பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/431

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 383
 

சத்துருக்கள் மத்தியில் கிணறுகள் வெட்டி தன்மஞ்செய்யவேண்டுமென்பது வயிறாறசோறு கிடைக்காவிடினும் தண்ணீர் மொண்டே தாகவிடாய் தீர்த்துக் கொள்ளுவதற்கோ, அன்றேல் அன்னியதேசஞ் சென்றேனும் வயிறாறப்புசித்துத் தாகமாறவருந்தி சுகசீவனம் பெறுவோரைக் கிணற்றைக்காட்டிப் போகவிடாமல் தடுப்பதற்கோவென்று சந்தேகிக்க வேண்டியதாயிருக்கின்றது.

- 5:21: நவம்ப ர் 1, 1911 -


235. கருணைதங்கிய பிரிட்டீஷ் ஆட்சியார் கண்ணோக்கம் வேண்டும்

எவர்மீதென்னில், சாதிபேத மென்னும் சங்கையிராது வாழும் ஆறுகோடி மநுகுலத்தோர் மீதேயாம். யாதுக்கோவென்னில் பலவகை சாதி பேதத்தோர் வாழும் இத்தேசத்தில் அவரவர்கள் கஷ்ட நஷ்டங்களைப் போக்கி ஆதரிப்பதற்கு அவரவர்களுக்குள் ஒவ்வோர் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சலர்களிருந்து வேண சுகங்களைத் தேடிவைக்கின்றார்கள்.

இச்சாதிபேதமில்லா ஆறுகோடி மக்களின் கஷ்டநஷ்டங்களை அண்ணாந்து பார்ப்பவர்களும் கிடையாது, அவர்களுக்கு என்ன குறையென்று கேழ்ப்பதுவும் கிடையாது. ஆயினும் சாதிபேதமுள்ளக் குடிகள் சாதிபேதம் இல்லாக் குடிகளைக் கண்ணோக்கமுற்றுப்பார்ப்பதுயாதெனில் சுத்த நீரைமொண்டுகுடிக்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும், பாழ்படுத்துவதுடன் அன்னிய தேசங்களுக்குஞ் சென்று பிழைக்கவிடாமலும் தடுத்துக் கொல்லாமற் கொன்றுவருவதே அவர்களது கருணையுங் கண்ணோக்கமுமாகும்.

மற்றும் சாதிபேதம் உள்ளவர்களிற் சிலர் தாழ்ந்த வகுப்போரை உயர்த்தப்போகின்றோமென்னும் தம்பட்டமடித்துத் திரிகின்றார்கள். அவ்வகை உயர்த்தப்போகின்றோம் என்பவற்றுள் பறைய ரென்போரை ஐயங்காரென உயர்த்தப்போகின்றதா, சண்டாள ரென்போர்களை ஐயரென்றுயர்த்தப் போகின்றதா, தீயரென்போரை சாஸ்திரியென்று உயர்த்தப்போகின்றதா விளங்கவில்லை . அல்லது தங்களைப் போல் பி.எ. எம்.எ பட்டங்களில் உயர்த்தி தங்களுடன் சமானப்படுத்திக் கொள்ளுவதா, யாதும் விளங்கவில்லை. இவர்களது காரியங்களை நோக்குங்கால் தாழ்ந்த வகுப்பார் தாழ்ந்து வகுப்பாரென்றே உறுதிபெறத் தாழ்த்திக்கொண்டு தங்களை உயர்ந்த சாதியோர், உயர்ந்த சாதியோரென உயர்த்திக்கொள்ளுமோர் உபாயமேயன்றி வேறில்லை.

யதார்த்தத்தில் ஏழைகளை சீர்திருத்துகின்றவர்களாயின் எதினால் அவர்கள் தாழ்த்தப்பட்டார்கள், எதனால் அவர்கள் முன்னுக்கு வராமலிருக்கின்றார்கள், இத்தகையார் சீர்கெடுவதற்குக் காரணமென்னையென்றும் விளக்கி பழைய சீருக்குக் கொண்டுவருவார்களாயின் கருணை தங்கிய பரோபகாரிகளே யாவர். ஏழைகுடிகள் தாழ்ந்துள்ள நிலையின் காரணங்களைக் கூறாது தாழ்ந்தவர்களை உயர்த்தப் போகின்றோமென்பது காலமெல்லாம் தாழ்ந்தவர்களென்று குறிப்பிடுவதற்கேயாம். சாதிபேதமுள்ள ஆயிரம்பேர் ஏழைகளை சீர்திருத்த முயலுகிறோமென்பது ஓர் மிஷநெரி துரைமகன் திருத்தலுக்கு சமமாமோ, ஒருக்காலும் அவர்கள் கருணைக்கு நிகராவாம். காரணம் சாதிபேதமற்றப் பொறமெகுணமில்லாதவர்களாதலின் அவர் ஒருவருக்கு இவர்களாயிரம்பேர் நிகராகார்களென்பதே.

இஃது பெரியசாதியோர்க ளென்போரெல்லோருங் கூடி சிறிய சாதியோரை உயர்த்தப்போகின்றோமென்று பத்திரிகைகளில் படாடம்ப மடித்து ராஜாங்கத்தோருக்குத் தெரிவித்துக் கொள்ளுவதேன்றி யதார்த்தத்தில் உயர்த்துவது ஒன்றுங் கிடையாது.

யதார்த்தத்தில் ஏழைமக்களை உயர்த்துங் கருணை இவர்களுக்குள் தோற்றியிருக்குமாயின் பொதுவாயுள்ள கிணறு குளங்களில் சுத்தநீரை மொண்டு குடிக்குங் கருணைவையார்களா, இல்லையே, சுத்தநீரைமொண்டு குடிக்கவிடாத லோபிகளாம் பெரியசாதிகளென்போர் தாழ்ந்தவர்களை உயர்த்தப்போகின்றோமென்பது இராஜாங்கத்தார் மெச்சு மொழியேயன்றி வேறன்று.