பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/592

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
544/அயோத்திதாசர் சிந்தனைகள்
 


தலவகார் உபநிஷத்து இரண்டாவது காண்டம் 3-4-5 வாக்கியங்களில் பிரமத்தை அறியேனென்பவன் அறிவான், அறிவேன் என்பவன் அறியான் பிரமந் தெரியும் என்பவர்களுக்குத் தெரியாது. தெரியாது என்பவர்களுக்குத் தெரியும் என்று கூறியிருக்கின்றது.

கடோபநிஷத்து நான்காவது வல்லி 11-வது வாக்கியத்தில் மனதினால் மாத்திரமே அப்பிரம்மத்தை எட்டக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கின்றது.

கேனோபநிஷத்து முதல்கண்டகம் மூன்றாம் வாக்கியமுதல் எட்டாம் வாக்கியம் வரையில் அதைக் கண்ணாவது, வாக்காவது, மனமாவது எட்டுகிறதில்லை. அதை நாம் அறியோம். அதை தெரிவிக்கும் வழியும் நமக்குத் தெரியாதென வகுத்திருக்கின்றது.

வாஜகாநேய உபநிஷத்து எட்டாவது வாக்கியத்தில் பிரமம் எவ்வித சரீரமும் அற்றவர், ஒளி பொருந்தியவர், பாபமற்றவர், விவேகி, மனதை ஆள்பவரெனக் குறித்திருக்கின்றது.

முண்டகோபநிஷத்து இரண்டாவது முண்டகம் எட்டாவது வாக்கியத்தில் கண்களாலாவது வாக்காலாவது கர்மத்தினாலாவது பிரமத்தைக் கிரகிக்கப்படாதென்று குறித்திருக்கின்றது.

அதே உபநிஷத்து பத்தாவது வாக்கியத்தில் இப்பரமாத்துமா அணுவைப்போல வெகு சிறியவனாகவும் மனதினால் அறியத்தக்கவனாயும் இருக்கின்றான் என்று கூறியிருக்கின்றது.

அதே உபநிஷத்து இரண்டாவது முண்டகம் இரண்டாவது அத்தியாயம் ஏழாவது வாக்கியத்தில் விவேகபரிபூரணனும், சர்வக்யனனும், பிரும்மபுரமெங்கும் பரவி மகிமையுள்ளவனுமாகிய ஆத்மா ஆகாசத்தில் இருக்கின்றானென்றும் குறித்திருக்கின்றது.

சுவேதாசுவத உபநிஷத்து முதலத்தியாயம் மூன்றாம் வாக்கியத்தில் தியானத்தையும் யோகத்தையும் அநுசரித்தவர்கள் காலாத்துமாக்களோடு அமைந்த தேவாத்தும் சக்த்தியைக் கண்டார்கள் என்று குறித்திருக்கின்றது.

அதே அத்தியாம் 13-வது வாக்கியத்தில் புருஷன் அந்தராத்துமாவாகி விரலளவுடைய ஜனங்களின் இருதயத்தில் இருக்கின்றான் என்று குறித்திருக்கின்றது.

இவ்வகையுள்ள மற்றும் உபநிடதங்களை வரைய வேண்டுமானால் வீணே வாக்கியங்கள் வளருவதுமன்றி ஈதோர் பயித்தியக்காரன் பாட்டுகள் என்றும் பரிகசிப்பார்கள்.

விசாரிணைப் புருஷர்களே வேஷப்பிராமணர்கள் வேதங்களில் கூறியுள்ள பிரம்ம விவரமும் ஆத்தும் விவரமும் நிலையற்றிருப்பது போலவே இவ்வேத அந்தமாகும் உபநிஷத்துக்கள் யாவும் ஒன்றுக்கொன்று அப்பிரமத்தின் நிலையையும், ஆத்துமநிலையையும் ஆதாரமின்றி கூறி பிள்ளைகள் விளையாட்டில் கண்ணைக்கட்டியடிக்க ஆள் தெரியாது தடவி அவ்விடம் உள்ளவர்களின் பெயரை ஒவ்வொன்றாகச் சொல்லித்திரிவதுபோல் வேத அந்தங்களை வாசித்தும் விழலுக்கிறைத்த நீராய் விருதாவடைகின்றன.

வேதத்திலுள்ள பொருளும் வேத அந்தத்திலுள்ள பொருளும் இன்னதென்று விளங்காதிருக்க சருவமும் விளங்கியவர்கள் போல் நடித்து வேதாந்த குருக்கள் என வெளி தோன்றியும் தருக்க சாஸ்திரம் பெருக்கக் கற்றுள்ளோம் நீங்களும் அவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் பிரம்மத்தின் பின்னும் முன்னும் எமக்குத் தெரியாது நான் சொல்லுவதைக்கொண்டு நீங்கள் அறிந்துக் கொள்ளுங்கள் இன்னும் வருந்திக் கேட்பீர்களானால் பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கின்றது. ஆனால் பறையனிடத்தில் மட்டும் இல்லை என்பது போல் அவனை தூரம்வைத்துப் பாடஞ் சொல்ல வேண்டியதென்பர்.

இத்தகைய வேஷபிராமணர்கள் வேதாந்தத்தைப் பின்பற்றிய வேஷ வேதாந்திகளை விடுத்து கண்டதைக் கண்டவாறும் உள்ளதை உள்ளபடி உரைக்கும் மேன்மக்களைப் பின்பற்ற வேண்டுகின்றோம்.