பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/610

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
562 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

நிருவாணமார்க்கத்தை ஊட்டியவராதலால் சிவகதிநாயகன் என்றும் ஆதியில் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரானேயாம்.

அறநெறிச்சாரம்

அவன்கொலிவன்கொ வென்றையப்படாதே
சிவன்கண்ணேசெய் மின்கள்சிந்தை - சிவன்றானும்
நின்றுக்கால்சீக்கு நிழறிகழும் பிண்டிக்கீழ்
வென்றிச்சீர் முக்குடையான்வேந்து.

சீவகசிந்தாமணி

இன்பமற்றென்னும் பேரானெழுந்து புற்கற்றைத்தீற்றித்
துன்பத்தைச் சுரக்கு நான்கு கதியெனுந்தொழுவிற்சேர்த்து
நின்ற பற்றார்வநீக்கி திருபலன்பாதஞ்சேரி
னன்புவிற்றுண்டுபோகிச் சிவகதியடையலாமே

சூளாமணி

மணிமலர்ந்துமிழொளி வனப்புஞ்சந்தனத் / துணிமலர்ந்துமிழ்ந்தருந்தண்மெய்த்தோற்றமு
தணிமலர்நாற்றமு மென்னவன்னதா / லணிவரு சிவகதி யாவதின்பமே.

- 2:22: நவம்பர் 11, 1908 -

ஆசியாகண்ட முழுவதும் புத்ததன்மம் பரவியிருந்த காலத்தில் புத்த பிரானை சிவனென்றும் சிவகதி நாயகன் என்றும் கொண்டாடி வந்ததுமன்றி அவரையே மாலென்றும், திருமால் என்றும், செங்கணெடுமாலென்றும் சிந்தித்து வந்தார்கள்.

பாலிபாஷையில் மால் என்னும் மொழிக்கு வட்டம், சக்கிரவாளமென்னும் பொருளைக் குறித்திருக்கின்றார்கள்.

மணிமேகலையிற் கூறியுள்ளவாறு “எண்ணருஞ் சக்கிரவாளமெங்கணும் அண்ணலறக்கதிர் விரிக்குங்காலை” உலகெங்கும் சுற்றி தருமத்தை நிறப்பினவராதலின் நெடுமான் என்றும், ஞானவிழியால் சகலமும் உணர்ந்த செவ்வியக் கண்ணராதலின் செங்கணெடுமால் என்றும், பெருங்கூட்டங்களில் நிறைந்திருந்த ஒவ்வோர் மதுக்களுள்ளங்களிலுமுள்ள சங்கைகளை நிவர்த்தி செய்துவந்தவராதலின் சகலமும் உணர்ந்தார் என்றும், ஆயிரம் கண்ணனென்றும், தாமரைக் கண்ணனென்றும் வழங்கிவந்தார்கள்.

தேவர்களுக்குள் சிறந்தவராகவும், ஆதிதேவனாகவும் விளங்கியவர் புத்தபிரானாதலின் திருவள்ளுவ நாயனார் இயற்றியுள்ள திரிக்குறளுக்கு சாற்றுக்கவி கொடுத்துள்ள, கவிசாகரப் பெருந்தேவனார்.

பூவிற்கு தாமரையே பொன்னுக்கும் சம்புனத
மாவிற் கருமுனியா யானைக் - கமரரும்ப
றேவிற் திருமாவெனச் சிறந்ததென்பவே
பாவிற்கு வள்ளுவர் வெண்பா

எண்ணூற்காப்பு

நெடுமாற் றிருமருகா னித்தன் முதலாய் / கொடுமால் வினையகற்றுங் கோவே

பாலிபாஷையில் சக்கிரவாளம் எங்குமுலாவியவர் என்னும் பொருளையும் தமிழ் பாஷையில் மயக்கம் என்னும் பொருளையும் தழுவி மேற்குறித்த வெண்பாவை முடித்திருக்கின்றார்கள்.

ஒவ்வோர் நூற்களின் முகப்பிலுமுள்ள காப்பு செய்யுட்களில் புத்தபிரானாகும் மாலையே சிந்திக்கும்படியாய் சூத்திரமும் விதித்துள்ளார்கள்

பின்கலை நிகண்டு

காப்புக்கு முன்னெடுக்குங் / கடவுள்தான் மாலேயாகும்
பூப்புடை மலரின் செவ்வி / புனைபவ னாதலானும்
காப்பவ னாதலானுங் / கதிர்முடி கடகத்தோடு
வாய்ப்பதா மதாணி பூணூல் / வரிசையிற் புனைதலானும்.

ஞானவிழியாற் சகலமுமறியக் கூடியவர்களை செவ்வியக் கண்ண ரென்றும், செங்கண்ணார் என்றும் சமண முனிவர்கள் வகுத்திருக்கின்றார்கள்.