பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறப்புரை / xlv
 

படைத்தார் என்று யாராலும் நிரூபிக்க முடியாது. உலகம் பரிணமித்ததே அன்றி படைக்கப்பட்டதல்ல. கடவுளால் ஒரு பயனுமில்லை. (பி.ஆர். அம்பேத்கார், புத்தரும் அவர் தம்மமும் - தமிழாக்கம் 1994, ப.213).

என்று விளக்கி ‘பழைய கர்ம வினையே இப்போதைய இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்ற தத்துவமானது எதிர்கால வாழ்வைக் கட்டுப்படுத்துகிறது என்னும் கோட்பாடு நேர்மையற்றது. ஏழையரின், தாழ்ந்தோரின் நிலைக்கான பொறுப்பிலிருந்து அரசையும் சமூகத்தையும் தப்பிக்கச் செய்யும் ஒரே நோக்கமாகும் (அதே நூல், பக். 302-303)” என்று புத்தர் கூறியதை டாக்டர் அம்பேத்கர் எடுத்துக் காட்டுகிறார்.

வாழ்வாங்கு வாழ அன்பு, அறம், அறிவு, ஒழுக்கம், தியாகம் ஆகியவற்றை போதித்த புத்தரே சிறந்த சிந்தனையாளரும் அருளாளருமாவார் என்று ஏற்றுக்கொண்ட பண்டிதர் அயோத்திதாசர் தமிழகத்தில் பவுத்தம் வளர வித்தூன்றி ஐம்பது ஆண்டுகளில் பவுத்தம் தழைத்தோங்கும் என்று கூறிச்சென்றார். பேரறிஞர் அம்பேத்கர் அதைச் செழிக்கச் செய்திருக்கிறார். இந்திய தேசத்திற்கு வன்முறையற்ற, கருணைமிக்க நல்வாழ்விற்கு பாதைகாட்டிச் சென்ற இக்கற்றறிந்த பெரியார்கள் பாராட்டத்தக்கவராவார்கள். தமிழகமெங்கும் பகுத்தறிவைப் பரப்பிய பெரியார் ஈ.வே.ரா. அவர்களும் புகழுக்குரியவராவார்.

மக்களிடையே பிணக்கும் பகைமையும் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கையும், மதப்பற்றும், சாதிவெறியுமே என்பதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. மக்களுக்குள் மனிதாபிமானம் நிலவி நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டால் ‘மதம்’ தானாகவே மறைந்துவிடும். மத சாதி கலவரங்கள் கடந்தகால வரலாறாக ஆகிவிடும். இதற்கு கடவுள், மத, சாதி தேவையா அல்லது அன்பும் அறிவும் செறிந்த ‘மனித நேயம்’ தேவையா என்பதுதான் அயோத்திதாசரின் சிந்தனைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடங்களாகும்.

அயோத்திதாசர் என்ற நல்ல சிந்தனையாளரின் கருத்துகளைத் தமிழுலகத்திற்கு கிடைக்கச் செய்திருக்கும் நண்பர் ஞான. அலாய்சியஸ் அவர்களைத் தமிழ்நாடு என்றென்றும் நினைவில் கொள்ளும். தமிழக மக்கள் இதைப் பெரிதும் விரும்பி வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. சிறப்புரை வழங்க எனக்கு வாய்ப்பளித்தமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை
வாழ்த்துடன்
அன்பு பொன்னோவியம்