பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/419

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 371
 

அவர்களைத் தலையெடுக்க விடாமல் ஒடிக்கி ஆண்டுவருவதற்கே யூனியன் பஞ்சாயத்தென்னும் பெயரை வைத்துக்கொள்ள வேண்டுமென்னுங் காரியாதிகளை நடத்துகின்றார்களன்றி யூனியனென்னும் பெயர் அவர்களுக்குப் பொருந்தவே மாட்டாது. எப்போது சாதிபேதமுள்ளவர்கள் மட்டிலும் ஒன்றுகூடிக்கொண்டு சாதிபேதமில்லாத இத்தேசப் பூர்வக் குடிகளை சுகம்பெறவிடாமல் நாசமடையச் செய்கின்றார்களோ அவர்களை யதார்த்த யூனியனிலுள்ளோரென்று கூறத்தகாது.

இத்தகைய யூனியனற்றக் கூட்டத்தோருடனும் அவர்களுக்குட்பட்டும் சாதி பேதமில்லாக் குடிகள் சேரவும்போகாது, யூனியன் பஞ்சாயத்தென்று ஏற்படுத்திக்கெண்டுள்ள சாதிபேதமுள்ளக் குடிகள் சாதிபேதமில்லாதக் கூட்டத்தோரை தங்கள் யூனியனுக்குட்பட்டவர்களென சேர்க்கவு மாகாது. அவ்வகை சேர்த்துக் கொண்டு நாசஞ்செய்வார்களாயின் அஃது வஞ்சகக் கூற்றென்றே கூறல் வேண்டி வரும்.

சாதிபேதமுள்ளவர்களையும் சாதிபேத மில்லாதவர்களையும் ஒன்றுபடுத்தி யூனிய னென்று கூறுவதும் பிசகு, சாதிபேதமுள்ளோர் யூனியன் பஞ்சாயத்தில் சாதிபேதமில்லாத குடிகளை விசாரிக்கவிடுவதும் பிசகு. காரணமோவென்னில் நூதன சாதிபேதத்தை உண்டு செய்துள்ளக் கூட்டத்தோருக்கும் புராதன சாதிபேதமில்லாக் கூட்டத்தோருக்கும் நெடுங்கால விரோதமுள்ளபடியால். இத்தகைய அதிகாரங்கொண்டு ஏழைக்குடிகளை பின்னும் பாழ்படுத்தி விடுவார்கள். உயர்ந்த சாதியோர் உயர்ந்த சாதியோரென்னும் வேஷமிட்டுக்கொண்டுள்ளோர் தாழ்ந்த சாதியோர் தாழ்ந்த சாதியோரென யாவரைத்தாழ்த்தி வருகின்றார்களோ அவர்கள் யாவரும் பூர்வத்தில் சுகநிலைப்பெற்று மேன்மக்களாக வாழ்ந்திருந்த விவேகக் குடும்பத்தவர்களாவர். இந்த வேஷ ஜாதியோருக்குட்படாமலும் அவர்களுடையப் பொய்ப் போதகங்களை நம்பாமலும் கேவலப்படுத்தி வந்த செயல்களை மனதில் வைத்துக்கொண்டு தங்களுக்குக் கொஞ்சம் நல்ல காலம் வந்துவிட்ட தென்றெண்ணி பூர்வக் குடிகளை முற்றுங் குடிகெடுத்து பாழடையச் செய்துவருகின்றார்கள்.

சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் சாதிபேதமில்லா இத்தேசப் பூர்வக் குடிகள்மீது வைத்துள்ள வஞ்சத்தை முற்கொண்டு இத்தியாதி கொடூரங்களையுஞ் செய்து நசித்துவருகின்றார்கள். இதன் விருத்தாந்தங்கள் யாவையும் நமது கருணை தங்கிய ராஜாங்கத்தோருக்கு விளக்கி சாதிபேதமுள்ளக் கூட்டத்தோர் செயல்களுடன் சாதிபேதமில்லாதோரை சேர்க்கவிடாதும் அவர்களது அதிகாரத்திற்கு இவர்களை அடங்கவிடாமலும் பிரித்து சுகவாழ்க்கைப் பெறும்படி செய்துவிடல் வேண்டும். நீதியும், நெறியும், கருணையுமமைந்த இப்பிரிட்டிஷ் ஆட்சியில் ஏழைப் பூர்வக் குடிகளை வஞ்சின சத்துருக்கள் வசமும் அவர்களதிகாரத்துள்ளும் விட்டிருப்பது பூர்வ விவேகக் குடிகளுக்கு அழகாகாவாம். நாட்டுப்புறங்களிலெல்லாம் யூனியன் பஞ்சாயத்தென்பதை ஏற்படுத்த முயல்வது யாவும் பூர்வ ஏழைக்குடிகளை தங்களதிகாரத்துள் அடக்கி ஏவல் வாங்கி தாங்கள் சுகம் பெறவும், ஏழைக்குடிகள் கல்வி கற்று முன்னேறாமல் பாழடைவதற்குமே அன்றி சகலரும் பொதுவாய சுகமடையும் முயற்சியன்று. இவ்வந்தரங்க கேட்டை உணராது விட்டுவிடுவதாயின் நாட்டுப்புறங்களிலுள்ள சாதிபேதமில்லா ஏழைக்குடிகள் இன்னும் நசிந்துப் பாழடைந்துவிடுவார்கள். முளையிற் கிள்ளுவதே எளிது. மரமாயப்பின் வெட்டுவது கடிது. ஆதலின் சாதிபேதமுள்ளோர் பஞ்சாயத்துள்ளும், அவர்களதிகாரத்துள்ளும் சாதிபேதமில்லாப் பூர்வக் குடிகளை சேர்க்கவிடாமலும் அவர்களதிகாரத்திற்குட்படவிடாமலும் வேறுபிரித்து விடவேண்டிய முயற்சியில் சாதிபேதமில்லா விவேகிகள் யாவரும் முன்னேறும்படி வேண்டுகிறோம்.

- 5:11; ஆகஸ்டு 23, 1911 -