பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/409

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 361
 

காங்கிரஸ் கூட்டத்தோராயின் ஏழைக்குடிகளுக்கென முன்சென்று ஏழைகள் கேட்டுள்ள பூமியை பெற்று அவர்களுக்களித்து சீர்பெறச்செய்யலாமன்றோ. நாகப்பட்டினத்தைச்சார்ந்த காடம்பாடிஎன்னுங்கிராமத்தில் வாழும் ஏழைக்குடிகளுக்கென்று விட்டிருக்கும் சுடலைக்குப் போகும்படியான வழியை அடைத்துக்கொண்டு பலவகைத் துன்பங்கள் செய்துவருவது அத்தேசப் பெரியோர் சகலருமறிந்திருந்தும் அவ்வேழைக் குடிகளின் குறைகளை நீக்கினவர்களுண்டோ அக்குறைகள் யாவும் நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாருக்குத் தெரியாதென்பாராயின் இந்திய தேச முழுவதற்கும் ஓர் பிரதிநிதி போன்ற நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரென்னும் பெரும்பெயர் பொருந்துமோ, பொருந்துமென்பாராயின் குறித்த ஏழைகளைக் கண்ணோக்குவார்களாக.

- 5:1; சூன் 14, 1911 -


216. படுபாவிக்கு பிராமணன் என்னும் பெயர் தகுமோ

தகாவாம். வேஷப்பிராமணன் என்னும் பெயரே பொருந்தும். காரணமோவென்னில், “அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மெய்ப்பூண்டொழுகலால்” என நீதி நூலோர் கூறியப்படி சர்வ உயிர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்கும் சாந்தரூபியையன்றோ பிராமணனெனக்கூறத்தகும். அங்ஙனமின்றி பொறாமெயும், பொச்செரிப்பும் கொலைக்குறித்த நோக்கையுடையவனாகவிருந்து ஓர்டிஸ்டிரிக்டுக்கே அரசனாக விளங்கிய கலெக்ட்டர் ஆர்.டபல்யூ.டி.இ. ஆஷ்ஷி அவர்களை இம்மாதம் 18 தேதி காலை 10-மணி 40-நிமிஷத்திற்கு ரிவால்வரால் சுட்டுக் கொன்ற துஷ்டனை பிராமணனெனப் போமோ, இல்லை. இந்த படுபாவின் கேடுண்ட செயலால் மற்றும் இராஜவிசுவாசமுள்ள பிராமணர்களென்போர்களையும், மற்றும் இந்துக்களையும் மனக்கலக்கமுறச் செய்துவிட்டானே. ஈதோர் சாமர்த்தியமாமோ. இத்தகைய செயலால் பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் பயந்துவிடுவார்களோ, பல்லாயிரம் உயிரை பறிகொடுத்து இத்தேசத்தைக் கைப்பற்றி ஆண்டு வருகின்றவர்கள் ஓருயிர் போய்விட்டால் விட்டு விடுவார்களோ இல்லை. இத்தகையப் படுபாவச்செயலால் ஒவ்வோர் முநிஷிப்புகள் உத்தியோகங்களுக்குக்கூட ஐரோப்பியர்களே வந்துசேருவார்களென்பது திண்ணம்.

இராஜவிசுவாசிகள் வாழுமிடங்களில் சீருஞ் சிறப்புத் தோன்றும். இராஜதுரோகிகள் வாழுமிடங்களில் துக்கமும் பற்கடிப்புமே தோன்றும். இதற்குப் பகரமாய் கலெக்ட்டர் துரை சுடப்பட்டு பயிரங்க கட்டிடத்தில் மரிக்கவும், சகலசாதி பெரியோர்களுஞ் சூழ்ந்து எடுத்து திருநெல்வேலிக்குச் செல்லவுமாச்சுது. பிராமணனென்னும் பெயர் வைத்துக்கொண்டு கொலைபுரிந்த 25 வயதுடைய படுபாவி பலசாதியோரும் மலங்கழிக்குங் கக்கூசில் தன்னிற்றானே சுட்டுக்கொண்டு செத்தானாம். இதுதான் அவனும் அவனைச்சார்ந்தவர்களுமடையும் பற்பலனாகும்.

அவனவன் துற்கரும்பலனை அவனவனே அநுபவிக்கவேண்டுமென்பது ஆன்றோர் துணிபாதலின் இவன் செய்த படுபாவச்செயலுக்கு படுபாவத்துன்பத்தையே அநுபவிப்பானன்றி இன்பத்தையொருக்காலும் அனுபவிக்கமாட்டான்.

இவன்செய்தப் படுபாவச்செயலால் துரைமக்களும் லேடிகளும் பிராமணனென்னும் வேஷத்துக்குரிய ஒருவன் பூனூலுங் குடிமியும் வைத்து எதிர்வந்தபோதும் சற்று நிதானிப்பார்கள். குடுமிவைத்துக்கொண்டு பட்டைநாமஞ் சாற்றி எதிரில் வந்தபோதும் நிதானிப்பார்கள். குடிமிவைத்து கருப்புப்பல்லும், கருப்புப் பொட்டும் வைத்து எதிரில் வந்தபோதிலும் நிதானிப்பார்கள். இத்தியாதி சந்தேகங்களுக்கும் இப்படுபாவியின் கொலைச் செயலே காரணமாகும்.