பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/713

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் / 665
 

போல் வரைந்து சிந்தாவிளக்கென்னும் அம்மனின் சோதியை மத்தியில் வரைந்து சத்தியசங்கத்தை சங்குபோல் வரைந்து தன்மச்சக்கரத்தை சக்கரம்போல் வரைந்து அம்முக்குறிகளாம் சின்னங்களே விட்டுணுவின் சின்னங்களெனக்கூறி விட்டுணுசமயமென்னும் ஓர் கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டான். பதுமநிதி, தன்ம நிதி, சங்கநிதியாம் புத்த, தன்ம, சங்க மும் மணிகளையே இரண்டாவது சமயத்திற்கோரடிப்படையாக்கிக்கொண்டார்கள்.

ஆரிய வேஷப்பிராமணர்கள் புருசீகதேசத்தினின்று இவ்விடம் வந்து குடியேறி யாசகசீவனஞ்செய்து பிழைப்பதுடன் பௌத்த சரித்திரங்களையும் செயல்களையுமே பீடமாகக்கொண்டு சிவசமயமென்றும், விட்டுணு சமயமென்றும் அவரவர்கள் மனம்போனவாறு பெளத்த தன்மத்தைக் குறைத்துங் கூட்டியும் வரைந்துவைத்துக் கொண்டுள்ளவற்றை விவேக மிகுத்தோர் அச்சமயசார்புக்குப் பராயர்களாயிருந்துக் கண்டித்துக்கொண்டேவரவும், கல்வியற்றக் குடிகளுங் காமியமுற்ற அரசர்களும் பௌத்தமதத்தைச் சார்ந்தப் பெயர்களையும் அதனதன் செல்களையுங் கேட்டவுடன் இஃது யதார்த்த பௌத்ததன்மமென நம்பி ஆடு கசாயிக்காரனை நம்பிப் பின்னோடுவதுபோல் இத்தேசப் பூர்வக்குடிகள் வேஷப்பிராமணர்களின் போதத்தை மெய்யென நம்பி அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துக்கொண்டார்கள்.

இத்தகைய மதக்கடைப் பரப்பி சீவிக்கும் ஆரிய வேஷப்பிராமணர்களும், திராவிட வேஷப்பிராமணர்களும், மராஷ்டக வேஷப்பிராமணர்களும், கன்னட வேஷப்பிராமணர்களும், ஆந்திர வேஷப்பிராமணர்களும், வங்காள வேஷப்பிராமணர்களும், பப்பிர வேஷப்பிராமணர்களும், தேகவுழைப்பின்றி கஷ்டப்படாத சோம்பேறிசீவனங்கொண்டு நாளுக்குநாள் பெருகிவிட்ட படியாலும், அவர்களது பொய்ப் போதங்களை மெய்யென நம்பித் திரியும் கல்வியற்றக் குடிகளும், காமியமுற்ற சிற்றரசர்களும், பெருகிவிட்டபடியாலும், பெளத்த உபாசகர்களாம் மேன்மக்களின் மெய்ப்போதங்கள் மயங்கியதுடன் சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்றும், கீழ்மக்களாகவும் பாவிக்கநேர்ந்துவிட்டது. சாதுசங்கங்கள் பாழ்படவும், சமண முநிவர்கள் நிலைகுலையவும், சத்தியதன்மம் அழிந்து அசத்தியர்களும் அசப்பியர்களும் துன்மார்க்கர்களும் பரவிவிட்டார்கள்.

இத்தகைய துன்மார்க்கர்கள் பரவி சன்மார்க்க சங்கங்களும் நிலைகுலைந்ததன்றி அறப்பள்ளிகளில் சிறுவர்களுக்குப் போதித்துவந்த கல்விசாலைகளும் அழிந்து கைத்தொழில் விருத்தியும் ஒழிந்து நூதனசாதிபேதச் செயல்களால் ஒற்றுமெக்கேடே மிகுந்து சமயபோராட்டத்தால் சாமி சண்டைகளே மலிந்துவருங்கால் மகமதிய துரைத்தனம் வந்து தோன்றிவிட்டது.

இந்திரர்தேய வடபாகத்தில் வந்து குடியேறிய மகமதிய அரசர்களுக் குள்ளும், புருசீகதேச வேஷப்பிராமணர்களே பிரவேசித்து அவர்களுக்கு வேண ஏவல்புரிந்தும் இத்தேசத்தின் போக்குவருத்துகளை உரைத்தும் தங்களுக்குரிய சிற்றரசர்களை நேசிக்கச்செய்தும் தங்களுக்கு எதிரிகளாயுள்ள பௌத்த அரசர்களையும் விவேகமிகுத்தக் குடிகளையும் பெருஞ் சங்கங்களாயிருந்த சமண முனிவர்களின் கூட்டங்களையும் அழிக்கத்தக்க ஏதுக்களைத் தேடிவிட்டார்கள்.

அதாவது சமணமுனிவர்களின் கூட்டத்தோர்கள் யாவரும் ஒரே மஞ்சள் வருண ஆடைகளைக் கட்டிக்கொண்டு சிரமொட்டையாயிருந்த படியால் மகமதியர்களுக்கு ஈதோர் படை வகுப்பென்று கூறி அவர்களுக்குக் கோபத்தை மூட்டிவைத்துக்கொல்லும் வழியைச் செய்து அந்தந்த அறப்பள்ளிகளில் தாங்கள் நுழைந்து சிலைகளையே தெய்வமெனத் தொழும்வழியாம் மதக்கடைகளைப் பரப்பிப் பொருள்பறித்து சீவிக்கும் வழிகளை உண்டு செய்து வருங்கால் சண்டாளர்களென்றும், தீயர்களென்றும், பறையர்களென்றும், தாழ்த்தப்பட்டுள்ள விவேகமிகுத்த மேன்மக்கள் யாவரும் முயன்று கல்லுகளையும் கட்டைகளையும் தெய்வமென்று தொழுவது அஞ்ஞானமென்றும், அத்தகையத் தொழுகையால் கல்லைத் தொழூஉங் கர்ம்மமே கனகன்மமாக முடியுமென்றும்