பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/369

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 321
 

தீயோர்குணங்களை பல்லோர்க்கு உரைப்பதுவுந் தீது, தீயாரோடு இணங்கியிருப்பதுவுந் தீதென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். கருணைதங்கிய ராஜாங்கத்தோர் செய்துவரும் உபகாரச்செயல்களைக் கண்டு களித்து அவர்களுக்கு நன்றியறிந்த வந்தனஞ்செய்யாது அவர்களது உபகாரச் செயலுக்கு அபகாரமொழிக் கூறுவது அழகின்மெயேயாம்.

வடநாட்டிலுலாவி ராஜாங்கத்தோரால் உதவி பெற்றுள்ள பத்திரிகையும், சுதேச பத்திரிகை, அதனை நடத்துவோரும் சுதேசி, அவற்றைக்கண்டு சகியாதாரும் சுதேசியாதலின் இவற்றைக் காணும் ஒவ்வோர் புறதேசிகளும் நகைப்பதற்கு ஏதுவாகிவிடுகின்றது. ஆதலின் சுதேசிகளென சொல்லித்திரிவோர் வீண் பொறாமெய்ச்செயலில் வீண்காலம் போக்காது வித்தையிலும் புத்தியிலும் தங்கள் காலத்தைப் பெருக்கி சகல குடிகளும் சுகம்பெறும் வாழ்க்கையில் நிலைக்கச்செய்வார்களென்று நம்புகிறோம்.

- 4:34; பிப்ரவரி 1, 1911 -


187. சென்ஸசும் இந்திய பௌத்தர்களும்

இந்தியதேச பௌத்தர்கள் யாவருக்கும் ஆனந்தமாகத் தெரிவிக்கும் செய்தி யாதெனில்:-

அன்பர்காள், பௌத்தர்களென்னுங் கூட்டத்தோருக்கு எத்தேசத்திலும் சாதியாசாரங் கிடையாது. அதையநுசரித்தே நமது கருணை தங்கிய ராஜாங்கத்தோருக்கு விண்ணப்பம் அனுப்பி இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் வெவ்வேறு கலம்பிரித்து வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். அவ்வகையாகவே பௌத்தர்களுக்கு வேறு கலம் பிரித்துவிட்டார்கள். இத்தகைய கவர்ன்மெண்டார் உத்திரவு அவர்களது பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட சகலதேச பௌத்தர்களுக்கும் பொருந்தியதேயன்றி வேறன்று. ஆதலின் மைசூர் ராட்சியத்திலுள்ள பௌத்தர்களாயினும் ஐடிராபாத்திலுள்ள பௌத்தர்களாயினும், பரோடாவிலுள்ள பெளத்தர்களாயினும் சகலரும் “இந்திய பௌத்தர்க”ள் என்றே அழைக்கப்படுவார்கள்.

கவர்ன்மெண்டு கெஜட்டில் பிரசுரித்திருப்பது எவ்வகையதென்னில், பர்ம்மா புட்டிஸ்ட், சைனா புட்டிஸ்ட் என்று தேசங்களையே குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆதலின் இந்தியாதேச பௌத்தர்கள் எத்திக்கிலிருந்போதிலும் சகலரும் இந்தியதேச பௌத்தர்களேயாதலின் இந்தியதேச பௌத்தர்களுக்குள் எத்திக்கிலுள்ள பௌத்தர்களாயினும் இக்குடி மதிப்பெடுக்கும் சென்செஸ் காலத்தில் நீங்கள் உங்களை இந்திய பெளத்தர்களென்றே கூறல்வேண்டும். இல்லையெனமிரட்டி ஏதேனும் சாதியைக் கேட்பார்களாயினால் பௌத்தர்களுக்கு சாதியில்லையென்றே துணிந்து கூறுங்கள். வேண்டுமென்னுங் கெட்ட எண்ணத்தால் நீங்கள் முன்பென்ன சாதியென்று வற்புறுத்திக் கேட்பார்களாயின் அவ்வகையானக் கேழ்விகளுக்கு நாங்கள் உத்திரவு கொடுக்கமாட்டோம், நாங்கள் இந்தியதேச பெளத்தர்களென்றே யாவரும் ஏகோபித்துக் கூறுங்கள். இதுவே கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியோரால் இந்துக்கள் வேறு பௌத்தர்கள் வேறென்றதிகார உத்திரவுபெற்றுள்ள சென்னை சாக்கைய பெளத்த சங்கத்தார் அறிக்கை.

பூர்வமுதல் நாளதுவரையில் பௌத்தர்களுக்கு சாதிபேத மில்லையென்னும் அநுபவங்களினாலும், நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் நமது கோரிக்கையின்படி இந்துக்கள் வேறு பெளத்தர்கள் வேறெனப் பிரித்துள்ள விதிகளினாலும் குடிமதிப் பெடுக்குங்கால் யாதொன்றுக்கும் பயப்படாமல் எங்களுக்கு சாதிப்பெயர் கிடையாது நாங்கள் இந்திய பௌத்தர்களென்றே துணிந்து கூறுங்கள்.

ஈதன்றி பௌத்தர்கள் பிள்ளை, நாயுடு முதலி, செட்டி யெனுந் தொடர்மொழிகள் யாதொன்றையுஞ்சேர்க்கப்படாது. முருகேசர், அருகேசர், குருசுவாமியார், இராகவர், பெரியசாமி புலவர், நந்தகோபாலர்,