பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/556

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
508 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

கொடுக்கவேண்டும் என்று தடுத்து சாதிவேஷக்காரனெல்லாம் ஒன்றாய் சேர்ந்துக்கொண்டு ஏழைகளை மிரட்டுவதுடன் மீறிப்போவார்களாயின் மரத்திற்கட்டிப் புளியமலாரில் அடிப்பதும் தொழுவில் மாட்டி துன்பப்படுத்தி வதைக்கின்றார்களே, இத்தகையாய கொடுந்துன்பத்தை செளத்தாப்பிரிக்கா இந்தியர்கள் ஏதேனும் அநுபவிக்கின்றார்களோ. இந்த சங்கதியுங் காங்கிரஸ் கமிட்டியார் அறியாததோ. மற்றுமுள்ள சில ஏழைகள் தெரியாமல் ஓடி கோலார் முதலிய பொன் சுரங்கங்களிலேனும் மில்சுகளிலேனும் உழைத்து பாடுபட்டு வயிராறப் புசித்து சொற்ப பணத்துடன் தங்களூரில் வந்து சேருவார்களாயின், ஆ ஆ தாழ்ந்த சாதியான் முழங்காலுக்குக் கீழே துணிக்கட்டிக்கொண்டு நமது முன்னில் வருகிறான் பார்த்தீர்களா, அவனுக்கு துட்டு கொழுப்பேறி விட்டது, அவனை அடக்கவேண்டுமென சாதிவேஷக்காரனெல்லாம் ஒன்றாய் சேர்ந்துக்கொண்டு அவனைப் புளியமலார்க்கொண்டடிப்பதும், அதிகாரிகளுக்குத் தெரிவிப்பானாயின் இரவில் அவன் குடியுள்ள குடிசைக்கே நெருப்பிட்டுக் கொளுத்தி ஊரைவிட்டோட்டுவதும் மற்றொருவன் ஏதோ தான் சம்பாதித்துவந்தத் தொகையைக் கொண்டேனும் தனது முயற்சியிலேனும் சொற்ப பூமியை சம்பாதித்து உழைத்து பண்படுத்தி பயிரை ஓங்கும்படிச் செய்விப்பானாயின், தாழ்ந்த சாதியான் நமக்கு வந்து வேலை செய்யாமல் பூமிக்குடையவனாகிவிட்டான் இனி தங்களை மதியானென்னும் பொறாமெகொண்டு இரவில் பயிறுகளை மாடுகளை விட்டு மேய்ந்து விடும்படிச் செய்கிறதும் அம்மாடுகளைப் பிடித்து பவுண்டுக்குக் கொண்டு போவானாயின் சாதி வேஷக்காரனெல்லாம் ஒன்றாய் சேர்ந்துக்கொண்டு மடக்கி அவனைக் கொன்றே போடுவதுமானக் கொலைச் செயலையே செய்து வருகின்றார்களே. அதுபோல செளத்தாப்பிரிகா இந்தியர்களை ஏதேனுந் துன்பஞ் செய்கின்றார்களோ. இத்தகையாக நடந்துவருந் துன்பமாயச் செயல்களைப் பத்திரிகைகளிலேனும் கேள்விகளாலேனும் இக்காங்கிரஸ் கமிட்டியார் அறியாததோ. உயர்ந்த சாதியென்னும் பொய்வேடமிட்டுக்கொண்டு தாழ்ந்த சாதியோரென்று வகுத்துவைத்துக்கொண்டுள்ள ஆறுகோடி மக்களையும் பலவகையாயத் துன்பப்படுத்திக் கொன்றுவரும் படியான செயல்கள் ஒவ்வொன்றையும் விரித்தெழுதவேண்டுமாயின் பெரும்புத்தகமாக முடியுமே. இத்துன்பச் செயல்கள் யாவும் இக்காங்கிரஸ் கமிட்டியாருக்குத் தெரிந்த விஷயங்களேயன்றி தெரியாதது ஒன்றுங் கிடையாவாம். இக்காங்கிரசில் பெரும்பாலும் சேர்ந்துள்ளோர் யாவரும் சாதித்தலைவர்களேயாதலின் தங்களால் தாழ்ந்த சாதியோரென்று தாழ்த்திவைத்துக்கொண்ட ஆறுகோடி மக்கள் ஏதுபாடு பட்டு எக்கேடு கெட்டு பாழடைந்து சீர்குலைந்து மடிந்துப்போக வேண்டுமென்னும் எண்ணத்தை உள்ளுக்கு வைத்துக்கொண்டும் நாஷனல் காங்கிரசென்னும் வெறும் பெயரைச் சொல்லிக் கொண்டும் தங்கள் சுயகாரிய நோக்கத்திலே பேசிவருகின்றார்கள். அவைகளுள் செளத்தாபிரிக்கா வெள்ளையர்கள் இந்திய கறுப்பர்களை சாதி வித்தியாசம் பாராட்டி அலக்கழக்கின்றார்களென்றும் இந்தியர்களைத் துன்பப்படுத்துகின்றார்கள் என்றும் தாங்களும் அதற்கு உபபலமாக வொத்தாசை செய்யவேண்டுமென்றும் பரிந்து பரிந்து பேசியிருக்கின்றார்கள். அந்தோ இத்தேசத்திலுள்ள ஆறுகோடி இந்திய ஏழைகள் கண்ணீர்விட்டுக் கதருவதையென்னென்றும் நோக்காது, செளத்தாபிரிக்காவிலுள்ள ஒன்றரை லட்சம் இந்தியர்கள் தங்களுக்குத் தாங்களே படுங்கஷ்டங்களுக்குப் பரிந்து பேச மட்டிலும் ஆரம்பித்தது விந்தையிலும் விந்தையேயாம். சுயதேசத்தோர் படுந் துன்பங்களையும் கேடுபாடுகளையுங் கண்ணோக்கமுறாது புறதேசத் துன்பத்தை மட்டிலும் நோக்கிப் பேசப்புகும் ஓர் கூட்டத்தோருக்கு நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரென்னும் பெயர் பொருந்துமோ, அவர்களே ஆலோசிக்க வேண்டியதேயாம்.

- 7:31: ஜனவரி 7, 1914 -