பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/602

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
554 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

மிருகாதிகளினின்று மக்களாம் மனுக்கள் தோன்றி, மனுக்களினின்று தேவர்களாகத் தோன்றும் ஏழாவது தோற்றத்து இயல்பு இதுவேயாகும்.

மனிதனுக்குள்ள தேயுவின் அக்கினியாம் துற்செயல்கள் யாவையும் அகற்றி நற்செயலாந் தேயு குளிர்ந்து சாந்தம் நிறைந்தவிடத்து தேவன் என்னும் பெயரும், சருவ சீவர்களின் மீதும் அன்பு பாராட்டி ஆதரிக்கும் குளிர்ந்த நிலை அடைந்தவிடத்து அந்தணனென்னும் பெயரும் பெறுகின்றான்.

சீவகசிந்தாமணி

ஊன்சுவைத் துடம்புவீக்கி / நரகத்திற் புகுதனன்றோ
யூனறினா துடம்புவாட்டித் / தேவரா யுரைதனன்றோ
யூன்றியிவ்விரண்டினுள்ளு / முறுதிநீ யுரைத்தி யேன்ன
வூன்றினா தொழிந்து புத்தே / ளாவதே யுறு தியேன்றான்.

திரிக்குறள்

அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ்
செந்தண மெய்ப்பூண்டொழுகலால்.

பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க்கடைபிடியுங்கள், உங்களிதயத்தை சுத்தி செய்யுங்கள் எனும் மும்மொழிகளே திரிபேதவாக்கியங்கள் என வழங்கும் அருமொழி மூன்றையும் சிரமேற்கொண்டு தங்களுக்குள் உள்ளப் பாபச்செயல்களையும், குணங்களையும் பற்றற அறுத்தும் இனிசேரும் பாபச்செயல்களையும், பாபகுணங்களையும் சேரவிடாமல் அகற்றியும், தங்களுக்குள் உள்ள நன்மெய்ச்செயல்களையும், நன்மெய்க் குணங்களையும், நாளுக்குநாள் விருத்தி செய்தும், இனிசேரும் நன்மெய்க்குணங்களையும், செயல்களையும் நாளுக்குநாள் சேர்த்தும், தங்களுள்ளமாம் இதயத்திலுள்ளக் களங்கங்களை அகற்றி நாளுக்குநாள் சுத்தி செய்துக் கொண்டும், இனி இதயத்துள் வந்தணுகும் களங்கங்களை அணுகவிடாமல் அகற்றிக்கொண்டும் வரும்படியான சாதனங்களையே இடைவிடாது சாதிப்பதினால் கண்ணினாற் பார்த்த வஸ்துக்களை மனம் நாடிச்செல்லுவதும், நாவினால் உருசித்த பதார்த்தங்களை மனம் நாடிச்செல்லுதலும், செவியால் இனிதாகக் கேட்ட வார்த்தையை மனம் நாடிச் செல்லுதலும், நாசியால் சுகந்த கந்தத்தை முகர்தவிடத்தை மனம் நாடிச்செல்லுதலும், தேகம் சுகித்தவிடத்தை மனம் நாடிச்செல்லுதலுமாகிய ஐம்புலச் செயல்களற்று பொறிவாயலில் ஐந்தவித்த பலனே வேதமொழியின் மார்க்கப்பலன்கள் எனப்படும்.

பேதவாக்கியங்களாகும் மூன்று அருமொழியின் பாதையில் நடந்து ஐயிந்திரியங்களை வென்று பெண்ணிச்சையற்று காமத்தை ஜெயிக்கின்றான்.

சீவகசிந்தாமணி

ஆசைஈயர்வமோ டையமின்றியே / யோசைபோயுல குண்ணநோற்றபி
னேசு பெண்ணொழித் திந்திரர்களாய்த் / தூயஞானமாய்த் துறக்கமெய்தினார்.

இத்தகைய பற்றுக்களற்று உபநயனமாம் உள்விழியால் புருவமத்திய சுழிமுனையை நாடிய நிலைக்கே வேதமுடிவு என்றும், வேத அந்தமென்றும் கூறப்படும்.

சுத்த இதயத்தினின்று தன்னைபார்க்குங்கால் உனது, எனது என்னும் பின்னபாசங்களற்று சருவ உயிர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்கவும் உயிர்களால் யாதொரு துன்பம் தனக்கணுகினும் அவற்றிற்கு பிரதி துன்பம் அளிக்காது காக்கும் குணத்திற்கு பிரம்மமென்று பெயர்.

பூமியை ஓர் மனிதன் கொத்திப் புழுதியாக்கி பண்ணியங்கலைக்கிய போதும் அஃது பெரும்பலனைக் கொடுத்து வருவதுபோல் மனிதனும் பலரால் துன்பப்படினும் அவர்களுக்கு நற்பலன் அளித்தே வருவானாயின் அந்த சிரேஷ்ட செயலுக்கு பிரமனென்னும் பெயரை அளித்திருக்கின்றார்கள்.

மச்சமுனியார் ஞானம்

நித்தமுநி சுத்தமதாய் நின்றுபார்த்தால்
நின்தேகம் பிரம்மமடா நீ தான் காண்பாய்
சுத்தமுடன் சோதிமனக் கண்ணாவந்த
சுருதிமுடிவானசுட ரொளியைக்கண்டால்