பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/480

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
432 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

சுதேசிகளுக்குள் சுயராட்சியம் வேண்டுமென்று கூச்சலிட்டவர்கள் யதார்த்த சுதேசிகளாயிருப்பார்களாயின் அவர்களது கருணையைத் தற்காலதந் தோன்றியுள்ள பஞ்சகாலத்தை நோக்கி ஏழைமக்களைக் காப்பார்கள். இத்தகைய காலத்தில் ஏழைமக்களை நோக்காது மற்றும் எங்களுக்கு சுதேசியம் வேண்டுமென்னுங்கால் இதன் குறைகள் யாவும் இன்னும் சரிவர வெளிவந்து ஆட்சேபித்தே தீருமென்பது திண்ணம் திண்ணமேயாம்.

- 6:20; அக்டோபர் 23, 1912 -


274. சுதேசிகளென்போர் யார்! சுயராட்சியம் என்பது என்னை !!

சுதேசிகள் என்பது தேசத்திற்கு சுதந்திரமுள்ளவர்கள், தேசப் பூர்வக் குடிகள், தேசத்திலேயே பிறந்து வளர்ந்து அதன் பலனை அநுபவித்துவந்தவர்கள், இவர்களையே சுதேசிகள் என்றும், சுயதேசவாசர்கள் என்றுங் கூறப்படும். மற்ற காலத்திற்குக்காலம் இவ்விடம் வந்து குடியேறியவர்கள் பரதேசிகளே. அதாவது அவர்கள் அன்னியதேசவாசிகளேயாவர்.

குடியேறி நெடுங்காலமாகிவிட்டபடியால் அவர்களையும் சுதேசிகள் என்று அழைக்கலாமென்றாலோ அவர்களுக்குப் பின் காலத்திற்குக்காலம் இவ்விடம் வந்து குடியேறி நூறுவருடத்திற்கு மேலாகக் காலங்கழிப்பவர்களையும் சுதேசிகள் என்றே கூறத்தகும். அங்ஙனம் அவர்களை நீக்கி ஆயிர வருடங்களுக்கு மேற்பட்டகாலமாக இருப்பவர்களாகிய எங்களை மட்டிலும் சுதேசிகளென்று எண்ண வேண்டும் மற்றவர்களை சுதேசிகளென்று அழைக்கலாகாது என்று கூறுவதற்கு ஆதாரமில்லை. ஆதலின் இத்தேசப் பூர்வக்குடிகளும் இத்தேசத்தை சீர்பெறச்செய்து, அதன் பலனை அநுபவித்து வந்தவர்களும் யாரோ அவர்களையே பூர்வக்குடிகளென்றும், சுயதேசவாசிகளென்றும் சுதேசிகளென்றும் கூறத்தகும்.

அவர்கள் யாரென்னில் தமிழ்பாஷையிற் பிறந்து தமிழ்பாஷையில் வளர்ந்து தமிழ்பாஷைக்கு உரியோர்களாக விளங்கும் பூர்வத் திராவிடக் குடிகளேயாகும். மற்றுமிருந்த ஆந்தர, கன்னட, மராஷ்டகரும் பூர்வக்குடிகளேயாயினும் திராவிடர்களைப்போல் தேசவிருத்தியை நாடியவர்களும், பல தேசங்களுக்குஞ் சென்று பொருளை சம்பாதித்து சுயதேசத்தை சீர்பெறச்செய்தவர்களும், பூர்வ சரித்திரங்களையும், ஞானநீதிகளையும் பல்லோருக்கு உணர்த்தி சுயபாஷையில் எழுதிவைத்துள்ளவர்களும், சாதிபேதமென்னுங் கொடியச்செயலைப் பூர்வத்தில் இல்லாமல் எவ்வகையாக வாழ்ந்து வந்தனரோ நாளதுவரையில் வாழ்ந்தும் வருகின்றனரோ அவர்களே யதார்த்த சுதேசிகளும் பூர்வக் குடிகளுமாவர்.

திராவிடராம் தமிழ்பாஷைக்குரியவர்களுக்குள் சாதிபேதமென்னும் நூதனக்கட்டுப்பாட்டில் அமைந்திருப்போர்களைப் பூர்வக்குடிகளென்றாயினும் சுதேசிகளென்றாயினும் அழைப்பதற்கோ ஏது கிடையாது. எவ்வகையில் என்பரேல் அன்னிய தேசத்திலிருந்து இத்தேசத்தில் வந்து குடியேறிய நூதனசாதிகளையும், நூதன மதங்களையும் உண்டு செய்துக்கொண்டு சீவிப்போர்களுடன் உடைந்தையாகச் சேர்ந்துக்கொண்டு தேசத்தைப் பாழ்படுத்த ஆரம்பித்துவிட்டபடியினாலேயாம்.

இத்தேசத் திராவிடர்கள் அன்னிய தேசத்தோர் சாதி கட்டுக்குள் அடங்கினபடியால் ஒற்றுமெய்க் கேடும் அவர்கள் மதத்தைச் சார்ந்துவிட்டபடியால் அவர்களால் ஏற்படுத்தியுள்ள சாமிகள் கொடுப்பாரென்னும் சோம்பலால் முயற்சி என்பதற்று வித்தியா விருத்தியையும் விவசாய விருத்தி, வியாபார விருத்திகள் யாவையும் பாழ்படுத்தி தேசத்தையுஞ் சீர்கெடுத்து விட்டார்கள். இன்னும் சீர்கெடுத்தே வருகின்றார்கள். தேசத்தையும் தேசமக்களையும் எப்போது சீர்கெடுக்க ஆரம்பித்துக்கொண்டார்களோ அச்செயல் கொண்டு அவர்களையுஞ் சுதேசிகள் என்று கூறுவதற்கு ஆதாரமில்லை.