பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/616

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
568/அயோத்திதாசர் சிந்தனைகள்
 


மோசேயவர்களெழுதிய கர்போற்பவம்

தாயின் கருப்பை இருளடைந்து விடாதீநீராகும் ஜலம்நிரைந்திருக்குங் காலத்தில் வினைக்கீடாய் சுக்கிலசுரோணித கிருமி திரண்டு கருப்பாயாச ஜலத்தின் போஷிப்பால் அசைவாடிவளர்ந்து அண்டம்போல் உருண்டு பிரிந்து முதல் மாதம் உண்டாகின்றது.

கருப்பையிலுள்ள ஜலமானது இரண்டாகப் பிரிந்து ஒருபாகம் மேனோக்கி மார்பிற் சேர்ந்து பாலுக்காதாரமாவதும், ஒருபாகங் கீழ்நின்று சப்தமாகும் அக்கினிக்கும், சுவாசமாகும் காற்றுக்கும், வெளியாகும் இடம்புரிந்து பிண்டம் வளருவதற்காதாரமாகி 2-மாதம் உண்டாகின்றது.

ஜலம் பிரிந்து பூமிதோன்றியபோது அதனினின்று புற்பூண்டுகளும், விருட்சங்கள் வளருவதுபோல் கருப்பை ஜலம் பிரிந்து பிண்டந் திரண்டு கரசரணங்கள் பிரிந்து உரோமங்களுக்கு ஆதாரமாகும் சருமந்தோன்றி 3மாதம் உண்டாகின்றது.

வாயுவின் ஆதாரத்தால் சுவாசங்கள் தோன்றுவதுபோலும், சூரியனின்று பிரகாசத்தோன்றுவது போலும், பிண்டத்தில் நோக்குதற்காதாரமாகும் கண்களும், கேட்டலுக்கு ஆதாரமாகும் செவிகளும் பிரிந்து 4-மாதம் உண்டாகின்றது.

பூமியின் ஆதரவால் விருட்சங்களும், விருட்சத்தின் ஆதரவால் ஜெந்துக்களுந்தோன்றி பறப்பன பறந்து, தவிழ்வன தவிழ்ந்து சீவிப்பது போல் தாயார் புசிக்கும் அன்ன சாரமானது பிண்டத்தின் தொப்புழ்வழியே சென்று உடல்பருத்து வளர்ந்து 5-மாதம் உண்டாகின்றது.

சாந்தமே சருவசீவர்களைக் காக்கும் உருவாகவும், அன்பே சருவசீவர்களையும் வளர்க்கும் உருவாகவும், ஈகையே சருவசீவர்களையும் போதிக்கும் புசிப்பின் உருவாகவுமுள்ள சீவன் தாயின் வயிற்றில் கட்டுப்பட்டுள்ள உடலெங்கும் பரவி தன்னைப்போல் தன் வயிற்றில் ஒருரு துள்ளிவிளையாடும் 6-மாதம் உண்டாகின்றது.

தாயின் உள்ளம் போலும், தாயின் உடல்போலுந் தனக்குள் துள்ளி விளையாடும் மற்றோர் உடலின் வளர்ச்சிக்கும் வேறு தொழில் ஒன்றுமில்லாமல் ஓய்ந்து 7-மாத முண்டாகின்றது.

தாயின் வயிற்றில் ஓர்குறைவுமின்றி வளர்ந்து பத்தாமாதத்தில் வெளியில் தோன்றும் அந்தர அங்க விசேஷத்தை வர்ணனையால் விளக்குகின்றார்.

அதாவது புத்ததன்ம சாஸ்திரிகள் தங்களை விட்டு தங்களுக்கு அப்புறமாக வேறுபொருள் இல்லையென்றும், தங்களை சீர்திருத்தி நித்திய சீவனுக்காளாக்கும் சிரேஷ்டமென்னும் பரம்பொருளாம் நற்செயல்கள் தங்களுக்குள்ளாகவே இருக்கின்றதென்றும், தங்களை சீர்கெடுத்து பாபத்தை அதிகரிக்கச்செய்து பிணி, மூப்பு, சாக்காடென்னும் மரணத்திற்குக் கொண்டுபோகும் மதிகேடாம் துற்செயல்களுந் தங்களுக்குள்ளாகவே இருக்கின்ற தென்றறிந்து தங்களுக்குள் எழும் பொல்லாங்கென்பவை யாவையும் அகற்றி நன்மெய்க்கடைபிடித்து நித்தியசீவனை அடைகின்றார்கள்.

மோசேயவர்களுந் தானெழுதியுள்ள பிண்டோற்பவத்தில் உடல் வெளிதோன்றியவுடன் அதன் அந்தரங்கமாம் உள்சிரேஷ்டத்தை அதி சிரேஷ்டமாக உலகத்தோர் அறிந்து ஒழுகுதற்கு ஓர் வர்ணனையாகக் களிமண்ணினால் உருவு பிடித்து கடவுளென்னும் சிரேஷ்ட வஸ்துவே தனது சீவசுவாசத்தை நாசியிலூதி உயிர்ப்பித்தாரென்று உடலுக்குள் உள்ள அறிவையும், சாந்தத்தையும், அன்பையும் சிறப்பித்து எழுதியிருக்கின்றார்.

- 2:26; டிசம்ப ர் 9, 1908 -

மோசே எழுதியுள்ள களிமண்ணின் வர்ணனையும் உருபிடித்தூதிய விவரமும்

தேவனென்னும் சிரேஷ்ட தேகி தன்னைப் போல் களிமண்ணினால் ஓர் உரு பிடித்து தனது சீவசுவாசத்தை அக்களிமண்ணுருவின் நாசியிலூதியப்பின் உயிர்ப்பித்தாரென்னும் வர்ணனைவிளக்கம் யாதெனில்:-