பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/562

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
514 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

வாரக்குடியர் தினக்குடியர்களாகி தாங்கள் கெடுவதுமின்றி தங்கள் பெண்டு பிள்ளையுங் கெடுத்துக் குடியை விருத்திசெய்துக்கொண்டே வருகின்றார்கள். அஃது எவ்வகை விருத்தி என்னிலோ தங்கள் பெண்டுகளுக்கேனும் பிள்ளைகளுக்கேனும் சொற்ப சளிசுரமோ இருமலோ காணுமாயின் தேவனுடைய உதிரமென்றே எண்ணிக் கொண்டு கொஞ்சம் ஒயின் குடிப்பது போல் மருந்தென்றே எண்ணிக்கொண்டு கொஞ்சம் பிராந்தியையேனும் சாராயத்தையேனும் கொடுத்து பழகச் செய்து வருவதேயாம். இத்தகையக் குடியின் கேடு மதாச்சாரிகளின் சுய நலந்தேடியே வளர்ந்து அவர்கள், கண்டனமின்றியே தழைத்தும் பெருகியும் வருகின்றது. மற்றயப்படி இராஜாங்கத்தோருக்கும் குடியின் விருத்திக்கும் யாதொரு சம்மந்தமுங் கிடையாவாம். இராஜாங்கத்தோர் இக்குடியை அகற்றவேண்டுமென்று அனந்த சாராயக்கடைகளையும் கள்ளுக்கடைகளையும் எடுத்துவிட்டு வரிவகைகளை அதிகப்படுத்தியும் பார்க்கின்றார்கள். அவ்வகையானும் அடங்காமல் குடியர்கள் பெருக பெருக, கள்ளு சாராய விற்பனையும் பெருகிக்கொண்டே வருகின்றது. ஆகலின் குடியின் விருத்திக்கு மூலகாரணம் மதங்களேயன்றி இராஜாங்கத்தாராகார் என்றே துணிந்து கூறுவோம்.

- 7:35; பிப்ரவரி 4, 1914 -


318. இந்துக்களும் மகமதியரும் ஒற்றுமெய் அடைவரோ வேற்றுமெபிரிவரோ

இவ்விடம் ஒற்றுமெய் என்பது சமதேகிகளாவரோவென்பதும் வேற்றுமெயென்பது வேறு வேறு தேகிகளாவரோ என்பதேயாம். இந்துக்களுக்குள்ள சாதிபேதி மற்றும் மகமதியருக்குள்ள மதபேதப்பற்றும் அகலும் வரையில் ஒற்றுமெ அடைய மாட்டார்கள் என்பதே துணிபு.

இந்துக்களென்போருள் பி.ஏ., எம்.ஏ, பட்டம் பெற்ற விவேகிகள் சிலர் தோன்றி சாதிபேதத்தால் தேச விருத்திக்கே கேடுண்டாகின்றது அவற்றை ஒழித்து விடவேண்டுமென்று பந்தல் பிரசங்கங்களிலும் வெளிப் பிரசங்கங்களிலும் கோவிற் பிரசங்கங்களிலுங் கூச்சலிட்டுகொண்டே வருகின்றார்கள். அவர்கள் பிரசங்கத்தை செவியிலேற்காது மறுப்போர் ஆயிரம் பேராயின் ஏற்போர் இருவரோ ஒருவரோ, அறியோம். காரணமோ வென்னில் பிரசங்கிப்போரே பேசிய வழி நடவாததினாலேயாம். இந்துக்களென்போருள் மூன்று நான்கு பி.ஏ. பட்டம் பெற்றவர்களும் இரண்டு மூன்று எம்.ஏ. பட்டம் பெற்றவர்களும் கூடிக்கொண்டு சாதிபேதங்களை ஒழித்துவிட்டோம் என்றால் அம்மொழிபொருந்துமோ. மகமதியருள் ஏதோவோர் எம்.ஏ. பட்டம் பெற்றவரேனும் பி.ஏ. பட்டம் பெற்றவரேனும் இந்துக்களது கூட்டத்தில் அக்கிராசனம் வகித்து சிற்சில சீர்திருத்தங்களை பேசி விடுவாராயின் அதனால் இந்துக்களும் மகமதியரும் சேர்ந்து விட்டார்களென்னும் அறிகுறியாமோ, முக்காலும் ஆகாவாம். இந்துக்களென்போரில் சிலர்கூடி தங்களுக்குள் பி.ஏ, எம்.ஏ, பட்டம் பெற்றவர்களை அடுத்து மகமதியர்கள் கூடி பசுக்களையும் எருதுக்களையுங் கொல்லுகிறார்கள், அவற்றை தடுக்க வேண்டுமென்னும் முறையிடில் அதனைக் கேட்போர் பலரறிய மாமிஷங் தின்பவராயின் அதனால் குற்றமென்னவென்று மறுப்போர், யாருமறியாமல் மாமிஷந் தின்போரும் தினனாதவருமாயின் கலகத்திற்குத் தலைமெ வகிப்பர். அவர்களது பண்டிகையில் ஏதோ வொன்றைக் கொன்று தின்கின்றார்கள் அதனால் தோஷமென்ன என்போர் நான்கு பேரிருக்கின், அவைக் கூடாதென துடைதட்டி மறுப்போர் நாலாயிரம் பேர் தோன்றுவது அநுபவமுங்காட்சியுமாக விளங்குகின்றதே. மகமதியருள் சிலர்க்கூடி ஓர் பி.ஏ. பட்டம் பெற்றுள்ள மகமதியரை அடுத்து இந்துக்கள் கூடிக்கொண்டு நமது பள்ளி வாசலண்டை மேளமடிக்கின்றார்கள். அவர்களை அடக்க வேண்டுமென்பரேல், அதற்கு பி.ஏ. அவர்கள் மறுத்து, மேளமடித்தால் என்ன, அடித்துக்கொண்டே போய்விடுகிறார்கள் அதனால்