பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/523

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 475
 

தென்னசெயலோ விளங்கவில்லை. ஏழைக் கூலிகளை ஆதரிப்பதற்கென்று ஓர் சங்கமுங் கூடியிருப்பதாகத் தெரிகின்றது. அச்சங்கத்தோர் நியாயவாயலாக ஏழைகளுக்கு என்று முயல்வார்களே தவிர இரயில்வே அதிகாரிகளுக்கோர் இடுக்கங்களை உண்டு செய்ய வேண்டுமென்னுங் கெட்ட எண்ணங் கொள்ள மாட்டார்கள். இவைகள் யாவையும் இரயில்வே அதிகாரிகள் தேற ஆலோசித்து ஏழைமக்களை உச்சாகப்படுத்தி ஆதரிப்பதுடன் இரயிலின் போக்குவருத்தையுந் தடையின்றி நடத்துவதே அழகாகும்.

இரயில்வே கம்பனியானது ஓர் வியாபாரக் கம்பனிக்கு ஒப்பாயதேயன்றி வேறன்று. வியாபாரக் கம்பனியில் வேலைசெய்யும் பாகஸ்தனுமுண்டு, பண முதல் அளிக்கும் பாகஸ்தனும் உண்டு. அவ்விருவருள் வேலையை ஊக்கமுடன் செய்து வியாபாரத்தை விருத்திசெய்வோனே மேலானவனாவன். பணமுதல் அளிப்பது பெரிதல்ல, வியாபார வேலையை சோர்வின்றி விருத்தி பெறச்செய்வதே பெரிதாகும். அவை போல் இரயில்வே அதிகாரிகள் பேனாபென்சிலைக் கையிலேந்தி லாபத்தை அதிகப்படுத்திவிட்டோம், முன்னிருந்தோர் எல்லவரும் அதிகப்படுத்தாமற் போய்விட்டார்களென்று எழுதிவிடுவது பெரிதல்ல. இரயில்வே கம்பனி வேலையில் இரவும் பகலுங் கண்விழித்துக் கொண்டு எந்தெந்த வண்டிகள் எந்தெந்த வழியில் விடவேண்டுமென்றும், எந்தெந்த காலத்தில் இஸ்டேஷன்களைவிட்டுப் புறப்பட வேண்டுமென்றும், பாஸஞ்சர்களுக்கு இடுக்கமின்றி எவ்விடங்களில் ஏற்ற வேண்டும் இறக்கவேண்டுமென்றும் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுள்ளதுபோல் கண்ணுங் கருத்துமாகக் கஷ்டப்படுவதே பெரிதாகும்.

இத்தகைபக் கஷ்டப்படுவோரே சரியான பாகத்துக்கு உரியோரேயன்றி வெறுமனே பேனா பென்சில் பிடிப்போர் பாகஸ்தர்களாகார்கள், இரயில்வேயின் போக்குவருத்துக்கெல்லாம் அந்தந்த பழகியத் தொழிலாளர் நடத்திவரவேண்டுமேயன்றி வேறில்லை. ஒவ்வொரு வேலையிலும் அவனவன் பழகி அந்தவேலைகளை சரிவர நடத்துவதற்கு எவ்வளவோநாட் செல்லுகின்றது. அவ்வகைப் பழக்கமுள்ளவர்களை நீக்கிவிடுவதினாலும் ஆட்கள் அதிகமென்று தள்ளிவிடுவதினாலும் மனுமக்களுக்கும் சீவராசிகளுக்கும் வண்டிகளுக்கும் நஷ்டம் உண்டாகிக்கொண்டு வருவது சகலருக்கும் தெரிந்த விஷயமேயாம்.

சிற்சில ரயில்வே அதிகாரிகள் கம்பினிக்கு லாபங் காட்டவேண்டும் எனக்கருதி ஏழைகளின் சம்பளங்களை அதிகரிக்காமலும் ஆட்களைக் குறைத்தும் வீணாலோசனைகளை விரித்து வருகின்றார்கள். அதனால் கம்பனிக்கு நஷ்டமும் அபாயமும் நேருமேயன்றி இலாபந் தரமாட்டாது. ஒவ்வொரு தொழிலிலும் அநுபோகஸ்தர்களைக்கொண்டு நட த்துவது மேலாம். இரயில் வண்டிகள் போகாமல் நின்றுவிடுவதினால் கம்பனிக்கு எவ்வளவோ நஷ்டங்கள் உண்டாகி வருகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் இரயிலேறவரும் ஏழைமக்களுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பதுடன் நஷ்டத்தையுந் உண்டாக்கி வருகின்றது. இவைகள் யாவையும் இரயில்வே அதிகாரிகள் சீர்தூக்கி ஆலோசித்து ஏழை ஊழியர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்து, பஞ்சகாலத்திற் கார்த்து, அவர்களை போஷிக்க வேண்டியது கடனாம். அங்ஙனமின்றி அவர்களை ஓர் விரோதிகளைப் போற் பாவித்து ஒட்டிவிடுவது தாய் தந்தையர் பிள்ளைகளை வீட்டைவிட்டு விரட்டிவிடுவது போலாம்.

சென்னை ரயில்வே கம்பனியின் இடுக்கம் இவ்வகையாக நடைபெறுவதாயினும் சவுத்தின்டியன் இரயில்வே கம்பனியில் பாக்கம், மதுராந்தகம், செங்கல்பட்டு முதலிய ஸ்டேஷன்களில் வந்தேறும் ஏழைக் குடிகளை உத்தியோகஸ்தர்கள் மிரட்டுவதும், அடிப்பதும் அவர்களுக்கு நஷ்டத்தையுண்டு செய்வதுமாகப் பேரதிகாரங்களைச் செலுத்தி வருகின்றார்களாம். இவைகள் யாவையும் இரயில்வே அதிகாரிகள் சற்று நோக்கியே காரியாதிகளை நடத்துவார்கள் என்று நம்புகிறோம்.

- 7:4: சூலை 2, 1913 -