பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/418

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
370 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


ஆதலின் நமது கோகேலெனுங் கனவான் சகலசாதி சிறுவர்களுக்குங் கலாசாலைவைத்துக் கற்பிக்கவேண்டு மென்னும் நல்லெண்ண மிருக்குமாயின் ஆறுகோடி மக்கள் அல்லலடைந்துவரும் அவதிகளை நீக்கி அவர்களுக்கோர் சீர்திருத்த வழிகளை உண்டு செய்துவிட்டு அவர்களுடைய சிறுவர்களுக்குக் கல்விகற்பிக்க முயலுவராயின் யாதோரிடையூறுமின்றி முன்னேறுவார்கள்.

தாய்தந்தையர்களை ஆடைக்கும் அன்னத்திற்கும் அலையவிட்டு அவர்கள் மைந்தர்களுக்குக் கல்விகற்பிப்போமென்பது மந்தநிலையேயாம்.

ஆறுகோடி மக்கள் சாதிபேதப் பொறாமெ அறிவிலிச் செயலால் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்திருப்பது உலகப்பிரசித்தமாயிருக்க சீர்திருத்தக்காரரென வெளிதோன்றிய கோகேலவர்களுக்கு மட்டிலுந் தெரியாததோ இல்லை. தெரிந்தும் தெரியாதது போல் தாங்கள் கொண்டுள்ள கருத்தை நிறைவேற்றுதற்குத் தாவிநிற்கின்றார்.

தென்னிந்தியாவிற் பிறந்து வளர்ந்து சீர்திருத்தக்காரரென வெளிவந்து நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரென்னும் ஓர்கூட்டமுங் கூட்டிக்கொண்டு வருஷந்தோரும் பேசிவருகின்றவர்களாகியப் பெருங்கூட்டத்தோர்களே ஆறுகோடி மக்களின் அல்லலைத் தங்கள் செவிகளிற் போடாமலும் அவர்கள் கஷ்ட நஷ்டங்களை நோக்காமலும் தங்கடங்கள் சுயநலங்களைப் பார்த்திருக்கும்போது அச்சங்கத்திற் சேர்ந்துள்ள கோகேலென்னுங் கனவான்மட்டிலும் பேசவில்லையென்பது வீண்மொழியாதலின் இம்மட்டில் இவற்றை விடுக்கின்றோம்.

- 5:10; ஆகஸ்டு 16, 1911 -


224. யூனியன் பஞ்சாயத்தும் அவர்களது போக்கும்

இத்தேசத்து யூனியன் பஞ்சாயத்தென்றால் சாதிபேதம் வைத்துள்ளவர்கள் எல்லோரும் ஓர் யூனியன், சாதிபேதம்வைத்துள்ளோர் கட்டுப்பாடுகளெல்லாம் ஒரே கட்டுப்பாடு. அவர்கள் தங்கள் ஜாதி ஆசாரப்படி செய்துக்கொள்ளும் செயல்களெல்லாம் ஒரேசெய்கை. சாதியாசாரம் உள்ளவர்களுக்கு வேண்டிய சுகங்களைத் தேடிக்கொள்ளுவதே சுகம். அவர்கள் செய்துக்கொள்ளுவதே யூனியன் பஞ்சாயத்தென நடைபெற்றுவருகின்றது.

சாதியாசாரம் இல்லாமலிருக்கும் ஏழைக்குடிகளுக்கும் அப்பஞ்சாயத் திற்கும் யாதொரு சம்பந்தமுங் கிடையாது. அவர்களுக்குள்ளது என்ன யூனியனும் என்ன சம்மந்தமுமென்னில், நல்லத் தண்ணீரை மொண்டு குடிக்க விடாது அப்புறந் துறத்திவிடுகின்றது கருணைதங்கிய கவர்ன்மெண்டார்களே பொதுவாகிய குளங்கள் வெட்டியுங் கிணறுகள் வெட்டியுங் கொடுப்பார்களாயின் அதையுந் தங்கள் பாட்டன் பூட்டன் கட்டிவைததது போல் தங்கள் சௌகரியத்திற்குத் தக்கவாறு அனுபவித்துக்கெண்டு ஏழைக்குடிகளை விரட்டியோட்டுகின்றது. அவர்கள் பசியறிந்து கூலிகொடாது ஒடிக்கி வேலைவாங்குகிறது. அவர்கள் வயிற்றிற்குப் போதாமல் ஏதேனுங் கூலி அதிகங் கேட்பார்களாயின் தங்கள் பஞ்சாயத்தின் அதிகாரத்தைச் செலுத்தி அவர்களைப் பாழ்படுத்துகிறது. அதற்குமீறி தங்கட் குறைகளை மேலதிகாரிகளிடந் தெரிவிப்பார்களாயின் உள்ளதுங்கெட்டு குடிக்கக் கூழற்று மடிவதொன்று. அன்றேல் ஊரைவிட்டோடுவதொன்று. இதுவே யூனியன் பஞ்சாயத்தோருக்குட்பட்ட சாதிபேதமில்லாக் குடிகளின் சுகக்கேடு.

யூனியன் பஞ்சாயத்தோர் என்போர்களின் சுகமோ சாதிபேதம் வைத்துள்ளக் குடிகள் யாவரும் வைத்துள்ள சொந்தபூமிகளுக்கு சாதிபேதமில்லாத ஏழைக்குடிகள் யாவரும் அவர்கள் சொன்னபடி ஏவல்புரிந்துவரவேண்டும். அவர்கள் மொழிக்கு மறுமொழி கூறப்படாது. இரவும் பகலும் வேலைவாங்கிக்கொண்டு நாளொன்றுக்கு ஒன்பதுகாசு கொடுத்தபோதினும் பெற்றுக்கொள்ளல் வேண்டும். அவர்களுக்குள்ள சாதிகர்வத்தால் ஏழைகளை அடித்துத் துன்பஞ்செய்யினும் சகித்துக்கொண்டு அவர்களிட்ட ஏவலை புரியவேண்டும். இவ்வகையாக ஏழைகளைவஞ்சித்து துன்பப்படுத்தி