பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/591

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் /543
 


121-வது பாகத்தில் புசிக்கும் பொசிப்பு அல்லது தேகமே பிரம்மமென்றார்.

122-வது பாகத்தில் உயிர்ப்பாகிய பிராணனே பிரம்மமென்றார்.

123-வது பாகத்தில் அறிவே பிரம்மமென்றார்.

124-வது பாகத்தில் ஆனந்தமே பிரம்மமென்றார்.

இவ்வகையாய் ஆனந்தமே பிரமம், அறிவே பிரமம், உயிர்ப்பே பிரமம், பிராணனே பிரமம் தேகமே பிரமம் உண்டியே பிரமமென்று கூறுவதானால் பிரம்மம் என்னும் வார்த்தைக்கே பொருளற்று இன்ன வஸ்து என்னும் நிலையற்று இருக்கின்றது.

இவ்வகை நிலையற்ற பிரம்மத்தை வேதம் கூறுமாயின் மக்கள் எவ்வகையால் அவற்றைப் பின்பற்றி ஈடேறுவார் என்பதும் விளங்கவில்லை.

பிரம்மமென்னும் வார்த்தையின் பொருளும் அதன் தோற்றமும் அதினால் உண்டாகும் பயனும் நிலையற்றிருப்பதை விசாரித்தோம்.

இனி சாமவேதம் 144-வது பக்கத்தில் சருவபரிபூரண ஆத்துமக் கியானத்தை அசுவாதி என்னும் அரசனிடம் சென்று விறகுகட்டை ஏந்திய மாணாக்கர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். அவற்றுள்,

சாமவேதம் 146-வது பாகத்தில் வானத்தையே ஆத்துமா என்று கூறியுள்ளார்கள்.

147-வது பாகத்தில் சூரியனையே ஆத்துமாவாக வரைந்திருக்கின்றார்கள்.

148-வது பாகத்தில் வாயுவையே ஆத்துமாவாகக் கூறியிருக்கின்றார்கள்.

149-வது பாகத்தில் ஆகாயப் பரமாணுவே ஆத்துமா என்று கூறியிருக்கின்றார்கள்.

150-வது பாகத்தில் உதகமே ஆத்துமா என்று குறித்திருக்கின்றார்கள்.

151-வது பாகத்தில் பிரிதிவியாகிய மண்ணே ஆத்துமா என்று குறித்திருக்கின்றது.

இவ்வகையாக ஆத்துமா என்னும் வார்த்தைக்குப் பொருள் ஏதும் அற்று அதன் நிலையற்று இருப்பதால் ஒருமனிதன் வானத்தையும் மண்ணையும் காற்றையுஞ் சூரியனையும் ஆத்துமமாக எண்ணுவதால் என்ன பலன் அடைவான் என்பதும் விளங்கவில்லை.

இந்நான்கு வேதங்களில் கூறியுள்ள பிரம்மம் என்னதென்றும் ஆத்துமா இன்னதென்றும் நிலையாதிருப்பதை தெரிந்துக் கொண்டோம்.

இத்தகைய பிரமத்தையும் ஆத்துமாவையும் அறியக்கூடிய வேத அந்தத்தையும் விசாரிப்போமாக.

- 2:10; ஆகஸ்டு 19, 1908 -

அதர்வணவேதம் 165-வது பக்கத்தில் உபநிடதங்கள் என்பது வேதாந்த சாஸ்திரங்கள் எனக் குறிப்பிட்டிருகின்றது. 167-வது பக்கத்தில் வேதாந்த சாஸ்திரங்கள் எல்லாம் உபநிடதங்களின் பேரில் ஆதாரப்பட்டதென வரைந்திருக்கின்றது.

இவற்றினாதரவாலும், நான்கு வேதங்களில் கூறியுள்ள மந்திரங்கள், பிராமணங்கள் உபநிடதங்கள் என மூன்று பிரிவில் உபநிடதங்களைக் கடை-பாகமாகக் கொண்டு வேத அந்தங்களென வகுத்துக் கொண்டார்கள்.

வேதம், வேத அந்தம் எனும் இருவகுப்பில் வேதத்தில் கூறியுள்ள பிரமமும், ஆத்துமமும் நிலையற்றிருப்பதை தெரிந்துக்கொண்டோம்.

இனி வேத அந்தமாகும் உபநிடதங்களில் கூறியுள்ள பிரம்மத்தையும் அதன் நிலையையும் அதன் பலனையும் விசாரிப்போமாக.

உபநிடதங்களில் 52 வகை இருந்ததாக அதர்வண வேதத்தில் கூறியிருக்கத் தற்காலம் இரு நூற்றிச்சில்லரை உபநிடதங்களுள்ளதாய் விளம்புகின்றனர். அத்தகைய விளம்பல் உளதாயினும் இலதாயினுமாகுக.

முண்டகோப உபநிஷத்து இரண்டாமுண்டகம் முதலத்தியாயத்தில் ஜவலிக்கின்ற அக்கினியினின்று ஆயிரம் பக்கங்களில் பொறிகள் எப்படி உண்டாகின்றனவோ அதுபோல் அழிவற்ற பிரமத்திடத்தினின்று பலசீவாத்மாக்கள் உண்டாகி மறுபடியும் அதிலடங்குவதாகக் குறிப்பிட்டிருக்கின்றது.