பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/598

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
550 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

தனக்குள் அடைந்த இவ்வானந்த நிலைக்கே அமுதமென்றும், கேவலம் என்றும், பருவம் என்றும், வீடென்றும், சிவமென்றும், கைவல்யமென்றும், சித்தியென்றும், மீளாக் கதியென்றும், பரகதி என்றும், முத்தி என்றும், மோட்சம் என்றும், நிருவாணம் என்றும் வகுத்துள்ளார்கள்.

முன்கலை திவாகரம் - மோக்கத்தின் பெயர்

அமுதங் கேவலம் பருவம் வீடு / சிவங் கைவல்லியஞ் சித்தி மீளாகதி
பரகதி யோடுமெய் முத்தி பஞ்சமகதி / நிர்வாணா மோக்கமென நிகழ்த்தினரே.

இத்தியாதி ஞானபோதமாம் துக்கநிவர்த்திக்கும் சுகநிலையாம் நிருவாணத்திற்கும் புத்தபிரானருளிய முதநூலே ஆதாரமாகும்.

அதாவது:-

முன்கலை திவாகரம் - நூலின் பெயர்

பிடகத் தந்திரம் - நூலின் பெயரே.

புத்தபிரான் அருளிய பிடகத்தையே நூலென்று வகுத்துள்ளார்கள். அந்நூல் ஆதியில் போதிக்கப்பட்டதாதலின் அதனை முதநூலென்றும், ஆதிநூலென்றும் வழங்கிவந்தார்கள்.

பிடகமென்னும் மொழி தோன்றிய காரணம் யாதென்பீரேல், முப்பேத வாக்கியங்களாகும் செளபபாபஸ்ஸ அகரணம், குஸலஸ உபசம்பதா, ஸசித்த பரியோதாபனங், ஏதங் புத்தானசாசனம் என்னும் பாபஞ் செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்பவை, இத்தேசப் பிராகிருத பாஷையாகும் பாலி வரிவடிவாம் அட்சரங்களின்றி ஒலிவடிவ சுருதியாய் உலக சீர்திருத்த ஆதிபீட வாக்கியமாய் இருந்ததுகொண்டு அவைகளை பிடக வாக்கியங்கள் என்றும் கமலாசனன் வீற்றிருந்த கல்லால பீடத்திற்கு பீடிகை என்றும் வழங்கிவந்தார்கள்.

இத்தகைய ஆதிபீடமாகும் முதலாம் வேதத்தின் உட்பொருளின் நுட்பத்தையும், அதனந்தத்தையும் விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு உபநிடதவாக்கியங்கள் என்றும், வேத அந்த வாக்கியங்கள் என்றும் வழங்கலாயினர்.

இவ்வேதவாக்கியங்களையும், வேதாந்த வாக்கியங்களையும், ஆராய்ந்து அருள்பெறவேண்டியவர்கள் காட்டிற்கும், நாட்டிற்கும் மத்தியில் இந்திர வியாரங்களைக் கட்டுவித்து இல்லந்துறந்த மேன்மக்களாகும் அறஹத்துக்கள், பிராமணர், அந்தணரெனும் விவேகமிகுத்த ஞானிகளிடம் பொன்னிறவாடையும் கபோலமும் ஏந்தி சீலந்தாங்கி சித்திபெறல் வேண்டும்.

- 2:15: செப்டம்பர் 23, 1908 -

இந்திரவியாரமாகும் புத்தரங்கத்தில் சேர்ந்து மகடபாஷையில் சமணரென்றும், சகடபாஷையில் சிரமணரென்றும், திராவிடபாஷையில் தென்புலத்தார் என்றும், புலன் தென்பட்டவர்கள் என்றும், வழங்கும்படியான விசாரிணைப்புருஷர்கள் மகடபாஷையில் பஞ்சஸ்கந்தமென்றும், திராவிட, பாஷையில் ஐம்புலன் என்னும் படுத்தல், எழுதல், நடத்தல், அணிதல், துய்தலாம் ஐங்கூறினுள் நினைத்தல், மறத்தல், அறிதல், அன்பு, ஆசை, பயம், மரணம், நிறை, பொறை, ஓர்ப்பு, மையல், கடைப்பிடி, வெறுப்பு, விருப்பு, உவப்பு, இரக்கம், நாணம், பயம், முறிவு, அழுக்காறு, அருள், பீடை, இன்பம், துன்பம், இளமெய், முதுமெய், இகல், வெற்றி, பொய்ச்சாப்பு, ஊக்கம், மறம், மதம் எனும் முப்பத்திரண்டு செயலுடைத்தாய உருவகத்தை மகடபாஷையில் ஆன்மமென்றும், சகடபாஷையில் புருஷனென்றும், திராவிடபாஷையில் மனிதன் என்றும் வழங்கிவந்தார்கள்.

இத்தகைய ஒருமெய் உருவகம் ஒன்றாகத் தோற்றினும் செயலால் உண்மெய்யும், தோற்றத்தால் புறமெய்யுமாக உடலுயிர் இரண்டென வகுத்துள்ளார்கள்.

இவ்விரண்டினுள் உருவகத் தோற்றச் செயல்களாகும் தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல், யீதல் என்னும்