பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

கொடுங்கோலோச்சும் நாட்டில் பூமி விளையாமலும் பசுக்கள் கரவாமலும் அறுதொழிலாளராம் அறஹத்துக்கள் அற நூற்களை மறந்து நிற்பர்.

இத்தகைய செங்கோலோச்சுவதற்குக் கொடுங்கோ லோச்சுவதற்கும் குடிகளே காரணமாவர்.

எங்ஙனம் என்னில், கோழிக்குஞ்சுகளானது இறையை நாடி ஓடுமாயின் தன் தாய்க்கோழியும் அதனுடன் சென்று தீய்த்து ஆகாரங்காட்டும். அஃதின்றி தங்கள் சத்துருவாம் பருந்தை நாடி ஓடுமாயின் தாய்க்கோழி பதறி செட்டையாலுதறி சேரிடஞ் சேர்க்கும்.

அதுபோல் குடிகள் யாவருக்கும் உள்ள பொய், பொறாமெய், வஞ்சம், கள்ளருந்தல், கள்ளம் முதலிய செய்கைகளால் செங்கோலுங் கொடுங்கோலாக மாறும்.

குடிகள் யாவருக்கும் உள்ள அன்பும் ஆறுதலும் ஈகையும் இன்சொல்லும் பெருகிக்கொண்டே வருமாயின் கொடுங்கோலுஞ் செங்கோலாக மாறி சீருஞ் சிறப்பையுந் தரும்.

கொடும் புலிகள் வாழுங் காட்டிற்கு சிம்மமே அரசனாவன். செம்மறிகள் வாழுங் காட்டிற்கு இடையனே மேய்ப்பனாவன்.

பாலைநிலத்தில் நெற்பயிறும் நஞ்சைநிலத்தில் பூநீறும் விளையாது. சற்புத்திரராகிய குடிகளின் மத்தியிற் கொடுங்கோல் மன்னன் தோன்றான். துற்புத்திரராகிய குடிகளின் மத்தியில் செங்கோலோச்சு மன்னன் தோன்றான்.

ஆதலின் குடிகளாகிய நமக்குள்ள கொடுஞ்சினம், கொடும்பார்வை, கொடுஞ்செயல், கொடும் பொறாமெய், கொடு வாசை, கொடு மிடி, கொடு கேடு, முதலியவைகளை அகற்றி நின்று கொடுங்கோலை நோக்குவோமாயின் அக்கொடுங்கோலே செங்கோலாக விளங்கும்.

குடிகளாம் நமக்குள்ள நல்வாய்மெய், நற்கடைபிடி, நற்காட்சி, நல்லூக்கம், நல்லுணர்ச்சி, நல்லறிவு, நற்சேர்க்கை, நற்செய்கை முதலியவைகளை அகற்றி நின்று செங்கோலை நோக்குவோமாயின் அச்செங்கோலே கொடுங்கோலாகத் தோன்றி சீரழிப்பது சத்தியமாம்.

- 1:36; பிப்ரவரி 19, 1908 -

அரசனது கோல் செங்கோலாக மாறுதலுக்கும் கொடுங்கோலாக மாறுதலுக்கும் அரசனைச் சூழ்ந்துள்ள மந்திரவாதிகளாகும் அமைச்சர்களே மூலகாரணர் களாவர்.

அதாவது - காலதேச வர்த்தமானங்களை ஆராய்ந்து குடிகளுக்கு அறிவித்து காலம் அறிந்து விளைவிக்கவேண்டிய தானியங்களை விருத்தி செய்யவும் வானஞ்சுருங்கியக்கால் மழை பெய்வதற்கான முயற்சிகளைத் தேடவும் விருத்தியடைந்துள்ள தானியங்களை வேற்றரசரேனுங் கள்ளரேனும் அபகரிக்காவண்ணம் பாதுகாத்தலுமாகிய கன்மங்களை முன்னெண்ணி செய்தல் வேண்டும்.

தங்களுடைய தேசத்தில் எந்தெந்த பொருட்கள் விசேஷமாக விளைந்து பலனளிக்கின்றதென்றும் வேற்றரசர் எப்பொருட்களின் பேரில் ஆசைகொண்டு தேசத்தை அபகரிக்க எண்ணங் கொண்டிருக்கின்றார்கள் என்றும் வேவுகர்களால் உணர்ந்து அந்தந்தப் பொருட்களின் விருத்தியை அடக்கத்தில் ஆண்டு எதிரியாசர்களாண்டுவருங் கருவிகளுக்குத் தங்களிருப்பிலுள்ள கருவிகளுக்குமுள்ள பேதாபேதமாய்ந்து தங்கள் கருவிகளின் வீரத்தை மேம்படுத்தி வைத்திருப்பதும் அன்றி அரசனுக்கு அறிவித்து படைகளுக்கும் ஆயுத பழக்கத்தையும் விருத்திசெய்து வைத்தல் வேண்டும்.

குடிகள் தங்கடங்கள் செயல்களில் மனக்குறைவின்றி ஆனந்தத்திற் செய்து வரவும். உள்ள குடிகள் ஒருவருக்கொருவர் மனத்தாங்கலின்றி ஒத்து வாழத்தக்க நீதி நூற்களைப் புகட்டி ஒற்றுமெயடைச் செய்தலும் குடிகள் செய்யக்கூடாதவற்றைத் தவிர்த்து அதினால் உண்டாகுங் கேடுகளை விளக்கி பாதுகாத்தலும் பூமிகளின் கொழுமையையும் அதன் வரட்சியையும் தானியங்களின் விருத்தியையும் அதன் குறைவையும் குடிகளின் சுகத்தையும்