பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/364

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
316 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

இக்காங்கிரஸ் கமிட்டியோ ரென்பவர்கள் கூட்டங்கூடுவதும் உள்ளக் குறைகளை பேசுவதும் இராஜாங்கத்தோருக்கு எடுத்துக் கூறுவதுமாகிய செயலிலிருந்தார்கள். தற்காலமோ அந்தந்த வகுப்பார்களில் ஒவ்வோர் லெஜிஸ்லேட்டிவ் கமிஷனர்களை நியமித்து அவர்களுக்குள்ளக் குறைகளை ஆலோசனைசங்கத்தி லெடுத்துப்பேசி நியாயவாயலாகப் பெற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை சகல குடிகளுக்குக் கொடுத்து பேசிக்கொண்டுவருங்கால், இக்காங்கிரஸ் கமிட்டியோரும் வெவ்வேறு கூட்டங்களைக்கூட்டி, தங்கள் தங்கட் பிரியம்போல் சிற்சில சீர்திருத்தங்களை பத்திரிகைகளில் வெளியிடவும் இராஜாங்கத்தோருக்கு எழுதவுமாயிருந்தால் இவ்விருதிரத்தோருள் இராஜாங்கத்தார் லெஜிஸ்லெட்டிவ் மெம்பர்களின் ஆலோசினையை ஏற்றுக்கொள்ளுகிறதா, அன்றேல் காங்கிரஸ் கமிட்டியாரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுகிறதா, இவ்விருவர்கள் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பாராயின் அஃது நியாயவிரோதமேயாம்.

எவ்வாறெனில் பலவகுப்பாரும் சேர்ந்துள்ள லெஜிஸ்லேட்டிவ் மெம்பர்களின் ஆலோசனையை இராஜாங்கத்தார் ஏற்றுக் கொள்ளுவதே அழகும் நியாயமுமாகும்.

அங்ஙனமின்றி தென்தேசத்தில் பிராமணர்களெனப் பெயர் வைத்துக் கொண்டுள்ள பெருந்தொகையாரும், வடதேசத்தில் வங்காளிகளிற் சிலருஞ் சேர்ந்துக்கொண்டு செய்யும் ஆலோசினை அழகாமோவென்பதை ஒவ்வொருவரும் நன்குணரவேண்டியதேயாம்.

குடிகள் மீது இராஜாங்கத்தோரே கருணைகொண்டு ஒவ்வொரு வகுப்பாருள்ளும் ஒவ்வோர் ஆலோசினைக் கர்த்தவர்களை நியமித்து அவரவர்களுக்குள்ளக் குறைகளை எடுத்துப் பேசி குடிகளுக்கு சுகமளிக்கலாமென்னும் அதிகாரத்தை ஆனந்தமாகக் கொடுத்திருக்க அவர்கள் மூலமாக இந்த காங்கிரஸ் கமிட்டியோர்களில் முக்கியமாயுள்ள ஐந்தாறு பெயர்களுங்கூடி ஆலோசித்து வேண்டியக் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கும்படி சொல்லுவார்களாயின் மிக்க மேலாகும். அங்ஙனமின்றி பெருந்தொகையினராக நியமித்துள்ள லெஜிஸ்லேட்டிவ் கமிட்டி மெம்பர்கள் ஒருபுறமும் நின்று இராஜாங்கத்தோருக்கு மிக்க தொந்தரையைக் கொடுப்பதாயின் இருவர்கள் சொல்லையும் அவர்கள் செவியில் ஏற்காது தங்களிஷ்டம்போல் இராஜகீயத்தை நடத்திக்கொள்ள நேரினும் நேரும்.

இக்காங்கிரஸ் கமிட்டியார் இராஜகீய சட்டதிட்டங்களிற் பிரவேசிக்காது உள்சீர்திருத்த விவசாயங்களிலும், கைத்தொழிலிலும் பிரவேசித்து தேசத்திற்கு சிறப்பையும், தேசக் குடிகளுக்கு சுகத்தையும் அளித்து ரட்சிப்பார்களாயின் அதுவே காங்கிரஸ் கமிட்டியார் எடுத்து முடித்தப் பேருபகாரமாகும்.

இம்முறைக் காங்கிரஸ் கமிட்டியார் கூடியக் கூட்டத்தில் மகாகனந்தங்கிய மிஸ்டர் வேட்டர்பர்னவர்கள் எழுந்து இந்துக்கள் எல்லவரும் ஒன்றுசேர்ந்து விட்டார்கள் மகமதியர்கள் மட்டிலும் ஒன்றுசேர வேண்டுமென்று கூறியது என்ன விசாரிணையோ விளங்கவில்லை. மேற்சொன்னபடி துரையவர்கள் சென்னை ராஜதானியிலிருக்குங்காலத்திலேயே கணக்கில்லா ஆயிரத்தெட்டு சாதியும், நூற்றியெட்டு சமயப் பிரிவுமிருந்து ஒருவருக்கொருவர் சேராமலிருந்ததைத் தான் கண்ணாரக் கண்டிருந்தும் தற்காலத்தில் ஒவ்வோர் பிரிவினர் வெவ்வேறு லெஜிஸ்லேட்டிவ் மெம்பர் நியமனம் விதிக்கவேண்டுமென்று கேட்டுள்ளதை வாசித்திருந்தும் இந்துக்கள் எல்லவரும் ஒன்றுகூடிவிட்டார்களென்று கூறியது காரணம் யாதென்று விளங்கவில்லை.

இத்தேசத்தில் சாதிப் பிரிவினைகளை வைத்துள்ளவர்கள் என்ன சுத்திலிருக்கின்றார்கள், சாதிப் பிரிவினையை வைக்காமலிருக்கின்றவர்கள் என்ன துக்கத்தை அநுபவிக்கின்றார்களென்று கண்டறியாமலும் யேழைகளை யீடேற்றும்படியான எண்ணமில்லாமலும் போய்விட்டவரானபடியால்