பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/626

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

578/அயோத்திதாசர் சிந்தனைகள்

னென்றும் கொண்டாடப்பெற்றார்.

அத்தகைய தெய்வகதி அடையவேண்டியவர்கள் அண்டர்கோன் ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கோளென்று நாயனாரும் கூறியுள்ளார்.

திரிக்குறள்

பொறிவாயிலைந்தவித்தான் பொய்தீரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வர்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்க்கோமான்
இந்திரனே சாலுங்கரி

அருங்கலைச்செப்பு

இந்தியத்தை வென்றான் றொடர்பாட்டோ டம் / முந்திதுறந்தான் முநி.

சிவவாக்கியர்

பேசுவானு மீசனும் பிரம்மஞான மும்முளே
ஆசையான ஐவரும் அலைந்தலைச்சல்படுகிறார்
ஆசையான ஐவரை யடக்கி யோரிடத்திலே
பேசிடாதிருப்பீராகி லீசன்வந்து பேசுமே

இவற்றை அநுசரித்தே கிறீஸ்துவானவரும் உன் அரை வீட்டை சாத்தி உன் அந்தரங்கத்திருக்கும் பரமபிதாவை உன்முழு இருதயத்தோடும் தியானஞ்செய். அப்போது உன் அந்தரங்கத்திருக்கும் பரமபிதா வெளியரங்கமாய்ப் பலனை அளிப்பாரென்றும், பராபரன் ஆவியா இருக்கின்றார் அவரை தியானிக்கப்பட்டவர்கள் ஆவியினாலும், உண்மெயினாலும் தியானஞ் செய்யுங்கோளென்றும் உங்கள் பிதா பூரண சற்குணராயிருப்பதுபோன்று நீங்களும் சற்குணராயிருக்கக் கடவீர்களென்றும், உங்கள் நீதி அதிகமாயிரா விட்டால் பரலோக ராட்சியத்தில் பிரவேசிப்பதில்லை என்றும், சுத்தயிதயம் பராபரனுடைய ராட்சியமென்றும், அசுத்தவிதயம் கல்லரைக் கொப்பாய் எலும்பையும் மயிரையும், நாற்றத்தையும் உடையதென்றும் கூறியிருக்கின்றார்.

- 2:33: சனவரி 27, 1909 -

பஞ்சபுலனடங்குங்கால் தூங்காமற்றூங்கும் விழிப்பின் சாட்சி

அவலோகிதர் கூறியுள்ள அஷ்டாங்க மார்க்த்தின்படிக்கு கண்பார்த்த இடங்களில் எல்லாம் மனம் போவது அடங்கியும், செவிகேட்டயிடங்களில் எல்லாம் மனம்போவது அடங்கியும், நாவு உருசித்தவிடங்களில் எல்லாம் மனம்போவது அடங்கியும், சுகந்தம் முகர்ந்தவிடங்களில் எல்லாம் மனம்போவது அடங்கியும் சதாவிழிப்பாஞ் சாதனத்திற்கு வருவானென்றும் கூறியிருக்கின்றார்.

அதாவது:- தூங்கினேனென்னும் மரணத்திற்குச் செல்லாமல் சதாவிழிப்பிலும் ஜாக்கிரதையிலும் நின்று நிருவாணமாம் நித்தியசீவனை அடையவேண்டியதாகும்.

அருங்கலைச்செப்பு - விழிப்பின் பத்து

விழிப்பில் விழித்து வினைகடந்தமாற்றஞ் / சுழித்தி துறந்தான் சுகம்.

தாயுமானவர்

ஆங்காரமுள்ளடக்கி ஐம்புலனைச்சுட்டறுத்து / தூங்காமற்றூங்கி சுகம் பெறுவதெக்காலம்.

அகஸ்தியர் பரிபாஷை

அமைதியொடு பராபரத்தை தரிசித்தேதான் / அப்பனே லலாடத்தில் தூங்குவாயே.

பாம்பாட்டி சித்தர்

தூங்கா மற்றூங்கியே சுகம்பெறவே / தொந்தோம் தொந்தோமென்றாடாய்பாம்பே.

இவைகளை அநுசரித்தே கிறீஸ்துவானவரும் விழித்திருந்து செபம் பண்ணுங்கள், விழித்திருந்து செபம் பண்ணுங்கோளென்றுங் கூறியுள்ளார்.

அப்போஸ்தலர்களும் தங்கள் நிருபங்களில் விழித்திருங்கள், விசுவாசத்தில் நிலைத்திருங்கோளென்றும் வரைந்திருக்கின்றார்கள்.

நாதவொலி விவரம் இத்தகைய ஐம்புலன் ஒடுக்க சதாவிழிப்பின் ஜாக்கிரதையால் தசவாயுக்கள் ஒடுங்கி தசநாதங்கள் எழுவுமென்று ததாகதர் அஷ்டாங்க மார்க்க மன அமைதியில் விளக்கியிருக்கின்றார்.