பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/647

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் / 599
 


அனாதியாயின் இந்துவென்றும், ஆரியனென்றும், சைவனென்றும், வைணவனென்றும் ஆதியாய்ப் பெயர்கள் தோற்றியக் காரணம் யாதெனில், அப்பெயர்களும் அனாதியென்பார்கள், ஆதியாய் ஓர் மனிதனின்றி அப்பெயர்கள் தோன்றுவதற்கு ஏதுவில்லையெனில் அதுவும் அனாதியினின்றே தோன்றிற்றென்பர். இல்லாததினின்று உள்ளபொருள் தோன்றுமோ, காணாததினின்று காட்சி விளங்குமோ, மலடியென்று கூறி அவளுக்கு மைந்தனுண்டென்னலாமோ அவைபோல் அனாதியென்று கூறி அதிலோர்மதந் தோன்றிற்றென்னில் அம்மதம் சகலருக்கும் சம்மதமா தம்மதமாவென்னில் சகலருக்கும் சம்மதமே என்பார்கள்.

சகலருக்கும் சம்மதமாயின் ஓர் மகமதியர் தங்களை அடுத்து உங்கள் வைணவ கடவுளே மேலானவர் சைவக்கடவுளே மேலானவர் அவரையாசித்து தொழுதற்கு தங்களை அடுத்துவந்திருக்கின்றேன் என்னையுந் தங்கட் கோவில்களினுள் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பாராயின் உங்கள் அனாதியாய மதத்தில் சேர்த்துக்கொள்ளுவீர்களோவென்றால் மதத்தை வாசித்தறிந்துக் கொள்ளும்படி செய்வோம். கோவிலுள் சேர்க்கமாட்டோமென்பார்கள். உங்கள் அனாதிமதம் கோவிலுக்குள்ளிருக்கின்றதா வெளியிலிருக்கின்றதா எனில் விழிப்பார்கள். உங்கள் அனாதி மதம் உன் சுவாமிப் பெரிது என்சுவாமி பெரிதென்னும் சண்டையிடுமோவென்னில் அதற்கும் விழிப்பார்கள்.

இத்தியாதி மொழிக்குமொழி பேதங்களாக தங்கள் தங்கள் சீவனத்திற்கு மதங்களையும், அதற்காதரவாக சாதிகளையுந் தற்காலம் ஏற்படுத்திக் கொண்டவர்களாதலின் தங்கள் மதங்களை நிலைக்கச் செய்து சீவிப்பதற்கே சாதிகளை ஆதரவாக நிலைக்கவைத்திருக்கின்றார்கள். சாதிகளெப்போது ஒழியுமோ மதங்களும் அன்றே அனாதியாக ஒழிந்துபோம் என்பது திண்ணம். மதங்களுக்கு வரம்பு சாதிகளேயாம். அச்சாதிகளே கற்பனையாயின் சாதியுள்ளோர் மதங்கள் எத்தகையத்தென்பதை எளிதில் அறிந்து கொள்ளுவீர்களாக. அவர்கள் கூறுவது போல் இந்து மதம் ஆதியற்ற அநாதிமதமாதலின் நாளுக்கு நாள் அநாதியாக வழிந்து ஆட்களும் குறைந்தே வருகின்றார்கள்.

- 3:20; அக்டோபர் 27, 1909 -


19. நாளும் கிழமையும்

வினா : பூமலிந்தோங்கும் இப்படியின்கண் பல்வேறு சமயங்கள் ஏற்படுத்திக்கொண்டு பல தெய்வங்களைக் கொண்டாடி முறண்பட்டு ஒன்றை ஒப்பாது ஒழுகு மாந்தர்கள் கிழமை 7-என்றும், 7 கிழமைக்கொண்டது ஒரு வாரமென்றும், 4-வாரங்கொண்டது ஒரு மாதமென்றும், 12-மாதம் அல்லது 365-நாள் ஒரு வருஷமென்றும், 15 நாள் கொண்டதை ஒரு பட்சமென்று ஒப்புக்கொண்டு நடக்கிறார்கள். இவைகளை மட்டும் ஒப்புக்கொண்டதின் காரணம் என்ன? இவைகளை ஆதியில் எச்சமயத்தார் கணித்தார்கள்?

சமணகுலதிலகன், மாரிகுப்பம்

விடை : தாம் வினவிய கணிதத்தை சோதிடம் பார்த்து நிமித்தங் கூறுதலென்பர். அதாவது, சோதிகள் தங்கியிருக்கும் இடபேதங்களைக் கண்டு கூறுதலுக்கு சோதிடமென்றும், அதன் காலத்தை வகுத்தலை நிமித்தம் என்றும், அதன் கணிதத்தால் செல்காலம் நிகழ்காலங்களை விளக்குதலை சாக்கை என்றும், சகலர் சுகத்தையுங் கருதிய தன்மகன்மச் செயலை வள்ளுவமென்றும் வகுத்துள்ளார்கள்.

இவற்றை அநுசரித்தே “வருநிமித்தகன் பேர் சாக்கை வள்ளுவனென்று மாகு” மென்று பின்கலை நிகண்டிலும்,

“வள்ளுவர் சாக்கையரெனும் பெயர் மன்னர்க்குள்படு கருமத்தலைவர்க்கொக்கு” மென்று முன்கலை திவாகரத்திலுங் கூறியுள்ளார்கள்.

இவற்றுள் மத்திய ஆசியா கண்டத்து சக்கிரவர்த்தியாகும் கலியனெ ன்பவர் வாகுவல்லபத்தால் கலிவாகுவென்றும், கணிதவல்லபத்தால் சாக்கையரென்னும் பெயர்பெற்று சாக்கையகுல கலிவாகு சக்கிரவர்த்தியென்னும் பெயர் பெற்றிருந்தார்.