பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/643

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம்/595
 


பௌத்தர்களுக்குள்ள விவேகிகள் யாவரும் பொய்ப்பிராமண மதத் தோரைக் கண்டித்து அவர்களது சாதிவேஷத்திற்கும், மதவேஷத்திற்கும் உட்படாமல் விலகினின்றபடியால் அரசர்களையும், கல்வியற்றப் பெருங்குடிகளையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு வட நாட்டிலுள்ள பௌத்த விவேகிகளை சண்டாளர்களென்றும், தென்னாட்டிலுள்ள கொடுந்தமிழ் வாசிகளைத் தீயர்களென்றும், செந்தமிழ் வாசிகளை பறையரென்றும், தாழ்ந்தசாதிகளென்றும் வகுத்து அவற்றிற்கு உதவியாய் சாதி நூலையும் ஏற்படுத்திக் கொண்டு பௌத்தர்களின் மடங்களையும், அவர்களது சுயாதீன நிலைகளையும் மாறுபடுத்திவிட்டு, பௌத்தர்களை தாழ்ந்த சாதிகளென்றும் வகுத்து தலையெடுக்கவிடாமல் செய்துவந்ததுமன்றி நாளதுவரையிலுந் தலையெடுக்கவிடாமற் செய்தும் வருகின்றார்கள். ஈதன்றி பௌத்தர்களை கழுவிலுங் கற்காணங்களிலும் வதைத்துக்கொன்றதாக கொலைபாதகர்கள் புராணங்களே கூறுகின்றது.

இத்தகையக் கஷ்டங்களை பூர்வ பௌத்தர்கள் இதுவரையிலும் அநுபவித்து வந்திருப்பார்களாயின் இவர்கள் உருதோன்றியுள்ள இடங்களில் எலும்புங் காணாமல் மறைந்துபோயிருக்கும்.

புத்ததன்மச் செயல்கொண்டு இவர்கள் அடைந்திருந்த பூர்வபுண்ணிய பலத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி உயிர்ப்பிச்சைபெற்றார்கள்.

பூர்வம் புத்ததன்மத்தைத் தழுவி விவேகவிருத்தியிலிருந்தவர்களாதலின் வேஷபிராமண சத்துருக்களின் மித்திரபேதங்களால் பலவகையானும் நசிந்திருந்தபோதிலும் கருணைதங்கிய மிஷநெரிமார்கள் கலாசாலை வகுத்து கல்வி கற்பிக்க ஆரம்பித்தபோது சத்துருக்கள் தாழ்ந்த சாதியென்று கூறிவந்தபோதினும் தங்கள் பூர்வ விவேகவிருத்தியால் B.A., M.A., முதலிய கெளரதாபட்டங்களைப் பெற்றார்கள், பெற்றும் வருகின்றார்கள்.

இவற்றுள் கருணைக்கடலாய் விளங்கும் பிரிட்டிஷ் மிஷநெரிமார்கள் வடநாட்டில் சண்டாளரென்று வகுக்கப்பெற்றோர் மத்தியிலும், தென்னாட்டில் தீயரென்று வகுக்கப்பெற்றோர் மத்தியிலும் நிலையாக நின்று கல்வியை விருத்தி செய்து வந்தபடியால் மேலுமேலும் கலாவிருத்தி பெற்று சத்துருக்களை மேற்கொண்டு விட்டார்கள்.

தென்னிந்தியாவிலுள்ளப் பறையர்களென்போர் மத்தியில் நிலையாக நின்று கல்வியின் விருத்தியை செய்யாமல் சாதிக் கிறீஸ்தவர்களென்னும் டம்ப விருத்தியைக் கருதியபடியால் கிறீஸ்துமத விருத்தியுங் குறைந்து இவர்கள் கல்வி விருத்தியுமில்லாமல் திகைத்து நிற்கின்றார்கள்.

இத்தகைய திகைப்போர் அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளாதலின் இவர்கள் யாவரும் சாதிவிரோதத்திலும், சமய விரோதத்திலும் எழியநிலையடைந்து முன்னேறும் வழியற்றிருக்கின்றபடியால் புருஷோத்தம் தயாநிதிகள் யாவரேனும் இவர்களின் எழிய எக்காள தொனிக்கிறங்கி கல்வியின் விருத்தியையுங் கைத்தொழில் விருத்தியையும் அளித்து ஆதரிக்க வேண்டுகிறோம்.

- 3:10: ஆகஸ்டு 18. 1909 -


16. ஏமாற்றி திரவியம் சேகரிப்போரோர் சாதியார் ஏமார்ந்து செலவு செய்வோர் பலசாதியார்

ஏமாற்றி திரவியம் சேகரிப்போர் நூறு பெயர்களிருந்து ஏமார்ந்து செலவு செய்வோர் பத்தாயிரம் பெயரிருப்பார்களாயின் அத்தேசம் எவ்வளவு நாகரீகமும், எத்தகைய விவேக விருத்தியும், என்ன சுகமும் பெற்றிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.

அதாவது நூறு பெயர் வார்த்தையை பத்தாயிரம் பெயர் தழுவி நடப்பது எவ்வகையில் என்பீரேல், நான் தாய் தகப்பனின்றி அந்தரத்தினின்று பிறந்தவன் எனக்கு சகலரும் உதவி செய்ய வேண்டுமென்பானாயின் தாய் தகப்பனின்றி ஓர் மனிதன் பிறப்பானா அவ்வகைப் பிறப்பது ஏதேனும் அனுபவம் உண்டாவென விசாரித்தறியாமல் சொன்னவனுக்கு உதவி புரிவதே சுவாபமாகும்.