பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/527

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 479
 

குடிவிஷயத்தில் அஞ்சாதுகுடித்து அக்குத்தூக்கில்லாத ஆணவம் வெழ்க்கஞ்சிக்கில்லா வீராப்பு கொண்டு வெளியுலாவுவதால் பெருங்குடியர்களென்னும் பிரபலப் பெயருண்டாகிவிட்டது. கருணைதங்கிய மிஷனெரி துரைமக்கள் கிருபையால் கல்விகற்று கிஞ்சித்து விவேகமுற்ற பாலியர்களோ சாமிபெயரைச் சொல்லிச்சொல்லி மனிதனைச் சுட்டுதின்று சுராபான மருந்துவோரும், மாடுகளைச் சுட்டுதின்று சுராபான மருந்துவோரும் குதிரைகளைச் சுட்டுத் தின்று சுராபான மருந்துவோருமானவர்களின் மதங்களிற் சேர்ந்துகொண்டு சத்திபூசையென்று சாராயம் வைத்துத் திருட்டுக்குடி குடிப்போர்களும், பிருந்தாவன பூசையெனக் கோழியைக் கொன்று பிரட்டித்தின்று சாராயங்குடித்து பயிரங்கக்கூத்தாடுவோரும், சாமிபிறந்தாரெனக் கோழி, வாத்துகளைக் கொன்று பிரட்டி சாராயங்குடித்து சந்தோஷங் கொண்டாடுவோருமானோர் பொய்யாகிய சாதிவேஷத்தோரைக் கண்டு குடியைக்கற்று குடும்பங்கேடுற்றோர் நீங்க, சாமிவேஷத்தை நம்பிக் குடித்துக் கெடுவோரும் அனந்தமாயதாக விளங்குகின்றது. இக் குடியாலுண்டாங் கேடுகளையும் இழிவையும் சற்றுவுற்றுணர்வானாயின் அன்றே நன்மார்க்கத்தில் நடந்து நற்செயல் புரிந்து நல்ல சுகத்தையடைவான்.

குடியால் அடையுங் கேடுகள் அனந்தமானபோதினும் கூத்துக்கூத்து என்று சொல்லுவதில் பாலியர்கள் கூத்தி, கூத்தி யென்னும் விபச்சாரக் கிருத்தியத்திற்கு ஆளாகும் வழிவகையேயாகும். இவற்றை விரிக்கின் வீணேவிரியுமென்று எண்ணி இம்மட்டே விடுகின்றோம்.

- 7:10: ஆகஸ்டு 13, 1913 -


297. உலகிலுள்ள அரசநீதிகளின் நோக்கும் அந்தந்தக் குடிகளின் போக்கும்

முதலாவது ஐரோப்பா கண்டத்தின் அரசாங்கங்களை நோக்குங்கால் அரசு எவ்வழியோ குடிகளும் அவ்வழியென்பது போல் அரசநீதிமொழிகளைக் குடிகளுந்தழுவி நிலைபிறழா ஒழுக்கத்தினின்று தாங்கள் சீரடைவதுடன் தங்கள் தேசத்தையுஞ் சிறப்படையச் செய்து வருகின்றார்கள்.

இவற்றுள் அமெரிக்கா, ஆஸ்டிரேலியா, ஆபிரிக்கா முதலிய கண்டங்களிலுள்ள அரசர்களுங் குடிகளும் அவ்வகையாய சிறப்பையே தழுவி நிற்கின்றார்கள் என்பதற்குப் போதிய ஆதாரமுண்டு.

மற்றும் மதக்கர்வமும் சாதிகர்வமும் பெருகியுள்ள தேசங்கள் எவைகளோ அவைகள் யாவும் அரசர்கள் நீதிக்கும் அவர்கள் நெறிக்கும் அடங்காது மதத்திற்குத்தக்க மன்றாட்டுகளும், சாதிக்குத்தக்கச் சாக்கு போக்குகளும் வேறுபடுத்துவதால் நீதியும் நெறியும் பிறழ்ந்து சாதியும் சமயமும் மேனோக்கி தேசக்குடிகள் தங்களுக்குத்தாங்களே சீர்கெடவும் தேசம் பாழ்படவுமாகின்றது.

எத்தேசத்தில் மதகர்வமும் சாதிகர்வமும் பெருகிக்கொண்டே வருகின்றதோ அத்தேசத்திற்கு வேறு சத்துருக்கள் கிடையாவாம், தங்களுக்குள் தாங்களே வெட்டி மடிந்து பாழடைவார்கள். இதற்குப் பகரமாக தற்கால சண்டைகளில் பால்கன் கிரீஸ், ரோமேனியர்களே போதுஞ் சான்றாம். பூமியின் ஆசை ஓர்புறம் இருப்பினும் மதகர்வமே மூன்று லட்சத்திற்கு மேற்பட மக்களை துள்ளத்துடிக்க மடித்து பள்ளம் வெட்டி புதைப்பதற்கு ஆளில்லாமல் விடுத்து ஓடோடியும் போயதும் அம்மடிந்தவர்களின் பெண்டு பிள்ளைகள் யாவரையும் பதரவும் கதரவும் வைத்து விலகினின்று வேடிக்கைப் பார்ப்பவர் மதகர்வமுண்ட மல்லர்களே யாவர்.

அரசாங்கங்களே தங்கடங்கள் நீதிதவறி மதபோதகர்க்கு உட்பட்டு மதகர்வம் மேற்கொண்டு தங்களுக்குத் தாங்களே மடிவதாயின் குடிகளென்னப் போக்கில் பிறழ்ந்து சீர்பெறுவார்கள். தேசம் எவ்வகையால் சிறப்படையும். நாளுக்கு நாள் மதக்கர்வங்கொண்ட தேசம் மதத்தாலழிவரென்னும் பழமொழி விளங்க தேசசிறப்பும் மக்கள் சுகமுங் கெட்டு மாளாதுக்கத்தில் அவதியுறுதல் அநுபவமுங் காட்சியுமாகும்.