பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/542

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
494 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

தவியும், விவசாயங்களை விளக்கிக்காட்டும் பத்திரிகைகளுதவியும், தானியவுதவியுஞ் செய்து அதே கண்ணோக்கத்தில் உழைத்து வருகின்றார்கள். அவ்வகை நோக்கம் வைத்தும் பெரும்பாலும் பூமிக்குடையவர்களாயிருப்போர் சாதிப்போர்வையை மூடிக்கொண்டிருப்பவர்கள். அவர்களுள் பெரும்பாலோர் தங்களுக்குப் பிள்ளைகளிருக்குமாயின் தங்கள் பூமியின் விருத்தி வழியில் நோக்கவிடாது இங்கிலீஷ் பாஷையைக் கற்று இராஜாங்க உத்தியோக விருத்தியையே நாடவேண்டுமென்றே அநுப்பிவிடுகின்றார்கள், சிலரோ தேசச்சிறப்பையும் மக்கள் விருத்தியையும் நாடாது தங்கள் சுயப்பிரயோசனத்தை நாடி உள்ள பூமிகள் யாவற்றிலும் மணிலாக் கொட்டை என்னும் வேருகடலைப் பயிற்றையே விருத்திசெய்து வேறு தேசங்களுக்கனுப்பும் முயற்சியிலேயே நின்றிருக்கின்றார்கள். ஏதோ சிற்சிலவிடங்களில் இராஜாங்கப் போதனைப்படிக்கு விவசாயத்தை விருத்திசெய்த போதினும் உழைக்கும் பண்ணையாட்களுக்கு அரைவயிற்றுக் கஞ்சிக்குமேல் முழுவயிற்றுக்கஞ்சு கிடையாது. இலட்ச கணக்கான ஏக்கர் பூமிகளை இலட்ச கணக்கான மக்கள் உபயோகித்து வந்தும் அதில் நாலைந்து பெயரே வெளிதோன்றி ஒற்றை நாற்று நடுவின் பயனையும் இரட்டை நாத்து நடுவின் குறைவையுங் கண்டெழுதி யிருக்கின்றார்கள் மற்றையோர்கள் யாவரும் ஏழை உழைப்பாளிகள் ஏது கெட்டு நாசமடைந்தாலும் அடையட்டும் தங்கள் புசிப்பிற்கும் இராஜாங்கத்தோர் வரியிறைக்கும் போதுமான விளைவு விளைந்தால் போதுமென்னும் திருப்திகொண்டு திண்டு திண்ணையில் சார்ந்திருக்கின்றார்கள். பூமிக்கென்று பண்ணையாட்களே முனைந்து வெறுமனேயுள்ள பூமிகளை ராஜாங்கத்தாரிடம் கேட்பார்களாயின் குறைந்த கூலிக்குத் தங்களுக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள் என்றெண்ணி கேட்ட பூமி அவர்களுக்குக் கிடைக்கவியலாத வழிவகைகளைத் தேடிவிடுகின்றார்கள். ஏதோ ஒரு வகையால் பூமி கிடைத்து பயிறுகளை ஓங்கச் செய்வார்களாயின் அப்பயிறுகள் ஓங்காத தீங்குகளைச் செய்து விடுகின்றார்கள். அதற்கும் அஞ்சாது விருத்தி பெறுவார்களாயின் எல்லோரு மொன்று சேர்ந்து அத்தலைவனையே கொல்ல முயலுகின்றார்கள். அவ்வகையாகவே இராகவன் என்னும் ஒருவனை கொன்றும் இருக்கின்றார்கள். இத்தியாதி கஷ்டங்களால் பூமியின் உழைப்பாளிகளும் வித்தையில் ஊக்கமுள்ளோரும் நசிந்து வருகின்றார்கள். அதனால் வித்தியா விருத்திக்குக்கேடும் விவசாய விருத்திக்குக் கேடுமுண்டாகி தென்னிந்தியம் ரூபாயிற்கு மூன்றரைபடியரிசி விற்கும் நிலையில் வந்துவிட்டது.

இத்தகைய பெரும் பஞ்சகாலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரின் கருணையால் வகுத்துள்ள இரயில்வேக்களும் இஸ்டீமர்களும் தொழிற் சாலைகளாம் அச்சியந்திரங்களும், மில்லுகளும், ஷாப்புகளும் இல்லாமற் போயிருக்குமாயின் அந்தந்த தேசத்திலுள்ள மக்களும் மாடு கன்றுகளும் அங்கங்கே மடிந்து மண்ணாயிருப்பார்களன்றி மனிதவுருவாகத் தோன்றார்கள். ஆகலின் தாழ்ந்த சாதியார், தாழ்ந்த சாதியாரென்று வகுத்து பொறமையால் நசித்துவருஞ் செயல்களே வித்தையையுந் தாழ்த்தி விவசாயத்தையந் தாழ்த்திக் கேடடையச் செய்துவருகின்றதென்பதை தென்னிந்திய வித்தியா விவேகிகள் நோக்குவாரென்று நம்புகிறோம்.

- 7:21: அக்டோபர் 29, 1913 -


307. கனந்தங்கிய காங்கிரஸ் கமிட்டியோருக்கும் மகாஜன சபையோருக்கும் விண்ணப்பம்

தற்காலங் காங்கிரஸ் கமிட்டியோரென்றும், மகாஜன சபையோரென்றும் வருஷா வருஷம் கூடிவருங் கூட்டத்தோருள் காங்கிரஸ் கமிட்டியோர் இராஜாங்க சம்பந்தமாய விஷயங்களைப் பேசுவோர்ரென்றும் மகாஜன சபையோர் உள் சீர்திருத்தங்களைப் பேசுவோரென்றுங் கூறுவர்.

இச்சீர்திருத்தக்காரருள் பெரும்பாலோர் மகாஜன சபையிலுள்ளோர் காங்கிரஸ் கமிட்டியிலும் காங்கிரஸ் கமிட்டியிலுள்ளோர் மகாஜனசபை