பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/540

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
492 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

கேட்பதற்கு ஓர் ஆதாரமுண்டு. காரணம் இத்தேசசீர்த்திருத்த உழைப்பாளிகளும் பூர்வக் குடிகளாயதினாலேயாம்.

இந்துக்களென்போர்களோ இந்திய தேசத்தில் நூதனமாகக் குடியேறி பிழைக்கவந்தவர்களும், நூதனமாய சாதிபேதங்களை உண்டு செய்து தேச, மக்களொற்றுமெயைக் கெடுத்தவர்களும் மதபேதங்களை உண்டு செய்து வித்தியா விருத்தியையும் விவசாயவிருத்தியையும் பாழ்படுத்தியவர்களாவர். இத்தகை நூதனக் குடியேறியவர்கள் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரின் கருணையாலும் அவர்களது பேருதவியாலும் ஆங்கில பாஷையில் தேறி அவர்களால் பற்பல உத்தியோகங்களைப் பெற்று மேலாய அந்தஸ்திற்கு வந்திருந்த போதிலும் இந்திய தேசத்திற்கு அவர்கள் ஏது வழியாலுஞ் சுதந்தரர் ஆகமாட்டார்கள். அதனால் சுய ராஜ்ஜியம் விரும்பற்கு அதிகாரிகளுமாகார், அருகருமாகார். காரணமோ வென்னில் ஏதோர் அதிகாரமுமின்றி தந்திரத்தாலும் மித்திரபேதங்களாலும் பொய்யாய சாதிபேதங்களை உண்டு செய்து அதில் தங்களை தலைமெ வகுத்து தங்கள் குடிகள் சுகம் பெற்றால் போதும் ஏனையக் குடிகள் எக்கேடு கெட்டாலுங்கெடட்டுமென்று அடக்கி ஆண்டு வதைத்து வந்தவர்களாதலால் அத்தகையோர் சுயராஜ அதிகாரத்தையே பெற்றுக் கொள்ளுவார்களாயின் இப்போது பிரிட்டிஷ் அரசாட்சியின் கருணையால் சீருஞ்சிறப்பும் பெற்றிருப்போரெல்லாம் பேரும் ஊருமற்று பிழைப்பிற் கேதுவின்றி இஞ்சித்தின்ற குரங்கைப் போல் பல்லிளித்துப் பாழடைவார்கள். அதனால் தேச சிறப்பும் சகலபாஷை மக்கள் விருத்தியுங் கெட்டு சீரழிந்துப் போவார்களென்பதேயாம்.

மகம்மதியர் சுயராட்சியங் கேட்பதற்கும் பெறுவதற்கும் ஆதாரமுண்டோ வென்னில் இந்திய தேச சிற்சில விடங்களில் அவர்கள் அரசாண்டவர்களாதலால் ஆதாரமுண்டெனினும் அவர்களும் சுய ராஜாங்கத்திற்கு அருகராகார்கள். காரணமோவென்னில் அவர்கள் பெருத்த மதவைராக்கிகளாதலால் இஸ்லாம் ஆனவர்களெல்லவரும் நம்மவர்களென்றும் அல்லாதவர்களை எல்லாங் கொல்லுங்களென்ரே அல்லோகல்லோவென அழித்துப் பாழ்படுத்தி விடுவார்களென்பதேயாம்.

இந்தியக் கிறிஸ்தவர்கள் சுயராட்சியம் கேட்பதற்கும் பெறுவதற்கும் ஆதாரமுண்டோ வென்னில் இராஜாங்கத்தைச் சேர்ந்த மதமாதலால் கிஞ்சித்து ஆதாரம் உண்டெனினும் அதற்கருகராகார்கள். காரணமோவென்னில் கிறிஸ்தவருக்குள் கத்தோலிக்குக் கிறீஸ்தவர்களென்றும் பிராடெஸ்டென்ட் கிறீஸ்தவர்களென்றும் இருவருப்போருண்டு. அவ்விருவரும் ஒருவருக்கொருவர் இப்போதே பொறாமெயும் பற்கட்டிப்பும் உள்ளவர்களாயிருக்கின்றார்களென்பது அவர்களால் வெளியிடும் பத்திரிகைகளாலும் புத்தகங்களாலுமே பரக்க விளங்குகின்றது. அதனால் இராட்சிய பாரமும் இருகட்சியுற்று ஒருவருக்கொருவர் வெட்டி மாய்ந்தே போவார்களென்பதேயாம். ஆதலால் இந்திய தேசத்தில் நூதனமாகத் தோன்றியுள்ள சாதிபேதம் மதபேதங் கட்டோடு ஒழியுமளவும் இந்தியர்களாயினும் இந்துக்களாயினும் மகமதியர்களாயினும் கிறீஸ்தவர்களாயினும் இந்திய தேசத்தை ஆளவருகராகார்கள் என்பதே துணிபு. அதுகொண்டே தற்காலம் ஆண்டுவரும் கருணை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியே நிலைத்து அரசு புரியுமாயின் இப்போது சுகம் பெற்றுவரும் சகல மக்களும் இன்னும் சுகச்சீர் பெற்று ஆனந்தத்தில் நிலைப்பார்களென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 7:20; அக்டோபர் 22, 1913 -


306. இந்திய தேசத்தின் விவசாயக் கேட்டிற்கும் வித்தியா கேட்டிற்குங் காரணம்

இந்திய தேசத்தில் வடயிந்தியமென்றுந் தென்னிந்தியமென்றும் இருவகையுண்டு. இவற்றுள் வடயிந்தியர்கள் வித்தியா விருத்தியிலும் விவசாய விருத்தியிலுங் கூடியவரையில் பிரிட்டிஷ் துரைமக்கள் செய்கைகளைப்