பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/681

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் / 633
 


இத்தேசக் குடிகளின் மயக்கத்திற்கும் ஏமாறுதற்குங் காரணம் யாதெனில், சகட பாஷையாம் வடமொழியை சகலகுடிகளும் கற்று பேசுதற்கேலாது வியாரங்களிலுள்ள சமணமுநிவர்களும் பிராமண சிரேஷ்டர்களும் மட்டும் பேசவும் வாசிக்கவும் இருந்தார்கள் மற்றயக் குடிகள் யாவரும் கற்பதற்கும், பேசுதற்கும் எளிதாயுள்ள திராவிடபாஷையாம் தமிழினையே சாதித்து வந்தார்கள். அத்தகைய சாதனையில் இவ்வேஷப்பிராமணர்கள் கற்றுக்கொண்டு உளறும் வடபாஷையின் சப்த பேதமும், பொருள் பேதமும் அறியாது குடிகள் மோசம்போயதுமன்றி சிற்றரசர்களும் இவர்களது மாய்கைக்குட்பட்டு மயங்கிவருகின்றார்கள். இத்தகைய மாய்கையில் தாமும் உட்பட்டிருப்பீராயின் பூர்வ மெய்ஞ்ஞானச்செயல்களும் அதன் சாதனங்களும் அழிந்து அஞ்ஞானமே மேலும் மேலும் பெருகுமென்பதற்கு ஐயமில்லை.

இத்தேசத்திய பெளத்த தர்ம அரசர்கள் யாவரும் தமது விசாரம்போல் விசாரித்துத் தெளிவடைந்திருப்பார்களாயின் இவ்வேஷப்பிராமண மிலேச்சர்களின் வார்த்தைகளும், செயல்களும் புருசீ்கமிலேச்சர்களின் பொய் வேஷங்களென விளங்கி மெய்ஞ்ஞானபோதமாம் புத்த தன்மமின்னது அஞ்ஞான போதமாம் அபுத்ததன்ம மின்னதென ஆராய்ந்து சத்தியதன்மத்தில் நிலைத்திருப்பார்கள்.

தங்களைப்போன்ற விசாரிணையும் காமியமற்ற அரசர்களுமாய் இல்லாதபடியால் நாணமும் ஒழுக்கமுமற்ற மிலேச்சர்களின் மாய்கையினுக்கு உட்பட்டு மயங்கி தங்களையும் தங்கள்தேசக் குடிகளையும் கெடுத்துக் கொண்டதன்றி பௌத்த மடங்களுக்கும், பௌத்த மடாதிடர்களுக்கும் இடஞ்சல்களைத் தேடிவைத்துவிட்டார்கள். அத்தகைய இடஞ்சல்களால் எம்மெய்ப்போன்ற விசாரிணைப்புருஷர்கள் யாவரும் தங்கள் தங்கள் வியாரங்களையும், அதனதன் ஆதாரங்களையும் விட்டகன்று பலதேச சஞ்சாரிகளாகவும் போய்விட்ட படியால் ஆரியர்களாம் அஞ்ஞானிகளின் செல்வாக்கதிகரித்துக் கொண்டே வருகின்றது. யதார்த்த பிராமணர்கள் குறைந்து வேஷப்பிராமணர்கள் பெருகி வருவதுடன் யாதார்த்த வியாரங்களாம் அறப்பள்ளிகளின் சிறப்புகளுங் குன்றி இறந்த அரசர்களைப்போல் சிலாவுருவஞ் செய்துவைத்துள்ள இடங்களும், சிலையாலயம், சிலாலயமென வழங்கி வந்தார்கள். அம்மொழியை மாற்றி சிவாலயம் சிவாலயமென வழங்கி வருகின்றார்கள்.

ஆண்குறியும் பெண்குறியுமே சிருஷ்டிகளுக்கு ஆதாரமெனக் கூறி கற்களினால் அக்குறிகள் செய்தமைத்து சிலைலிங்கம் சிலாலிங்கமென வழங்கி அம்மொழியையே சிவாலிங்கமெனமாற்றி சிறப்பித்து மக்களுக்குக் காமியம் பெருகிக் கெடும் வழிகளையுண்டுசெய்துவருகின்றார்கள்.

ஆரியர் தங்கள் புருசீக தேசபாஷையை மறந்து சகடபாஷையாம் வடமொழியைப் பேசுவதற்கு ஆரம்பித்துக்கொண்டபடியால் பெளத்த வியாரங்களில் தங்கியுள்ள யதார்த்தபிராமணர்களால் வழங்கிவரும் வடமொழியென்றெண்ணி தங்களுக்குள்ளெழுஞ் சந்தேகங்களைத் தாங்களடுத்துள்ள வேஷப்பிராமணர்களை வினவுவதால் அவர்களுக்கு உலகவிவகார மொழிகளே தெள்ளற விளங்காதவர்களாதலின் வடமொழியுள் ஞானவிளக்க மொழிகளை கண்டுரைக்க யேலாது மிக்கத்தெரிந்தவர்கள்போல் ஏழைமக்களுக்கு மாறுபடு பொருளற்ற மொழிகளைப் புகட்டி பொய்யை மெய்யெனக்கூறி பொருள் பறித்துத் தின்று வருகின்றார்கள்.

அவை யாதெனில்: அறவாழி அந்தணனாம் புத்தபிரானால் ஆதியில் போதித்துள்ள “செளபபாபஸ்ஸ அகரணங், குஸலஸ வுபசம்பதா, சசித்த பரியோதபனங், யேதங் புத்தானசாசன” மெனு முப்பீட வாக்கியத்தை மகடபாஷையில் முச்சுருதிமொழியென்றும், முப்பேத மொழியென்றும், முவ்வேத மொழியென்றும், மூவருமொழியென்றும், திரிசுருதி வாக்கியமென்றும், திரிமந்திர வாக்கியமென்றும் வழங்கி வந்த மும்மொழியும்,