பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/705

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் / 657
 

எங்கிருக்கின்றான் என்றான். அதைக்கேட்ட பிரபவகாதன் தூணிலுமிருப்பான், துரும்பிலு மிருப்பானென்று பெருங் கூச்சலிட்டான். அக்கால் தூணில் மறைந்து சிம்மத்தோலை தலையில் போர்த்திருந்த ஆரிய வேஷப்பிராமணன் திடீரென எழுந்து நிராயுதபாணியாயிருந்த அரசனை தன் கைவல்லியத்தால் வயிற்றைக் கிழித்துக் கொன்றுவிட்டு வெளியோடி விட்டான்.

பெரும் அரவங் கேட்ட அரச அங்கத்தவர்கள் யாவரும் ஓடிவந்து பார்க்குங்கால் அரசன் பிரேதமாகக் கிடக்கவும் அருகி நிற்கும் மைந்தன் யாதொன்றும் தோன்றாமல் திகைக்கவுங் கண்டவர்கள், அரசனைக் கொன்றவர்கள் யாரென்று கேழ்க்குங்கால் மனிதரூபமாக ஓர் சிம்மம் வந்து கொன்றுவிட்டதென்று கண்டவர்கள் கூச்சலிட்டலற பிரபவகாதனும் அவ்வகைசொல்ல ஆரம்பித்தான்.

அவற்றைக் கேட்ட விவேகிகள் மனிதனைப்போன்ற சிம்மமும் உலகத்திலுண்டோவென விசாரித்ததுடன் பிரபவகாதனையும் சரிவர விசாரிக்க ஆரம்பித்தார்கள். பிதா இறந்தபின் ஆரிய வேஷப்பிராமணர்களால் நடந்துவந்த சங்கதிகள் யாவற்றையும் சொல்லும்படி ஆரம்பித்ததின்பேரில் மந்திரிப் பிரதானிகளுக்கும், சமணமுநிவர்களுக்கும் சந்தேகம் தோன்றி அவ்விடம் வந்து குடியேறியுள்ள ஆரிய வேஷப்பிராமணர்கள் யாவரையுந்தருவித்து வஞ்சினத்தால் அரசனைக் கொன்றவர்கள் யாரென விசாரித்தார்கள்.

அவற்றை வினவிய ஆரியர்கள், தாங்களும் அரசனது மரணத்திற்காகத் துக்கிப்பதுபோல் மிக்கத் துக்கித்து நாங்கள் இவ்விடம் வந்தபோது சில பெரியோர்கள் நாராயணனும், நரசிம்மனும் ஒன்றே யென்று சிந்தித்துக் கொண்டதுமன்றி எங்களையும் சிந்திக்கும்படி செய்துவிட்டுப்போனார்கள். அவ்வகையில் யாங்கள் சிந்தித்திருக்கும்போது அரசபுத்திரனும் அவ்விடம் வருவதுண்டு. யாங்களும் அவற்றை சொல்லும்படி செய்வதுண்டு. அரசனுக்கு ஏதோ குலதெய்வ தோஷத்தால் இத்தகைய மரணம் நேரிட்டிருக்குமேயன்றி மற்றொருவராலும் நேர்ந்திருக்க மாட்டாதென்று கூறியவுடன் சமணமுநிவர்கள் பகவனது சகஸ்திர நாமங்களை ஆராய்ந்து அசோதரையாம் மலையரசன் புத்திரி பகவனை நாரசிம்மமென்றழைத்த ஓர் பெயருண்டு. ஆயினும் அகிம்சா தன்மத்தை போதித்த அறவாழியான் இத்தகையச் செயலைச் செய்வரோ ஒருக்காலுஞ் செய்யமாட்டார். இவைகள் யாவும் ஆரிய வேஷப்பிராமணர்களின் மித்திரபேதமேயென்று முடிவுசெய்தார்கள்.

அத்தகைய முடிவிற்குப் பகரமாய் வேவுகரில் ஒருவன் ஓடிவந்து சமணமுநிவரை வணங்கி தேவரீர் இதோ நிற்குங் கூட்டத்தோரில் ஒருவன் மாலையில் வந்து அரசனிடம் போகவேண்டுமென்று கேட்டான். நான் வெளியிற்போகும் சமயமானபடியால் போகலாமென்று சொல்லிவிட்டுப் போகும்போது அவன் அக்குளில் ஏதோ ஓர் மூட்டையுள்ளதைக் கண்டேன், அது யாதென்றறியேன், ஆயினும் அவனை மட்டும் எனக்குத் தெரியுமென்றான்.

சமணமுநிவர் மந்திரிக்குத் தெரிவித்து மந்திரியும் வேவுகர்களை விடுத்து அவனைப் பிடிப்பதற்குமுன் ஊரைவிட்டோடிப் போய்விட்டான். அதன்பின்னர் அரசவங்கத்தவர் யாவரும் ஒன்றுகூடி நூதனமாய் இவ்விடங் குடியேறியுள்ளக் கூட்டத்தோரை துரத்திவிடவேண்டுமென்று ஆலோசித்து ஆரிய வேஷப் பிராமணர்கள் யாவரையும் அத்தேசத்தைவிட்டு துரத்திவிட்டார்கள். இவர்களும் ஒவ்வோர் சிறுமலைகளைக் கடந்து சிற்றூர்களை அடைவதும், அடர்ந்த காடுகளைக் கடந்து மறுதேசங்களைச் சேர்வதுமாகியக் கஷ்டங்கள் அதிகமாயிருக்கினும் வஞ்சித்தும், பொய் சொல்லியும் பொருள்பறித்து தின்றுவந்த சுகங்களானது அந்தந்த தேசங்களைவிட்டு அகல்வதற்கு மனமிராது அங்கங்குள்ள விவேகமிகுத்தக் கூட்டத்தோர்களை அழிக்கவும் துன்பப்படுத்தவுமானச் செயலையே முன்கொண்டு தங்களை வேஷப்பிராமணர்களென்று தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் பறைகிறவர்களென்று கூறவும் அவர்களைத் தலையெடுக்க விடாமல் நசித்து தங்கள் வேஷப்பிராமணத்தை விருத்திச் செய்து வருவதே அவர்களேதுவாயிருந்தது.