பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/510

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
462 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

அவர்கள் கூட்டத்திலுங் குடியர்கள் இருக்கின்றார்களே, நம்மெய்த் திருடன் என்றெண்ணி தூரவோடியிருப்பானாயின் அவர்கள் கூட்டத்திலுந் திருடர்கள் இருக்கின்றார்களே, நம்மெய் பொய்யன் என்றெண்ணி தூரவோடியிருப்பானாயின் அவர்கள் போதனாசெயலில் பொய்யர்களாகவே விளங்குகின்றார்களே, நம்மெக் கொலைஞர் என்றெண்ணி தூரவோடி இருப்பானாயின் அவர்கள் சாஸ்திரங்களைக்கொண்டே பெருங் கொலைஞர்களாக விளங்குவதுடன் நாளது வரையில் கொலைக்குற்றங்களுக்கு ஆளாகின்றார்களே, நம்மெ விபச்சாரியென்று தூரவோடி இருப்பானாயின் அவர்களிலும் விபச்சாரிகள் அனந்தம் இருக்கின்றார்களே, நம்மெப் புலால் புசிப்பவனென்று தூரவோடியிருப்பானாயின் கொழுத்த பசுக்களையுங் கொழுத்தக் குதிரைகளையும் கொழுத்த மனிதர்களையுஞ் சுட்டுத்தின்றதாக சரித்திரமிருப்பதுடன் நாளது வரையில் மாட்டுப்புலாலையும் ஆட்டுப்புலாலையுந் தின்று வருகின்றார்களே. இவ்வகையாக சகல இழிச்செயல் நிறைந்துள்ளவன் நம்மெக் கண்டவுடன் தூரவிலகியோடுவதைக் காணில் ஏதோ பொறாமெயும் பற்கடிப்பும் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தன்னை உயர்ந்தவனைப்போல் அபினயித்து நம்மெத் தாழ்ந்தவனெனப் பகட்டுகின்றானென்று எண்ணி இகழுவானன்றி மகிழவும் புகழவுமாட்டான் என்பது திண்ணம்.

இன்னுமோர் விவேகியிடஞ்சென்று தன்னுடைய சாதி கர்வத்தினால் அருகில் உழ்க்காராது தூரவிலகி உழ்க்காருவானாயின், அவன் துற்செயலைக் சுண்ட விவேகி ஆ ஆ, இவனென்ன தன்னை பி.ஏ. எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் குடும்பத்தோனென்றெண்ணி தூரவிலகி உழ்க்கார்ந்திருப்பானாயின் அவர்களைப் போல நம்மவரும் பி.ஏ. எம்.ஏ. பட்டங்களைப் பெற்றிருக்கின்றார்களே, இலக்கண இலக்கியங் கற்ற வித்துவான்கள் என்றெண்ணி தூரவிலகி உழ்க்கார்ந்திருப்பானாயின் அவர்களுக்கு மேலாய இலக்கண வித்துவான், இலக்கிய வித்துவான்களும் நம்மவருக்குள் இருக்கின்றார்களே, வைத்தியத்திலும் சோதிடத்திலும் வல்லவர்கள் என்று எண்ணி தூரவிலகி உழ்க்கார்ந்திருப்பானாயின் அவர்களிலும் மேலாய சோதிட வல்லவர்களும் அவர்களுக்கு மேலாய வைத்திய வல்லவர்களும் நம்மவர்களுக்குள்ளிருக்கின்றார்களே, ஞானத்திலும் நீதியிலும் சிறந்தவர்களென்றெண்ணி தூரவிலகி உழ்க்கார்ந்திருப்பானாயின் ஞானநெறியிலும் நீதிநெறியிலும் அவர்களுக்கு மேலானவர்கள் நம்மவர்களுக்குள்ளிருக்கின்றார்களே, சுத்த புசிப்பும் சுத்தவுடையும் உடையவர்கள் என்றெண்ணி தூரவிலகி உழ்க்கார்ந்திருப்பானாயின் இவனுக்கு மேலாய சுத்த புசிப்பும் சுத்த ஆடையும் நாமணைந்திருக்கின்றோமே அங்ஙனமிருக்க எத்தகைய இழிவைக்கண்டு நமதருகில் உழ்க்காராது தூரவிலகி உழ்க்கார்ந்தானென்று உசாவுங்கால் அவனுக்குள்ளப் பொறாமெயும் பற்கடிப்புமே அவனைத் தூரவிலக உழ்க்காரவைத்ததன்றி வேறொன்றுமில்லை யென்றும் இகழ்வுகொள்ளுவானேயன்றி அச்செயலுக்கு மகிழ்ச்சியும் புகழ்ச்சியுங் கொள்ளமாட்டான்.

இத்தகைய வஞ்சினமும் பொறாமெயுங் கொண்டு மநுக்களை மநுக்களாக நேசிக்காத தேசம் தென்னிந்தியாவேயன்றி உலசிலுள்ள எத்தேசங்களிலுங் கிடையாது. சாதி வித்தியாசமுள்ள பொறாமெயும் வஞ்சின மிகுத்தச் செயல் அந்தந்த தேசங்களில் இல்லாதிருக்கின்றபடியால் சகல பாஷை மக்களும் ஒற்றுமெயுற்று சீருஞ் சிறப்பும் பெற்றிருக்கின்றார்கள். தென்னிந்தியாவோ சீருஞ் சிறப்புங்குன்றி அவன் சின்னசாதி இவன் பெரியசாதியென்னும் துன்னாற்றங்களே பெருகிவருகின்றபடியால் ஒருவரைக் கண்டால் மற்றொருவர் சீறுகிறதும், ஒருவரைக்கண்டால் மற்றொருவர் முறுமுறுக்கிறதும், ஒருவரைக் கண்டால் மற்றொருவர் சினந்து குரைக்கிறதுமாகியச் செயல்களால் வித்தைகளுங்கெட்டு விவசாயங்களுங் கெட்டு வித்தையில்விருத்திப்பெற்றவர்கள் அவ் வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்காமலும் விவசாயவிருத்தியைக் கற்றவர்கள் அவ்விவசாய வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்காமலும் தாங்கள் சீரழிவதுடன் தங்கள்