பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/471

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 423
 

தேசமாகிய இந்தியாவிற்கு சுயராட்சியங் கொடுப்பதாயின் என்னென்னக் கேடுகள் விளையுமோ வென்பதை அவரவர்களே யூகிக்கவேண்டியதேயாம்.

சுயராட்சியத்தை விரும்புவோர் சுயராட்சியத்தின் ஐக்கியத்தை முதலாவது விரும்ப வேண்டும். அவ்வகை விரும்புவோர் ஒவ்வோர் கவர்ன்மெண்டு ஆபீசுகளிலும் யூரோப்பியர் இத்தனைபேர், இந்துக்கள் இத்தனைபேர், மகமதியர்கள் இத்தனைபேர் கிறிஸ்தவர்கள் இத்தனைபேர் பௌத்தர்கள் இத்தனை பேர் இருக்கவேண்டுமென முடிவுக்குக் கொண்டுவந்துசகலரும் சகோதிரவாஞ்சையில் ஐக்கியம் பெற்று பேதமற முன்னேறுவார்களாயின் ஓர்கால் சுயராட்சியம் நிலைபெறுமேயன்றி வேறுவகையால் நிலைபெறாது என்பது திண்ணம். ஆதலின் சுயராட்சியம் விரும்புவோர் இராஜவிசுவாசத்தில் நிலைத்து சூழவிருக்கும் மக்களின் ஒற்றுமெயை விரும்பல்வேண்டும்.

- 6:11: ஆகஸ்டு 21, 1912 -


268. இராஜாங்க சீர்திருத்தம் முந்த வேண்டுமா குடிகள் சீர்திருத்தம் முந்தவேண்டுமா

குடிகள் சீர்திருத்தமே முந்தல் வேண்டும். அதனது கூட்டமும் ஒழுக்கமுங்கொண்டு இராஜாங்க சீர்திருத்தந் தோன்றும். அதாவது நீருயர வரப்புயரும், வரப்புயர பயிறுயரும், பயிறுயர் குடியுயரும், குடியுயர் கோனுயருமென்பது அனுபவக்காட்சியாதலின் குடிகளினது ஒற்றுமெயும் சீர்திருத்தமுமே முந்தல் வேண்டும். அதன் பின்னர் குடிகளது குறைவு நிறைவுகளையும், கஷ்டநஷ்டங்களையுஞ் செவ்வைசெய்து காப்பதற்கு இராஜங்க சீர்திருத்தந்தோன்றும். அவ்வகையாயக் குடிகளைக் காக்க இராஜாங்கத் தோன்றியுங் குடிகள் கோணுமாயின் இராஜாங்கமுங் கோணலுற்றே பின்னர் சீர்திருத்தும், யாதென்னில் குடிகளிடத்து துஷ்ட கிருத்தியந் தோன்றுமாயின் இராஜாங்கத்தின் சிஷ்டை கிருத்தியந் தோன்றியே தீரும். அக்காலத்தில் இராஜாங்கத்தோர் சிட்சிக்கின்றார்களே சிட்சிக்கின்றார்களே, எனக் கூச்சலிடுவது வீண் கோஷமேயாம்.

இதன் முன்னரே குடிகளுக்குள்ள ஒற்றுமெயும் அன்பும் சீவகாருண்யமும் பெருகநிற்குமாயின் இராஜாங்கத்தின் அன்புங் காருண்யமுங் கவிழ்ந்து நிற்கும். அங்ஙனமின்றி குடிகள் ஒற்றுமெயற்றும், காருண்யமற்றும் இருக்குமாயின் நான் பெரியசாதியான், நீ சிறியசாதியான் என்னும் சாதிகர்வம் பெருகியும், நான் தனவான், நீ ஏழை என்னும் தனகர்வம் பெருகியும், நான் கல்வியில் மிகுத்தோன், நீ கல்வியில் சிறுத்தவன் என்னும் வித்யாகர்வம் பெருகியும், நான் பெரிய உத்தியோகஸ்தன் நீ சிறிய உத்தியோகஸ்தனென்னும் உத்தியோக கர்வம் பெருகியும் எங்கள் சாமி பெரியசாமி உங்கள் சாமி சிறியசாமியென்னும் மதகர்வம் பெருகியும் எழும்பும் துற்குணத்தாலும் தற்செயலாலும் மாறாப்பொறாமெயுந் தீரா பற்கடிப்புந் தோன்றி குடிகள் சீர்கெட்டிருக்குமாயின் அவற்றை சீர்திருத்துவதற்கும், காப்பதற்கும், சாதிகர்வம் அற்றவர்களும், தனகர்வம் அற்றவர்களும், வித்தியாகர்வம் அற்றவர்களும், உத்தியோக கர்வம் அற்றவர்களும், மதகர்வம் அற்றவர்களுமாகிய இராஜாங்கத்தோரே நிலைக்கத் தோன்றல்வேண்டும். அதனால் சாதிகர்வமுள்ளோரை சாதிகர்வமற வடக்கியாளவும், மதகர்வமுள்ளோரை மதகர்வமற அடக்கியாளவுங்கூடும்.

சாதிவூழலும் மதவூழலும் நிறைந்துள்ள தேசத்தில் இவ்விரண்டுமற்ற தன்னவர் அன்னியர் என்னும் பேதம்பாரா அரசே நிலைத்தல் அழகாம்.

இவற்றுள் சாதிகளினால் உண்டாம் சீர்கேடுகளும், மதங்களினால் உண்டாம் சீர்கேடுகளும், வித்தைகளினால் உண்டாம் சீர்கேடுகளும், விவசாயத்தினால் உண்டாம் சீர்கேடுகளும் இவ்விந்திய தேசத்துள் தற்காலம் நிறைந்துள்ளதன்றி மற்றும் எத்தேசத்திலும் கிடையாது. இத்தகைய சீர்கேடுகளை குடிகளே முன்னின்று சீர்திருத்திக்கொள்ள வேண்டும். இவ்வுள் சீர்திருத்தங்களை குடிகளே முந்தி செய்துக்கொள்ள வெளி தோன்றுவதே அழகாம். அங்ஙனமின்றி