பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/551

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 503
 

செய்து வரும் ஏழை மக்களை சில படுபாவி கண்காணிகள் அதிக துன்புறுத்தியும் கஷ்டத்தைக் கொடுத்தும் வேலை வாங்குவதாகப் பத்திரிக்கைகளின் வாயிலாகவும் கேள்வியாலும் அறிந்துள்ளோம். ஆயினும் அவர்களுக்குத் தகுந்த கூலி கொடுத்து பசியாறப்புசிக்கச் செய்து வருவதாகவுந் தெரிந்துள்ளோம். அத்தகையக் கூலிகளின் கஷ்டங்களை சில துரைமக்களே தோன்றி நிவர்த்தி செய்து வருவதாகப் பத்திரிகைகளிலுங் கண்டுள்ளோம். இக்கூலிகள் படுங் கஷ்டங்களை நீக்கிக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் கால ஒப்பந்தந் தீர்ந்தவுடன் அவ்விடம் விட்டு நீங்கி விடுவது ஒன்று. அத்தகையோர் பால் கூலிவேலைக்கு செல்லாமலிருப்பது ஒன்று, அவ்விரண்டு செயலே அக்கஷ்டங்களுக்குப் பரிகாரமே அன்றி வேறொன்றுங் கிடையாவாம். தற்காலம் சௌத் ஆபிரிக்காவில் நடந்துவரும் இந்தியர்களுள் கலகம் கூலிகளின் கால ஒப்பந்தம் நீங்கி சுகமாக வாழ்ந்து வருவோர்களால் நேர்ந்து வருவதாகக் காண்கின்றதேயன்றி வேறில்லை. பிச்சை இரந்துண்போனுக்கு சற்று கல்விச்செல்வ மிகுத்தால் பெரிய அதிகாரம் வேண்டுமென்று கேட்பதுபோல கூலிகளாகச் சென்றோருக்குக் கல்விச்செல்வமிகுத்து கோமானாகும் வழிவகைகளைத் தேட முயன்றதைக் கண்ட அவ்விடத்திய ராஜாங்கத்தார் இந்தியர்களை அவ்விடம் விட்டோட்ட வேண்டிய வழிவகைகளைத் தேடுகின்றார்கள். சொத்துக்கள்ளுள்ள இந்தியர்கள் ஏழைக்கூலிகளையும் இழுத்துக்கொண்டு அவர்களையும் பொருந்து துன்பத்திற்காளாக்கி வைத்து விட்டார்கள். தங்களுக்குண்டாகிய கோபாவேஷத்தால் ஈட்டி முனையில் எட்டி உதைப்பதை போல் இராஜாங்கத்தையே எதிர்த்து நிற்க ஆரம்பித்துக்கொண்டே வருகின்றது அக்கஷ்டங்களுக்கு நிவர்த்தியோ வென்னில் அத்தேசத்தைவிட்டு அகன்றுவிடவேண்டியது ஒன்று. அன்றேல் அவ்விராஜாங்கத்தோர் சட்ட திட்டங்களுக்கடங்கி சமயோசிதமாகக் கஷ்டங்களை விளக்கி சுகவழிகளைத் தேடிக்கொள்ள வேண்டியதே நிவர்த்தியாம்.

அத்தகைய நிவர்த்தியில்லாது கொல்லாது கொல்லப்பட்டுவரும் இத்தேசத்தியப் பூர்வ இந்தியர்களாம் ஆறுகோடி மக்களின் அல்லலையும் அவதியையும் விளக்குவாம்.

இந்திய தேசத்தில் நூதனமாகக் குடியேறி நூதன சாதிகளையும் நூதன மதங்களையும் உண்டு செய்துக் கொண்டு அதை அநுசரித்தே மேம்பாடு அடைந்துக் கொண்டுள்ள பராய சாதியோர் பொய்யாய சாதி கட்டுப்பாட்டுக்கு அடங்காமலும் பொய்யாய மதக்கோட்பாடுகளுக்கு ஒடுங்காமலும் இருந்த பெருங்கூட்டத்தோரை தாழ்ந்த சாதியோரென வகுத்துவிட்டு அவர்களை நகரங்களிற் செய்யும் அக்கிரமங்களை முதலாவது காண்க. நகரமென்பது அரசாங்க பீடமென்னப்படும். அவ்வரசாங்கமோ சாதிபேத பொறாமெ என்னும் துர்நாற்ற மற்றவர்களும் நீதியும் நெறியும் அன்பும் பெற்றவர்களுமாகிய பிரிட்டிஷ் அரசாங்கமேயாம், அத்தகைய ராஜாங்கத்தார் வசிக்கும் நகரத்தின்கண் தாழ்ந்த சாதியோரென்று தங்களுக்குத் தாங்களே பிரித்து விட்டவர்களை தாங்கள் உத்தியோகஞ் செய்யுமிடங்களில் அவர்கள் பிள்ளைகளைப் படிக்கவிடாமலும், தாங்கள் தண்ணீர் மொண்டு குடிக்குங் குளம் கிணறுகளில் அவர்களை மொண்டு குடிக்கவிடாமலும், தங்களுக்கு மேளமடிக்கவும் தம்பட்டம் அடிக்கவுமுள்ள ஆட்களை அவர்களுக்கு அடிக்கவிடாமலுந் தாழ்த்தி, அவர்களை எவ்வகையானும் தலையெடுக்க விடாமலே நசித்துக்கொண்டே வருகின்றார்கள். இவ்வகையாகத் தாழ்த்தி நசித்துவருங் கேடுபாடுகள் யாவற்றையும் தற்கால சீர்திருத்தக் கூட்டத்தோரறிவார்களேயன்றி அறியாதவர்களொருவருமில்லை. எல்லாமறிந்தும் தாழ்த்தப்பட்டுள்ளோர் கஷ்ட நஷ்டங்களை இஷ்டமாகவே பாவித்துலவுகின்றார்கள். நகரங்களில் தாழ்த்தப்பட்டுள்ளோரில் சிலர் முன்னேறி சுகமுற்றிருப்பது பிரிட்டிஷ் துரைமக்களின் கருணையாலும் மிஷநெரி கிருஸ்தவ துரைமக்களின் அன்பினாலுமேயன்றி சாதிவேஷமுற்றுள்ள சீர்திருத்தக்காரரால் அன்றென்றே துணிந்து கூறுவோம்.