பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/536

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
488 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

நாடியே நமதபிப்பிராயத்தை வரைந்து வருகின்றோம். அவற்றுள் இத்தேசத்துக் குடிகள் யாவரும் இராஜாங்க உத்தியோகத்திற்குப் பொருந்தியவர்களல்ல என்பதும் எமதபிப்பிராயமன்று, அவர்களுக்குள்ள சாதி சம்மந்தப்பிடிவாதமும் மதசம்மந்த வைராக்கியங்களுமே அவற்றிற்கு கேடாக முன்னிற்கின்றது.

இத்தேசத்துள்ள சாதிபேதமின்றியும் சமயபேதமின்றியும் மனிதர்களை மனிதர்களாக பாவித்து நீதி செலுத்தும் புண்ணிய புருஷர் நூற்றிற்கு ஒருவரோ இருவரோ இருப்பாரன்றி வேறில்லை. இதற்குப் பகரமாக தற்காலம் மைசூரில் திவானாக இருந்துவரும் பெரியோர் ஏழைக்குடிகளின் மீதேமிக்க இதக்கமுற்று அவர்கள் முன்னேற்றத்தையே கருதி மிக்க சீர்திருத்தங்களைச் செய்து வருகின்றார். அத்தகையப் புண்ணிய புருஷரைக்காணின் அவர்களது பாதசேவை செய்வதுடன் மேலும் மேலும் இராஜாங்க உத்தியோகம் உயரவேண்டுமென்றே கோறுவோம். அங்ஙனமின்றி நூறு குடிகள் கெட்டு பாழடைந்தாலும் அடையட்டும், நமது ஒரு குடி பிழைத்தால் போதுமென்னும் கருணையற்ற லோபிகள் மேலாய உத்தியோகங்களைப் பெறுவதாயின் அத்தேசத்திற்கும் தேசமக்களுக்குஞ் சீர்கேடே உண்டாகின்றது, அநுபவமுங் காட்சியுமாயுள்ளதால் பிரிட்டிஷ் ஆட்சியோரே அதிகார உத்தியோகங்களை நடாத்துவது நன்று, நன்று என்றே வரைய துணிவுற்றோம்.

அதாவது ஓர் டிஸ்டிரிக்டுக்கு கலைக்டராக வருவோர் இந்தியதேச சக்கிரவர்த்தியின் ஒர் அம்ஸமும் அந்த டிஸ்டிரிக்ட்டின் அரசனும் அவரேயாவர். ஆதலின் சக்கிரவர்த்தியின் சாதிபேதமற்றச் செயலும் சமயபேதமற்ற குணமும் தன்னவர் அன்னிய ரென்னும் பட்சபாதமற்ற நீதி முதலாக அக் கலைக்டர்களுக்கு இருத்தல் வேண்டும். இரண்டாவது அந்த டிஸ்டிரிக்டுக்கே அரசனாதலால் வல்லபம், தருமசிந்தை, விவேக விருத்தி, விடாமுயற்சி, அற்பநித்திரை, துணிவு, குடிகளது முன்னோக்கத்தைக் கருதி வரியிறைகொள்ளல், ஆகியச் செயல்களை உடைத்தானவர்களாயிருத்தல் வேண்டும். அத்தகைய குணமுஞ்செயலும் உள்ளோர் யாவரென்னில் ஐரோப்பியர்களே யாவர். அதாவது சக்கரவர்த்தி யாரைப்போல் அவர்களுக்குள் சாதி பேதமுங் கிடையாது மதபேதமுங் கிடையாது தன்னவரன்னிரென்னும் பாரபட்சமுங் கிடையாது. குடிகள் வாழுமிடத்தில் புலிகள் வந்து இம்சிக்கின்றது, யானைகள் வந்து அதஞ்செய்கின்றதென்று கேழ்விப்பட்டவுடன் அவ்விடஞ்சென்று அவைகளை விரட்டிக் குடிகளது பயத்தை நீக்கி ரட்சிப்பார்கள், குடிகளுக்கு வெள்ளங்களாலேனும். அக்கினி தகிப்பாலேனும், பஞ்சத்தாலேனும் துன்பமுண்டாகி வருந்துவார்களாயின், இராஜாங்கப்பணவுதவி வருவதற்குமுன் தங்கள் பணங்களை விரயஞ்செய்து அவர்கள் பசியை ஆற்றிரட்சிப்பதுடன் தங்கள் பிராணனை ஓர் பொருளாகக் கருதாது நீரினின்றும் நெருப்பினின்றும் குடிகளைக் காத்து அவர்களுக்கு நேரிடும் ஆபத்தை விலக்குவார்கள். தாங்கள் தேர்ந்துள்ள விவேக விருத்தியில் தேசக்குடிகளும் முயன்று முன்னேறச் செய்விப்பார்கள். குடிகளுக்கு நீர் வசதி, நிலவசதி வேண்டுமாயின் அவற்றை சீர்திருத்தி குடிகளுக்கு சுகமளிக்கும் வரையில் அதே ஊக்கத்தினின்று பாடுபடுவார்கள். அயர்ந்த நித்திரைவரினும் சற்றுரங்கி தேச சீர்திருத்தத்தின் பேரிலேயே விழித்திருப்பார்கள். குடிகளுக்கு வேணசுகம் பெற்றபோதே வரியிறைகளை வசூலிப்பாரன்றி குடிகளுக்கு ஏதொரு பலனுங் கிடையாவிட்டால் அவர்களைத் துன்பப்படுத்தமாட்டார்கள். ஆதலின் இத்தகைய குணநலமிகுத்த ஐரோப்பியர்களே கலைக்டர்களாக வருவார்களாயின் தேசஞ் சீர்பெறுவதுடன் தேசமக்களுஞ் சிறப்புற்று ஆனந்த நிலையை அடைவார்கள்.

இத்தேசத்தோருக்கு கலைக்டர் உத்தியோகத்தைக் கொடுப்பதாயின் சக்கிரவர்த்திக்கு ஒவ்வா சாதிபேதமும் உண்டு, மதபேதமும் உண்டு, பாரபட்சமும் உண்டு. இஃதுள்ளவர்களே அவ்வுத்தியோகத்திற்கு உரியவர்களாகார்கள். மற்றும் வல்லபத்தை நோக்கினாலோ வாயற்படியண்டை ஓர் பூனையாயினும், நாயேயாயினும் வந்து விட்டால் கதவை சாத்தடி, கதவை சாத்தடி, என்போர்கள் ஊருக்குள் புலி வந்துவிட்டது, யானை