பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/640

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
592/அயோத்திதாசர் சிந்தனைகள்
 


தமிழ்பாஷையிலுள்ள உண்டி யென்னும் மங்கலபொருத்தத்தில் அமுதவெழுத்தென்றும், நஞ்செழுத்தென்றுமுள்ள அட்சரங்களின் ஆதாரங் கொண்டு,

அமுதவெழுத்தால் தமிழென்றும், தீராவிடமாகும் நஞ்செழுத்தால் திராவிடமென்றும் அப்பாஷைக்குப் பெயருண்டாயிற்று.

மற்றப்படி திராவிடபாஷையை ஒருவன் துரத்தியதுங்கிடையாது. அது ஓடியதுங்கிடையாது, அதற்குக்காரணசரித்திரமுங்கிடையாது.

ஆரியரென்னும் மிலேச்சர்களை திராவிடர்களென்னுந் தமிழர்கள் துரத்தப்பட்ட சரித்திரங்களை காவியங்களால் அறிந்துக்கொள்ளுவதுடன் நாளதுவரையில் துரத்தியடித்து சாணச்சட்டி உடைப்பதை அநுபவத்திலும் அறிந்துக்கொள்ளலாம்.

பண்டைகாலம் இத்தேசத்தில் பெரும்பாலும் வழங்கிவந்த பாலி பாஷையில் அரியவேத, அரியதன்ம, அரியகுண, அரியதேவனென்னுமொழிகள் வழங்கிவந்ததாக புத்தாகமங்களால் விளங்குகின்றதன்றி ஆரியரென்னு மொழி வழங்கியது கிடையாது.

பெளத்தசாஸ்திர கலை நூற்களாலும், பெளத்த அரசர்கள் சரித்திரங்களினாலும், நீதி நூற்களினாலும், அநுபவங்களினாலும், ஆரியர்களென்னும் மிலேச்சர்கள் இத்தேசத்துளிருந்ததாக விளங்குகிறதன்றி ஆரியர்களென்னும் சிறந்தோர்கள் இருந்ததாக் வேறாதாரமுங் கிடையாது.

சிலப்பதிகாரத்துள் இல்லாத சில ஆரியரென்னு மொழிகளை அதனுட் சேர்த்து அச்சிட்டிருக்கின்றார்கள். அத்தகைய மொழிகளை சேர்க்கையில்லா முன்னூற்களையும், சேர்த்துள்ள பின்னூற்களையும் விசாரிணை வருங்கால் விளக்கக் கார்த்திருக்கின்றோம்.

ஈதன்றி தற்கால சரித்திரக்காரர்கள் எழுதுவது யாதெனில்:-

கர்னல் சைக்ஸ் என்னும் சரித்திரக்காரர் சீனர்களுடைய (ரிகார்ட்டுகளை) ஆதாரமாகக்கொண்டு பௌத்தர்களுடைய தருமங்களுக்கு முன்பு பிராமணர்களுடைய சரித்திரங்கள் யாதொன்றுங் கிடையாதென வரைந்திருக்கின்றார்.

பிஷப்மினுயஸ் என்பவர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் யாத்திரையாக வந்தகாலத்தில் இந்தியாவெங்கும் புத்ததர்மம் பரவியிருந்ததாகக் கூறுகின்றாரன்றி இந்த பிராமணர்கள் கூட்டமேனும் இவர்கள் சரித்திரங்களேனும் இருந்ததாகக் கூறவில்லை.

சீன யாத்திரைக்காரராகும் பாஹியான் என்பவர் இந்தியாவில் வந்து புத்தருடைய தன்மங்கள் யாவையும் பாலிபாஷையிலேயே எழுதிக் கொண்டு போயதாக கர்னல் ஸைக்ஸ் என்னுஞ் சரித்திரக்காரர் கூறுகின்றார். (Buddhism, Page 493.)

உலக சீர்திருத்தத்திற்கு உழைத்தவர்களின் அஸ்திகளின் பேரில் கட்டிடங்கள் கட்டியிருப்பது பழையத் தோப்புகளில் காணப்படுகிறதன்றி பிராமண குருக்களைப் பற்றியேனும், அவர்கள் சரித்திரங்களைப்பற்றியேனும் ஒன்றும் அகப்படவில்லை. (Buddhist India, Page 82.)

புத்தர்காலத்தில் ஜாதி உண்டென்று பேசுவது அதேகாலத்தில் இடலி அல்லது கிரீஸில் ஜாதி இருந்ததென்பதை ஒக்கும். ஜாதி என்பதற்கே பதமும் வார்த்தையுங் கிடையாது. (Buddhist India, Page 62.)

இத்தகைய சரித்திர ஆதாரங்களால் புத்தபிரானுக்கு முன்பு ஆரியர்களேனும் பிராமணரென்று சொல்லித்திரியுங் கூட்டத்தோரேனும் அவர்களின் வேத உபநிஷத்துக்களேனும் அவர்கள் ஜாதிகளேனும் இருந்தது கிடையாது. ஆதாரங்கள் இன்னும் வேண்டுமேல் பின்னும் எழுதக் கார்த்திருக்கின்றோம்.

- 3:2; சூன் 23, 1909 -


15. ஏழைகளின் எக்காளத்தொனி

உலகின்கண் பற்பல காண்டங்களிலுள்ள மக்களுள் ஏழைகள் யாரென்பீரேல் சோம்பேரிகளும், விவேக மற்றவர்களும் யாதொரு வித்தையும் விரும்பா வீணர்களுமே ஏழைகளாக உலாவுவார்கள்.