ்சாலம், சாத்தனூர் கிராமாதிகாரிகளை அங்குள்ள ஏழைகள்மீது கருணைவைத்து அவர்கள் கேட்டுள்ள பூமிகளைக் கொடுத்து ஆதரிக்கும்படி வேண்டுகிறோம்.

- 4:29; டிசம்பர் 28, 1910 -


182. முநிசபில் கமிஷனர்கள் நியமனம்

இவ்வருஷத்திய முநிசபில் கமிஷனர்கள் நியமனம் நெருங்கிவிட்ட படியால் கனவான்கள் ஒவ்வொருவர் வெளிதோன்றி வீடுவீடாக நுழைந்து வருகின்றார்கள்.

காரணாமோவென்னில், இந்த டிவிஷனுக்கு என் பெயருக்கு (ஒட்டு) கொடுங்கோள் வோட்டு கொடுங்கோளென ஒருவரைக்கொண்டு ஒருவருக்கு சொல்லவைப்பதும், வண்டிகளைக் கொண்டு வந்து ஒவ்வோர் மூலைகளில் நிறுத்திவிட்டு வீடுவீடாக நுழைந்து வருவதுமாகிய வேலைகள் நிறைவேறிவருகின்றது. இவற்றுள் குடிகளே சேர்ந்தாலோசித்து நம்முடைய டிவிஷனுக்கு யாரைக் கமிஷனராக நியமித்துக்கொள்ளலாம், யார் நம்முடையக் குறைவு நிறைவுகளை சங்கத்தில் எடுத்துப் பேசி சுகாதாரம் அளிப்பாரெனக் கண்டுதெளிந்து நியமிக்கவேண்டிய அவசியமாகும். அதற்கு மாறுதலாக சில கனவான்கள் தங்களுக்குத்தாங்களே கமிஷனர்களாகவேண்டுமென வெளிதோன்றி என்னை கமிஷனராக நியமியுங்களென வற்புறுத்துகின்றார்கள்.

இத்தகையச் செயல்களால் குடிகளே சேர்ந்து தங்களுக்கு வேண்டிய கமிஷனர்களை நியமித்துக்கொள்ளவேண்டிய ஏதுக்களற்று தங்களுக்குத்