பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/552

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
504 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


பெரிய சாதிவேஷக்காரரால் தாழ்த்தப்பட்டுள்ளோர், பெரியசாதி என்போர் கடைகளுக்குச் சென்று ஓர்பலகாரத்தைச் சுட்டிக்காட்டி இந்த பலகாரம் வேண்டாம் அந்த பலகாரங்கொடு என்றாலோ, தாழ்ந்த சாதியான் பலகாரத்தைத் தீண்டிவிட்டான், அந்த பலகாரங்களின் விலையை எல்லாம் அவன் கட்டிக்கொடுக்க வேண்டுமென்று அவனை பலவந்தப்படுத்தவும், அக்கம் பக்கத்து பெரியசாதி வேஷக்காரர்களும் சேர்ந்துகொண்டு மிரட்டவும், ஏழை திகைத்து அவமானமடைவதுடன் காலணா பலகாரம் வாங்கப்போனவன் கால்ரூபாயோ அரைரூபாயோ தெண்டங்கொடுக்கும்படி அலக்கழித்து விடுகின்றார்கள்.

மற்றொரு ஏழை தன் பசிக்கு அரையணா கொடுத்து பலகாரத்தைக் கையில் வாங்கிக்கொண்டு சாப்பிடுங்கால் அது பாசித்துப் பூரணமுற்றும், பழைய ரண்டு மூன்று நாளய பலகாரமாயிருக்கின்றது. இதையெடுத்து வேறு கொடுங்கோள் என்றால் அதை நீ தீண்டிவிட்டு நாங்கள் மறுபடியும் அதை வாங்குவோமாவென்று வைய, பக்கத்து சாதிவேஷக்காரனும் வைய, துட்டு கொடுத்த ஏழை நாணமுற்று பலகாரத்தையும் அவன் கடையெதிரில் கொட்டிவிட்டு பசியோடு அல்லலுற்று வீடேகச்செய்கின்றார்கள்.

இத்தகைய சாதிவேஷக்காரர் செய்கைகளால் நகரத்தில் கிஞ்சித்து சுகச்சீர்பெற்று முன்னுக்கு வந்திருப்போரை நாணடையவும் மனங்குன்றவும் செய்து வருவதுமல்லாமல் பாப்பான் என்னும் மேல்சாதி ஒருவனிருக்கின்றான், பறையன் என்னுங் கீழ்சாதி ஒருவனிருக்கின்றானென நந்தன் சரித்திரம் என்னும் ஓர் பொய்க்கதையையும் அரிச்சந்திரன் சரித்திரமென்னும் ஓர்ப் பொய்க் கதையையும் ஏற்படுத்தி வைத்துக்கொண்டு கூத்து மேடைகளில் கேவலப்படுத்தி ஆடுவதும் வீதி வீதியாக இப்பாடல்களைப் பாடி இன்னும் அவர்களை இழிவடையவும், நாணமடையவும் செய்து வரும் இழிவுகளோ சொல்லத்தரமன்று. அரசாங்கத்தோர் வசிக்கும் இடங்களிலேயே இத்தியாதி துன்பங்களையும் இழிவையும் மானக்கேட்டையும் உண்டுசெய்து அவர்கள் தலையெடுக்கவிடாமல் நசித்து வருகின்றவர்கள் இன்னும் நாட்டுவாசிகளை எவ்வகையாற் கொல்லாமற் கொன்று வருகின்றார்கள் என்பதை இனிது விளக்குவாம்.

- 7:29; டிசம்பர் 24, 1913 -

நகர வாசங்களில் இந்திய தேசப் பூர்வக்குடிகளை தாழ்ந்த சாதியோர் என்றும் தீண்டக்கூடாதவர்கள் என்றும் பொய் சாதிவேஷக்காரர்கள் தாழ்த்தி தலையெடுக்கவிடாமற் செய்வதுடன் நூதனமாக இத்தேசத்தில் வருவோர் போவோருக்கும் இவர்களை சுட்டிக்காட்டி இவர்கள் தாழ்ந்த சாதியோர், இவர்களைத் தீண்டப்படாது, அருகில் சேர்க்கப்படாது என்று இழிவுபடுத்தி பொதுவாய சத்திரங்களிலும் ஒண்டவிடாது பலவகையான துன்பங்களைச் செய்து வருவதுடன் இச்சாதி வேஷக்காரர்களே நாட்டுப்புறங்களில் ஜமீன்தாரர்கள் என்றும் மிட்டாதார்கள் என்றும் மிராசுதாரர்கள் என்றும் சுரோத்திரதாரர்கள் என்றும் தங்கள் பேராசையால் பெரும் பூமிகளை வளைத்துக் கொண்டும் அவைகளை உழுது பண்படுத்துவதற்கு ஏதுவில்லா பெருஞ் சோம்பேறிகளாதலால் தங்களால் தாழ்ந்த சாதியோரென்று அழைக்கப்பட்ட ஏழை உழைப்பாளி மக்களையே தங்கடங்கள் பூமிகளுக்கு உழைப்பாளிகளாக்கி கொண்டு அவர்கள் பிள்ளை கலியாணத்திற்கு ஐந்து ரூபா கடன் கொடுத்தால் அவன் பேரபிள்ளை வரையில் வட்டி கணக்குக் காட்டி வேலை வாங்கி வருவதும், தகப்பனிறந்தானென்று இரண்டு ருபா கடன் வாங்கினால் அவன் பிள்ளை வரையில் வட்டிக்கணக்குக் காட்டி வேலை வாங்கிவருவதுமாய அடிமைகளாக்கிக் கொண்டு வட்டி பணத்திற்கு பிள்ளைகளை வேலை வாங்குவதும் பெரிய ஆட்களுக்கு நாளொன்றுக்கு ஓரணா விலை பெறும்படியான தானியங்களைக் கொடுத்து நாள் முழுவதும் கஷ்டமான வேலைகளை வாங்கிக்கொண்டு எலும்புந் தோலுமாகச் செய்து