பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/521

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 473
 

தலைகுட்டை கட்டலாயிற்று, ஒருதேசம் விட்டு மறுதேசம் போகாதவர்களெல்லாம் இருப்புப்பாதை ரதங்களிலும் புகைக்கப்பல்களிலுமேறி பற்பல தேசங்களுக்கும் போகலாயிற்று, தருப்பைப் புல்லும் சுள்ளி விரகுகளும் கைகளிலேந்தி வீதிவீதியாய்த் திரிந்தோரெல்லாந் தங்கள் கைகளில் வெள்ளி பென்சல், பொன் பேனாக்களைப் பிடிக்கலாயிற்று, அடுத்த வூர் சங்கதியை ஆறுமாதமாகியுந் தெரிந்துக் கொள்ள இயலாதவர்கள் ஆறுமாதத்தியப் பிரையாண ஊர்சங்கதிகளை அரைமணிநேரத்தில் தெரிந்துக் கொள்ளலாயிற்று, நகரங்களிலெல்லாம் நல்ல நீர் கிடையாது உவர் நீரை மொண்டு குடித்தோரெல்லாம் சுத்த நீர் குடித்து சுகிக்கலாயிற்று. மற்றும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரால் குடிகளுக்கு செய்துவரும் நீர்வசதிகளையும், பாதை வசதிகளையும், வைத்தியசாலை வசதிகளையும், வித்தியாசாலை வசதிகளையும் அதனதன் சுகங்களையும் வரையவேண்டின் ஓர் புத்தகரூபமாகிப்போம். தங்களைப்போல் பிறருஞ் சுகம்பெற வேண்டுமென்று கருதி அன்னையைப் போல் ஆதரித்து வருவது இப்பிரிட்டிஷ் ராஜரீகம் ஒன்றேயாதலின் இவ்விராஜரீகம் என்றும் நிலைத்து சகலமக்களும் சுகம்பெறவேண்டுமாயின் இவ்விராஜாங்கத்தின் மீது விசுவாசத்தை வளர்த்த வேண்டுமென்பது முடிபு.

- 7:2; சூன் 18, 1913 -


293. ஓர் கூட்டத்தோர் எல்லோரும் பல்லக்கு ஏறவேண்டும் என்று எண்ணில் மற்றுங் கூட்டத்தோர் ஏறப்போகாதோ?

ஓர் கூட்ட மனுக்கள் எல்லவரும், பல்லக்கு ஏறவேண்டும் என்னும் எண்ணங்கொண்டு தங்கள் கருத்தை சதா அவற்றில் நிலைத்து விடுவதாயின் பல்லக்கைச் செய்வோனும் அதை எடுப்போனும் இல்லாமற் போவானாயின் பல்லக்கில் ஏறுவதும் அதன் சுகமும் இல்லாமற்போம்.

அவைப்போல் நமது தேசத்துள்ள மனு மக்களுள் சிலர் இராஜாங்க உத்தியோகங்களையே பெற வேண்டும் என்று பி.ஏ. பட்டம் பெறவும் எம்.ஏ. பட்டம் பெறவுமானக் கண்ணுங் கருத்திலேயுமே இருக்கின்றார்கள். அதனால் தேசத்தின் விவசாயமுங் கைத்தொழிலுங் கெட்டுப் பாழடைந்து வருகின்றது. அத்தகையக் கல்வியைத் தேடும் முயற்சியில் தாங்களே முயன்று ஏதேனுங் கலாசாலை வகுத்து அதற்காய செலவிட்டு வேண விருத்தி செய்வார்களா அதுவுங்கிடையாது, மிஷநெறி துரைமக்கள் எங்கெங்கு கலாசாலைகளை வைத்து கல்விவிருத்திச் செய்கின்றார்களோ அங்கங்கு உத்தியோகமும் அமர்ந்துக்கொண்டு கல்வியுங்கற்றுக் கொள்ள முயல்வார்கள். தாங்கள் சம்பாதிக்கும் பணங்களைப் பார்த்து பார்த்து இருப்பில் வைத்து மரணமாவார்கள். அவ்வகை பணம் விரயஞ்செய்வதாயிருந்தால் சீதாகல்யாணம், ருக்குமணி விவாகம், வசந்த உற்சவம் முதலியவற்றில் பாணத்திலும், மத்தாப்பிலும், பந்தத்திலுந் தீய்த்துக் கொட்டுவார்களே அன்றி தேசத்திற்கு வேண்டிய கல்வி விருத்தி, கைத்தொழில் விருத்தி, விவசாய விருத்தியில் தங்கள் தங்கள் கருத்தைச் செலுத்தவே மாட்டார்கள். விருத்தி கருத்துக்கள் யாதோவென்னில் அவன் சாதி கெட்டுப்போய்விட்டான் அகற்றியே விடல் வேண்டும், எங்கள் சாமிக்கு நாமம் பாதம் வைத்திருக்கும். உங்கள் சாமிக்கு நாமம் பாதம் வைக்காமலே இருக்கும், எங்கள் பூச்சு குழைத்துப் பூசும் பூச்சு, உங்கள் பூச்சு பிரித்துப்பூசும் பூச்சு என்னும் அஞ்ஞான விருத்தியையே அதிகரிக்கச்செய்வதுடன், அரசாளவேண்டுமென்னும் ஆசையைமட்டிலும் மிகு பெருக்கிக்கொண்டே வருகின்றார்கள்.

இத்தகையாய எண்ண விருத்தியால் தேசமும் தேசமக்களும் நாளுக்கு நாள் சீர்கெட்டு நாசமடையவேண்டி வருமேயன்றி தேசவிருத்தியும் மக்கள் சுகமடையவேமாட்டாது. எல்லோரும் படித்துக் கொள்ளல் வேண்டும், எல்லோரும் இராஜாங்க உத்தியோகம் பெறல் வேண்டும் என்னும் பேரெண்ணத்தால் வித்தியா விருத்தியும் குறைந்துவருவதன்றி சகலசாதி மக்களும் முன்னேறி சுகச்சீர் பெறுவதற்கு ஏதுவில்லாமற் போய்விடுகின்றது.