பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/572

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
524 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

வேகமாகக் கொண்டு போகலாம், எந்தெந்த வீதியில் வேகமாகக் கொண்டு போகலாகாதென்றுங் கண்டு நடத்துவார்கள் அதனால் மனிதர்களுக்கு உண்டாகிவருந் துன்பங்களும் அகன்றுபோம் என்பதேயாம்.

- 7:46; ஏப்ரல் 22, 1914 -


325. புலியும் பசுவும் ஓர் துறையில் இறங்கி நீர்ருந்திய தன்மதேசம், மனிதனோடு மனிதன் இறங்கி நீரருந்துதற்கு இடமில்லா அதன்ம தேசமாகிவிட்டதே

இந்தியதேசம் எங்கணம் புத்ததன்மம் நிறைந்திருந்த காலத்தில் மனுக்களுள் பாஷைபேதங்கள் இருந்ததேயன்றி ஒற்றுமெக்குக் கேடாயா சாதிபேதங்களும் மதபேதங்களும் கிடையவே கிடையாவாம். அதாவது திராவிடராசன் மகளை சிங்களராசன் கட்டுகிறதும் சிங்களராசன் மகளை வங்காளராசன் கட்டுகிறதும் வங்காளராசன் மகளை சீனராஜன் கட்டுகிறதுமாய ஒற்றுமெயுற்ற வாழ்க்கையிலிருந்தார்கள்.

அரசு எவ்வழியோ குடிகளும் அவ்வழியென சகல மக்களும் அன்பு பெருகி வாழ்ந்து வந்தார்கள். அவ்வகை வாழ்க்கைக்குக் காரணமோ வென்னில் புத்தரங்க அறஹத்துக்கள் விடியர்காலமெழுந்து அந்தந்த வீதிகளுக்குச் சென்று ஜாக்கிரதா ஜாக்கிரதாவென்னும் முதற்சத்தமிட்டு கோபத்தை மனதில் தங்கவிடாதீர்கள், குடிகெடுப்பாம் வஞ்சினத்தை உள்ளத்தில் குடியிருக்கவிடாதீர்கள், பொறாமெக் கொள்ளாதீர்கள், பொய்யை அகற்றுங்கள், களவை அகற்றுங்கள், சீவப்பிராணிகளை துன்பஞ்செய்யாதீர்கள், அன்னியர் தாரத்தை இச்சியாதீர்கள் உங்கள் மதியை மயக்கும் கள் முதலிய லகிரி வஸ்துக்களை கையிலும் தொடாதீர்கள், ஓர் குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் பெற வாழ்வீர்களாயின் உங்கள் கிராம முழுமெயும் அன்பும் ஆறுதலும் பெற்று வாழ்கும். கிராமங்கள் ஆறுதல் அடைந்து வாழ்குமாயின் தேச முழுவதும் அன்பும் ஆறுதலடையும். அக்கால் அரசனும் பேரானந்தமுற்று செங்கோலை செவ்விய நடையில் விடுத்து குடிகள் யாவரையும் அன்புப்பாராட்டி ஆதரிப்பார் என மதிகூறிவரும் தன்மச்சக்கரமானது எங்குமுருண்டு சென்று சகல சீவர்களிடத்தும் அன்பு பெருகி எத்தேச எப்பாஷைக்காரனைக் காணினும் அவனை அன்பு பாராட்டி, அன்னமூட்டி ஆதரித்து வந்ததுடன் சருவசீவர்களும் சீவகாருண்யத்தால் கந்த மூலபலாதிகளைப் புசித்துவந்ததென சுருதி சிந்தனையாம்.

அத்தகைய சத்தியதன்ம போதனா காலத்தில் புலியும் பசுவும் ஓர் துறையிலிறங்கி நீரருந்தியதென்பது சுருதியாயுள்ளதன்றி சரித்திரங்களிலும் வரைந்துள்ளார்கள்.

அத்தகைய தன்மதேசத்தில் அதன்மர்களும் அசத்தியர்களும் அசப்பியர்களும் துன்மார்க்கர்களும் வந்து குடியேறி மனுகுலத்தோர் ஒருவருக்கொருவரை ஒற்றுமெயுற்று வாழ்க்கைப் பெறவிடாது, ஒருவருக்கொருவர் கண்டவுடன் சீறிச்சினந்து தங்களை உயர்த்திக் கொள்ளுங்கர்வமும் தாழ்த்திக்கூறும் பொறாமெயும் நாளுக்குநாள் பெருகி தேசமக்களுக்கு எப்போது ஒற்றுமெக்கேடு உண்டாயதோ அப்போதே விவசாயக்கேடு வித்தியாகேடு சகலமக்கள் நாகரீகக்கேடு, வஞ்சகர்களே மிக்கப் பெருகிவிட்டபடியால் காலமழை தவறி தானியங்களின் விளைவுகுன்றி பஞ்சமும் பெருவாரி நோய்களுந் தோன்றி வருகின்றது. இத்தகைய காலத்தில் நீதிபடம் நெறியுங் கருணையும் நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியோர் வந்து இத்தேசத்தைக் கைப்பற்றி ஆளாதிருப்பார்களாயின் பஞ்சமுண்டாய தேசம் படுசூரணமாகியும் நோய்கண்ட தேசமக்கள் ஊர் பெயரில்லாமலும் அழிந்தே போயிருக்கும். அங்ஙனமிறாது பிரிட்டிஷ் அரசாட்சியார் தம்மெப்போல் பிறரையும் நேசிக்குங்கருணையால் சகல மக்களும் சுகவாழ்க்கைப்பெற்று வருகின்றார்கள். இத்தகைய அரசாட்சியே என்றென்றும் நீடித்திருக்க வேண்டுவது அழகாம்.

- 7:47; ஏப்ரல் 29, 1914 -