பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/559

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 511
 

யாவரையும் தாழ்ந்த சாதியோரென வகுத்து அவர்களை தலையெடுக்கவிடாமல் நசித்துப் பாழ்படுத்தியச் செயலால் தேசத்தின் விவசாயங்களும் கெட்டு வித்தைகளும் அழிந்து அவர்களுக்குள்ள சுயக்கியானங்களுமற்று அநீதி மார்க்கமும் பொய்யும் புறட்டும் திருட்டும் வஞ்சகமும் பெருகி இந்திரர் தேயமென்னும் புத்த பூவுலகம் அழிந்துக்கொண்டே வந்தவைகளை பூர்வ சரித்திரங்களினாலும் பூமியின் புதைப்பொருளைக் கண்டறியும் சாஸ்திரிகளாலும் தற்காலம் நிறைவேறி வரும் அநுபவங்களாலுமே தெரிந்துக் கொள்ளலாம்.

இது காரும் சாதித்தலைவர்களின் பொய் போதச் சாதிச் செயலிலும் மதச் செயலிலுமே நம்பி இத்தேசத்தோர் நிலைத்திருப்பார்களாயின் இத்தேசமானது இன்னும் பாழடைந்தே போயிருக்கும் என்பது சத்தியம், சத்தியமேயாம். ஏதோ இத்தேசத்துப் பூர்வக் குடிகளின் புண்ணிய வசத்தால் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நிறைந்தவர்களும் நீதிநெறி அமைந்தவர்களும் சுத்த வீரமுங் கருணையும் உள்ளவர்களாய பிரிட்டிஷ் ராஜரீகம் வந்து தோன்றி வீதியில்லாதிருந்த இடங்களுக்கெல்லாம் வீதிகளை உண்டு செய்தும், நாடுகளழிந்த இடங்களெல்லாம் நாடுகளை உண்டு செய்தும், நகரங்களற்ற இடங்களுக்கெல்லாம் நகரங்களை உண்டு செய்தும், ஏரிகளற்ற இடங்களுக்கெல்லாம் ஏரிகளை உண்டு செய்தும், விவசாயமற்ற இடங்களுக்கெல்லாம் வயல்களைத் தோன்றசெய்து கைத்தொழிலற்ற இடங்களுக்கெல்லாம் கைத்தொழிலை உண்டு செய்தும், கல்வியற்றுக் கிடந்தோருக்கெல்லாம் கல்வி விருத்தி செய்தும் வருவதுடன் இத்தேசத்தோர் பலதேசங்களுக்குஞ் சென்று சுகமடையுமாறு கப்பல் வசதிகளையும் இரயில்வே வசதிகளையும் கடிதப் போக்குவரத்து வசதிகளையும் தந்தி மார்க்க வசதிகளையும் மக்கள் சுகாதார வசதிகளையும் உண்டு செய்து சகல சாதியோரும் பேதமின்றி தங்களைப்போல் சுகமனுபவிக்க வேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் சீர்திருத்திக் கொண்டே வருகின்றார்கள்.

அதனால் இந்தியதேசமெங்கும் சிறப்புற்று நாடுகளெங்கும் களையுற்று நகரங்களெங்கும் புகழ்பெற்று மநுக்கூட்டத்தோர் யாவரும் கல்வியும் நாகரீகமும் சுகாதாரமுமுற்று நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றார்கள். இத்தகைய பல சாதியோர் முன்னேற்றம் பிரிட்டிஷ் ஆட்சியோருக்கு ஆனந்தமும் சாதித்தலைவர்களுக்குப் பொறாமெயே மிகுத்து வருகின்றது. காரணமோ வென்னில் சகல சாதியோருந் தங்களுக்கடங்கி ஒடிங்கிக்கிடந்தவர்கள் தங்களுக்கு முன்னேறி அசட்டைச் செய்கின்றார்கள் என்பது ஒன்று. மதிப்போடு பிச்சை ஈந்துவந்தவர்கள் மதிப்பற்று பிச்சை இடுகின்றவர்களாகி விட்டார்களே என்பது ரண்டு. இவ்விரண்டு நோக்கத்தையுங் கண்டு ஆ, ஆ, நமது சாதிவேஷம் நாளுக்கு நாள் நசிந்து நாசமுறுமாயின் நமது மதிப்புக்குன்றி போமென்று எண்ணி இராஜாங்க அதிகார சீவனங்களையேனும் அல்லது இராஜரீகத்தை யேனும் பெற்றுக்கொள்ளுவோமாயின் நமது சாதித் தலைமெயும் நிலைக்கும், நமது மதிப்புங் குன்றாது என்னும் நோக்கத்தால் பலவகையாயக் கூட்டங்களைக் கூடுவதும் ராஜாங்க சட்ட திட்டங்களைப் பேசுவதும் இராஜாங்கத்தோர்மீது குடிகளுக்குள்ள அன்பையும் விசுவாசத்தையும் மாற்றிவிப்பதுமாகியச் செயல்களைச் செய்து வருவதுமல்லாமல் பலவகையான சுதேசியமென்னுங் கலகங்களையும் உண்டு செய்துக் கொண்டே வருகின்றார்கள்.

இவர்கள் எத்தகையாய மித்திரபேதங்களை செய்த போதினும் பிரிட்டிஷ் ஆட்சியாதுங் கலங்காது தங்கள் இராட்சிய பாரத்தைத் தாங்கிவருகின்றபடியால் இனி நமது மித்திர பேத தந்திரங்கள் யாதுஞ் செல்லாது மகமதியர்களையேனும் ஒன்று சேர்த்துக் கொண்டு தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியிலிருக்கின்றார்கள். அம்முயற்சி யாதெனிலோ மகமதியர்கள் யாவரும் நன்னோக்கமுற்று கல்வியில் விருத்தியடைய வேண்டிய கூட்டங்களையும்