பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/524

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
476 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


295. சென்னையில் நளிர் சுரம்

தற்காலஞ் சென்னையில் தோன்றியுள்ள சுரமானது மலையருவிகளில் தோய்ந்து நிற்கும் நீர்களை யருந்துவோருக்கு முதலாவது நளிருண்டாகி சுரங்கண்டு வயிற்றுள் கட்டி உண்டாவதுபோலவே காணப்படுகின்றது அதனுடன் பொருக்க முடியா மண்டை குடைச்சலும் உண்டாகி வாதைப் படுகின்றார்கள்.

இதனுற்பவத்தை ஆலோசிக்குங்கால் மழையின் குறைவும் நீர்கட்டுண்டு கொதிப்பேறி தணிந்து கிரிமிகள் அதிகரித்து நிற்பதும் குழாய் நீர்களுங் கொதிப்பேறி தணிந்து கிரிமிகளை உண்டு செய்துள்ளதுமாக விளங்குவதுடன் மக்கள் புசிக்கும் பதார்த்தங்களிலும் பலவகைக் கலப்பு சரக்குகளை சேர்த்து விற்பதுடன் இரண்டு நாளில் மூன்று நாள் பலகாரங்களையுங் கடைகளில் வைத்து விற்பனைச் செய்து வருவதால் அவற்றை வாங்கி புசிக்கும் ஏழைமக்களே இச்சுரத்தால் மிக்கப் பீடிக்கப்பட்டு வருந்துகின்றார்கள்.

வியாபாரிகளோ தங்கள் தங்கள் மனம் போனவாறு, அரிசியிற் கலப்பு, பல தானியங்களிற் கலப்பு, நெய்யிற் கலப்பு, எண்ணெயிற் கலப்பு, தேனிற் கலப்புமாகியப் பல்வகைச் செயல்களால் துட்டு பெருகினாற் போதும் குடிகளெக் கேடுகெட்டாலுங் கொட்டும் என்னும் வியாபாரக் கிருத்தியங்களை நடாத்தி வருகின்றார்கள். இவற்றுள் பெரியசாதிகளென வேஷமிட்டுள்ளோர் பணக்காரர்களாகவும் சிறிய சாதிகள் என்று அலக்கழித்துள்ள ஏழைமக்கள் சீர்கெட்டழியவுமான வழி வகைகளையும் வகுத்துள்ளார்கள். அவர்களின் பலகாரக் கதைகளுக்கு பெரும்பாலும் முசுவுருண்டை கடைகளென்றே பெயர், அதாவது இரண்டு நாளைய பலாகாரம் மூன்று நாளைப்பலகாரமாம் மூசடைந்தவற்றை வைத்துக் கொண்டு ஏதுமற்ற பேதை மக்கள் காசு கொடுத்துக் கேட்டவுடன் அம்மூசடிக்கும் பண்டங்களையே எடுத்து கொடுப்பது வழக்கம். அதையறிந்து கொண்ட சில ஏழைமக்கள், இஃது பழையபலகாரமாயிருக்கின்றதே மாற்றிக் கொண்டு கொடுங்கள் என்னில் நீ தீண்டிவிட்ட பலகாரத்தை நாங்கள் வாங்குவோமோ என்று மிரட்ட அக்கம் பக்கத்துக் கடைக்காரரும் விரட்டி அடிக்கின்றார்கள்.

அப்பலகாரங்கள் மூசுண்டிருப்பதுடன் அதன்மேற் படிந்திருக்கும் மண்ணும் மயிருமாகிய தூசுகளையோ சொல்ல வேண்டியது இல்லை. அவைகளை ஏழை மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தக் காசை கொடுத்து வாங்கிப் புசித்து பற்பல வியாதிக்கு உள்ளாகி சுத்ததேகிகள் ஆனோர் க்ஷீணமுற்று மரணத்துக்கு உள்ளாகின்றார்கள்.

நாட்டுப்புறங்களிலுள்ள சாதி வேஷக்காரர்களோ சாதிபேத மில்லாமல் வாழும் ஏழை மக்களை நல்லத் தண்ணீர் மொண்டு குடிக்க விடாமல் அசுத்தம் நிறைந்த குட்டை நீரையும் கால்வாய் நீரையும் புசிக்க வைத்துப் பாழடையச் செய்கின்றார்கள். நகர வாசிகளோ தங்கள் சாதிவேஷத்தால் பழயபலகாரங்களை ஏழை மக்களுக்கு விற்று பணத்தைக் கிரகித்து பாழ்படுத்தி வருகின்றார்கள். பொய்சாதி வேஷத்தையே மெய்ச்சாதி வேஷமென்றும் பெரிய சாதிகளென்று சொல்லிக் கொள்ளுவதே பெரும் பாக்கியமென்று எண்ணித்திரியும் மக்களுக்கு சீவகாருண்ய மென்பதே கனவிலும் கிடையாது. அத்தகையக் கன்நெஞ்சரும் வந்நெஞ்சருமாயக் கூட்டத்தோர் மத்தியில் கருணையே ஒருருவாகவும் நீதியே செங்கோலாகவுங் கொண்டு இராட்சியபாரந் தாங்கிவரும் பிரிட்டிஷ் ஆட்சியில் நெடுங்காலம் பழகியும் அவர்கள் குணா குணங்களை உணர்ந்தும் தங்கள் வெஞ்சினம் மாறாது ஏழை மக்களை இழித்தும் பழித்தும் இடிக்கிடம் ஒடிக்கியும் பாழ்பட வதைத்தும் வருகின்றார்கள். இத்தகைய சீவகாருண்யமற்றக் கொடுஞ் செயல்களை பிரிட்டிஷ் ஆட்சியின் சுகாதாரத் தலைவர்களே கருணை வைத்து ஏழை மக்களை ஈடேற்றல் வேண்டும். உழைப்பாளிகளும் சுகதேகிகளுமானோர் சுகாதாரம் பெற்றிருப்பரேல் தேசமும் அரசும் ஆறுதலுற்றிருக்கும், உழைப்பாளிகளும் சுகதேகிகளுமானோர் பற்பல வியாதிகளால் பீடிக்கப்படுவார்களாயின் அவ்வியாதி மற்றோரையுந்தொடர்ந்து